இந்தியா தலையிட கனடா வலியுறுத்தல்
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா உடனடியாக தலையிட வேண்டும். அங்கு அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கனடா நாட்டு வெளியுறவு அமைச்சர் லாரன்ஸ் கேனான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதற்கு ஐ.நா. சபை, பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் அதை இலங்கை கண்டு கொள்வதாக இல்லை.
இந்த நிலையில், உடனடியாக இப்பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும், இலங்கை அரசுடன் பேசி அப்பாவிகளைக் கொல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கனடா கோரியுள்ளது.
இதுதொடர்பாக கனடா வெளியுறவு அமைச்சர் லாரன்ஸ் கேனான், மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அவசரமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த கோரிக்கையை விடுத்தார்.
அப்போது பிரணாப் முகர்ஜி, கேனானிடம் கூறுகையில், இலங்கையின் வட பகுதியில் உள்ள மக்களின் நிலை குறித்து இந்தியா தொடர்ந்து கவலையுடன் உள்ளது.
அப்பாவி மக்களின் பாதுகாப்பு முக்கியமானது என்பதை இலங்கைக்கு ஏற்கனவே இந்தியா எடுத்துக் கூறியுள்ளது. மேலும், இடம் பெயர்ந்த அகதிகள் தொடர்ந்து தாக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் எவ்வளவு விரைவில் அதிகாரப்பகிர்வுத் திட்டத்தை அமல்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அதுதான் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்றார் முகர்ஜி.
மத்திய வெளியுறவு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அப்பாவிகள் பலியாகி வருவது குறித்து கனடாவிலிருந்து அந்நாட்டு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை தொடர்பு கொண்டு பேசிய அதே வேளையில், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்தை முகர்ஜி தொடர்பு கொண்டு, அங்கு காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மக்களை மீட்கவும், மேலும் தேவைப்படும் பிற உதவிகளையும் செய்ய இந்திய அரசு தயாராக இருப்பதாகவும் ஆஸ்திரேலியாவுக்கு உறுதியளித்தார் பிரணாப் முகர்ஜி.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment