வன்னியில் தொடரும் கொடூரம்: குழந்தைகள் உள்பட 101 தமிழர்கள் படுகொலை
வன்னி: வன்னியில் இரக்கமற்ற தாக்குதலை இலங்கைப் படைகள் நிறுத்துவது போலத் தெரியவில்லை. நேற்று நடந்த அகோரத் தாக்குதலில் கைக்குழந்தைகள், சிறுவர்கள் உள்பட 101 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 125க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், அம்பவலன்பொக்கணை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இலங்கைப் படையினர் ஆர்ட்டில்லரி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
மாத்தளன் பகுதியில் அதிகளவில் எறிகணை, துப்பாக்கிச் சூடு மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல் போன்றவற்றை இலங்கைப் படையினர் நடத்தியுள்ளனர்.
இதில் 25 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அம்பலவன்பொக்கணையில் 18 தமிழர்களும் வலைஞர்மடத்தில் 11 தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளையில் வலைஞர்மடத்தில் சிறிலங்கா படையினரின் தொலைதூர துப்பாக்கிச் சூட்டு ரவை தாக்கியதில் தமிழர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் 4 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணையில் உள்ள பச்சைப்புல்மோட்டைப் பகுதிகளில் இலங்கை போர் விமானங்கள் 15 தடவை குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இதில் கைக்குழந்தைகளும் சிறுவர்களுமாக 17 பேர் உட்பட 41 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
புதுமாத்தளன் மருத்துவமனையும் நேற்று படையினரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இதில் மருத்துவமனைப் பணியாளர், தமிழர் புனர்வாழ்வுக்கழக தொண்டர், நோயாளி உட்பட 3 பேர் காயமடைந்தனர். மருத்துவமனை வளாகத்தில் 48 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
புதுமாத்தளன் மருத்துவமனை வாசலுக்குள் படையினரின் ஆர்பிஜி உந்துகணைகள் வீழ்ந்து வெடித்ததில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேவேளையில் புதுமாத்தளன் மருத்துவமனைக்கு முன்பாக நேற்று பிற்பகல் 4.45 மணியளவில்சிறிலங்கா படையினர் வீசிய எறிகணை வீழ்ந்து வெடித்ததில், 15 பேர் காயமடைந்தனர்.
மாலை 5.30 மணிக்கு மீண்டும் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிறுவன் ஒருவன் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கைப் படையின் நேற்றைய தாக்குதல்களில் மட்டும் 125-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
விமானம் போட்ட குண்டு ஒன்று பெண்ணின் வயிற்றை துளைத்துக் கொண்டு வெடிக்காமலேயே வெளியே வந்து கிடந்தது. இந்த நிலையிலும் அந்த பெண் உயிரிழக்கவில்லை. வேதனையில் துடித்தபடி தவித்த காட்சி இரும்பு மனம் படைத்தவர்களையும் நிலை குலைய வைக்கும்.
இடைவிடாது நடந்த குண்டு வீச்சினால் மக்கள் பதுங்கு குழிகளிலேயே முடங்கி கிடந்தனர். அவர்கள் வெளியே வரமுடியாததால் குண்டுவீச்சில் பலியானவர்களை எடுத்து சென்று அடக்கம் செய்ய முடியாமல் உடல்கள் தெருக்களில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. காயம் அடைந்தவர்களும் சிகிச்சைக்கு எடுத்து செல்லப்படாமல் குற்றுயிரும் குலையுருமாக கிடந்தனர்.
நேற்று முன்தினம்தான், வன்னிப் பகுதியில், 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
உதயன் அலுவலகம் மீது கையெறி குண்டு வீச்சு ..
இதற்கிடையே, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்' நாளிதழ் அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை அடையாளம் தெரியாத குழுவினரால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் படுகாயமடைந்தார். அலுவலகக் கட்டடத்துக்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணம் கஸ்துரியார் வீதியில் 'உதயன்' அலுவலகம் அமைந்திருக்கின்றது.
இன்று அதிகாலை 12.30 மணியளவில் திடீரென அங்கு வந்த கும்பல் ஒன்று கையெறி குண்டுகளை வீசிச் சென்றது.
உதயன் அலுவலகத்தின் மீது சில வருடங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டதில் நான்கு பேர் பலியானார்கள். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ஆனால் காவலையும் மீறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஆசிரியர் குழுவினர் இருக்கும் பகுதியை நோக்கி கையெறி குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
அலுவலக ஊழியர்கள் யாரும் இதில் காயமடையவில்லை. ஆனால் பாதுகாவலர் ஒருவர் மட்டும் காயமடைந்தார்.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment