புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல்: ஐ.நா.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட மூன்று ஆட்லறித் தாக்குதல்களில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டிருப்பதாக கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து கொல்லப்பட்டவர்களின் சடலங்களை மீட்பதற்கு பணியாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கியதாக கோர்டன் வெய்ஸ், அல்ஜெசீரா செய்திச் சேவைக்குக் கூறினார்.
நேற்று நள்ளிரவும் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், யார் இந்தத் தாக்குதல்களை நடத்தினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லையென்று அவர் தெரிவித்தார்.
சர்வதேச சட்டத்துக்கு அமைய பொதுமக்கள் பாதுகாக்காப்பட வேண்டும். ஆனால் தொடர்ந்தும் நடைபெறும் மோதல்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்” என கோர்டன் வெய்ஸ் அல்ஜெசீராவுக்குக் கூறினார்.
அதிர்ச்சியடைகிறோம்
இதேவேளை, புதுக்குடியிருப்பு வைத்தியசாலைமீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தாம் அதிர்ச்சியடைவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பு அலுவலகத்தைச் சேர்ந்த பவுல் கஸ்ரெலா தெரிவித்துள்ளார்.
“பாதிக்கப்பட்ட மற்றும் காயமடைந்தவர்கள், வைத்திய அதிகாரிகள், வைத்திய உதவிகள் போன்றன சர்வதேச சட்டத்துக்கு அமைய பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறான சூழ்நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த வைத்தியசாலையில் 500ற்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் மேலதிக சிகிச்சைக்காக அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டிருந்தனர்” என அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களை இடம்மாற்றுவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், வைத்தியசாலைப் பணியாளர்களுக்கு உதவிவருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment