இலங்கைத்தமிழர் பிரச்சனையில் திரு கலைஞர் கருணாநிதி அவர்களிற்கு இருக்கும் அனுபவம் இந்தியாவிலேயே எவருக்கும் இல்லை
70ம் ஆண்டிற்கு முன்பு இருந்தே இலங்கையில் இனக்கலவரம் நடந்த போதெல்லாம் திரு. கருணாநிதியின் ஆதரவுக்குரலே முதலில் ஒலிக்கும் அதன்பின்பு தான் மத்திய அரசே செயற்படத் தொடங்கும். கருணாநிதியின் குரல் ஓங்கி ஒலிக்கும் போதெல்லாம் அது இலங்கைத்தமிழரின் காதுகளில் தேனாகவும், இலங்கை அரசின் காதுகளில் ஈட்டியாகவும் பாய்ந்த காலம் ஒன்று உண்டு.
இவையெல்லாம் ராமதாசிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1983 இனக்கலவரத்தின் போது நாமெல்லாம் இந்தியா வந்த போது ராமதாஸ், திருமாவளவன் அரசியலிலேயே இருக்கவில்லை. இடதுசாரிக் கட்சிகள் இலங்கையிலுள்ள இடதுசாரிகளின் சொற்கேட்டு சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழவேண்டியதுதானே எதற்கு தேவையில்லாமல் பிரச்சனை செய்கின்றீர்கள் என்று இலங்கைத்தமிழர்களைப் பார்த்துக் கேட்டவர்கள்.
வைகோ எம்முடன் கதைக்கும்போது நன்றாகத் தமிழ் கதைக்கின்றீர்களே சின்ன வயதில் இருந்தே தமிழ் படித்தீர்களா? ஏன்று அப்பாவித்தனமாகக் கேட்பார். அதாவது இலங்கையிலுள்ளவர்கள் எல்லோரும் சிங்களவர்கள் என்றும் சிலர் மட்டும் தமிழ் தெரிந்த சிங்களவர்கள் என்றும்தான் இவர்களில் பலர் இலங்கைத்தமிழரைப் பற்றி அப்போது நினைத்திருந்தது.
நெடுமாறனை 82ம் ஆண்டு அமெரிக்காவிற்கு ஒரு கருத்தரங்கிற்காக இலங்கைத் தமிழர்கள் அழைத்திருந்தார்கள். அதுவரையிலும் இலங்கைத் தமிழரைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருந்த நெடுமாறன் சில தமிழர்களின் வளமான வாழ்வைத் தெரிந்து கொண்டு இலங்கைத் தமிழருக்கு ஆதரவு அளிக்கத் தொடங்கிவிட்டார். ஆனால் அப்போதும் அவர் புலிகளின் ஆதரவாளராக இருக்கவில்லை.
அப்போது உமாவா பிரபாவா பெரிது என்று இருந்த காலம். முடிவெடுப்பது பலருக்கு கடினமாக இருந்தது. 83ம் ஆண்டு ஜப்பசி மாதம் நான் நெடுமாறனை சந்தித்த போது அவர் பிரபாகரனை கடுமையாக விர்சித்தார். அப்போதே பிரபாகரன் இரண்டு கார்களிலேதான் வெளியே செல்வது வழக்கம். பாதுகாப்பிற்கு ஒரு கார், பயணத்திற்கு ஒரு கார். அப்போது அமைச்சராக இருந்த ராசாராம் அவர்களின் வீட்டிற்கு முன்னால் உள்ள வீடொன்றில் மாதம் 5000 ருபா வாடகை செலுத்திக் குடியிருந்தார். அங்கு அப்போதே குளிர்சானப்பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, தொலைபேசி போன்ற சகல வசதிகளும் இருந்தன. அங்கு தான் அவர் மதிவதனியை முதல்முதலாகப் பார்த்துக் காதல் கொண்டது. இந்த விடயங்கள் நெடுமாறனுக்கு அப்போது தெரிந்திருந்தது. ஆனால் நெடுமாறனுக்கு இவைகள் அப்போது பிடிக்கவில்லை. அவர் என்னிடம் இவைபற்றிக்கூறி ஒரு போராளிபோல் கஸ்ட்டமான வாழ்க்கை வாழாமல் தமிழ்நாட்டுத் தலைவர்களை விட பந்தாவாக இருக்கின்றாரே என்று குறைபட்டுக்கொண்டார்.
83ம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்பு தான் வீரமணி புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. சிறீசபாரட்டினம், பத்மநாபா, பாலகுமார் ஆகியோர் இணைந்து ஜக்கிய முன்னணி உருவாக்கியபோது கலைஞருடன் சோந்து புகைப்படம் எடுக்கச் சென்றிருந்தனர். அப்போது கலைஞர் வீரமணி தன்னுடன் இருந்தால் நல்லது என நினைத்து அவரிற்கு அழைப்பு விடுத்தார். (அப்போது நான் அங்கேயிருந்ததால் ) என்னிடம் வீரமணியின் இலக்கத்தைத் தந்து தான் கூறியதாகக் கூறி அவரை வரும்படி அழைத்தார். அப்போது வீரமணி தான் வேறு முக்கிய வேலையாக இருப்பதால் தன்னால் வரமுடியாது என்று மறுத்துவிட்டார். கலைஞரின் வேண்டுகோளையே மறுக்குமளவிற்கு அப்போது அவர் புலிகளுடன் ஜக்கியமாகியிருந்தார்.
இலங்கைத்தமிழர் அரசியல் தொடர்பாக கலைஞரின் செயற்பாடுகளில் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் ராமதாஸ், வைகோ, வீரமணி, தா.பாண்டியன், திருமாவளவன்களை விட பல சகாப்தங்கள் முன்பே இலங்கைத்தமிழர்கள்பால் அக்கறை கொண்டவர் என்பது சரித்திரத்தில் பதியப்பட்ட உண்மை. இந்த இடத்தில் சரித்திரத்தில் மறக்கப்பட்ட வேறு சிலரையும் நினைவு கூருவது முக்கியம். திரு. ஜனார்த்தனம், திரு. பாவரசு, திரு. ஆரண முறுவல், திரு. வள்ளிநாயகம், திரு. சேஷாஸ்த்திரி மற்றும் நினைவை விட்டு மறைந்து போன சிலர்.
- தினமலர்
0 விமர்சனங்கள்:
Post a Comment