கொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் சகோதரர் கடத்தல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க வருமாறு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்து 24 மணி நேரத்தில் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் சகோதரரான 33 வயதுடைய செல்வராஜா ரவீந்திரன் கொழும்பில் வெள்ளை வானில் வந்த ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக புவியியல் விரிவுரையாளரான செல்வராஜா ரவீந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுதிகள் அமைந்துள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயமான மாதிவெல பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4:30 நிமிடமளவில் கடத்தப்பட்டதாக யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்கின்றது.
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான மாதிவெலவில் உள்ள தனது சகோதரரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் விடுதியில் தங்கியிருந்து செல்வராஜா ரவீந்திரன் பட்டப் பின் படிப்பை மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் கற்று வந்தார்.
சம்பவ நாள் வேறு அலுவல் ஒன்றிற்காக வெளியே சென்றபோது அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள குறுக்கு வீதி ஒன்றில் வழிமறித்த சிறிலங்கா காவல்துறையினர் அவரை சோதனையிட்டனர்.
அதனை அடுத்து சில நிமிட நேரத்தில் வெள்ளை வானில் குறித்த வீதியால் வந்த அயுதம் தரித்த நபர்கள் செல்வராஜா ரவீந்திரனை வழிமறித்து பலவந்தமாக வெள்ளை வானில் ஏற்றிச் சென்றனர் என்று நேரில் கண்டவர்கள் கூறியதாக யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளையில் செல்வராஜா ரவீந்திரன் பயணம் செய்த உந்துருளி சம்பவ இடத்தில் விழுந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளையில் இந்த கடத்தல் தொடர்பில் மாதிவெல காவல்துறையிடம் முறையிடப்பட்டுள்ளது என்றும் ஆனாலும் செல்வராஜா ரவீந்திரன் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை எனவும் மாதிவெல விடுதியில் தங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
Puthinam
0 விமர்சனங்கள்:
Post a Comment