இலங்கை: பொறுத்திருந்து பார்ப்போம்-மன்மோகன்
டெல்லி: தமிழர்களின் முழு திருப்திக்கு ஏற்ப அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதி அளித்திருக்கிறார்.
இதற்கான நடவடிக்கைகளை அவர் துவங்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறார். என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டும். தற்காலிக போர் நிறுத்தத்தையாவது மேற்கொள்ள வேண்டும் என இலங்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் மன்மோகன் சிங். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து தாங்கள் கடந்த மாதம் 22-ந் தேதி எழுதிய கடிதம் என்னை மிகவும் பாதித்தது.
இலங்கையில் நடந்து வரும் சண்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் துரதிருஷ்டவசமாக தங்கள் உயிர்களை இழந்து வருவது வேதனையை அளிப்பதாகவும், சண்டைப் பகுதிக்கு வெளியில் தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமை குறித்தும் தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.
இதுதொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் பல்வேறு மட்டத்தில் தொடர்ந்து பேசி வருகிறோம்.
நமது வெளியுறவுச் செயலாளர் அண்மையில் கொழும்பு சென்று அந்நாட்டு வெளியுறவு செயலாளர், பாதுகாப்பு செயலாளர், இலங்கை அதிபரின் செயலாளர் ஆகியோரை சந்தித்து பேசினார். இலங்கை அதிபரையும் அவர் சந்தித்தார். அப்போது தமிழர்கள் படும் அவதி குறித்த நமது கவலையை அவர் தெளிவாக விளக்கினார்.
தமிழர்களின் பாதுகாப்பு, மருத்துவ வசதிக்காக கள மருத்துவமனை அமைப்பது உள்ளிட்ட யோசனைகளையும் அவர் தெரிவித்துள்ளார். இதனை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டது. அதன்படி சண்டைப் பகுதியிலிருந்து வெளியேறும் மக்களுக்காக களமருத்துவ மனை ஒன்றும் அமைக்கப்பட்டு, அது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இலங்கை அரசுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளில் அப்பாவித் தமிழ் மக்கள் போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு வசதியாக தற்காலிக போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
பாதுகாப்பு வளைய பகுதிகளில் மறுவாழ்வு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நமது வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இதுதொடர்பாக கடந்த மாதம் 28-ந் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இதர மக்களுக்கு இணையாக உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என்றும், தமிழர் வசிக்கும் பகுதிகளில் சம உரிமை அளிக்கும் வகையில் அதிகாரங்களை பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றும் இலங்கை அரசை வலியுறுத்தியிருக்கிறோம். இதனை இலங்கை அதி பரும் ஏற்றுக்கொண்டு தமிழர்களின் முழு திருப்திக்கு ஏற்ப அதிகாரத்தை பகிர்ந்தளிக்க உறுதி அளித்திருக்கிறார்.
பொறுத்திருந்து பார்ப்போம் ...
இதற்கான நடவடிக்கைகளை அவர் துவங்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறார். என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தாங்கள் பூரண நலமடைந்து வருகிறீர்கள் என்று நம்புகிறேன். உங்களது சேவைகள் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் மேலும் பல ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும்.
அண்மையில் நடந்த அறுவை சிகிச்சைக்குப்பின்பு நானும் எனது பணிகளை தொடங்கியிருக்கிறேன் என்று கூறியுள்ளார் மன்மோகன் சிங்.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment