13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்வதாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம்
இனப்பிரச்சினைக்கு தீர்வாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின்படி அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்துவருகின்றது. 13 ஆவது திரு த்தத்தை தாண்டி அதிகாரப்பகிர்வுக்கு நாம் செல்லவேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறவேண்டும்.
அல்லது சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டியேற்படும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
எப்படியிருப்பினும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப்பகிர்வு முறைமைக்கு செல்ல முன்னர் பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும். அதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். யுத்தத்தினால் இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்றும் அதிகாரப்பகிர்வில் அமைந்த அரசியல் தீர்வுக்கு செல்லவேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறியதாவது இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கூற்றுடன் எமக்கு உடன்பாடு உள்ளது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம். அதற்காகவே சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினர் அரசியல் தீர்வு தொடர்பில் ஆராய்ந்துவருகின்றனர்.
ஆனால் அதற்கு முன்னர் பயங்கரவாதம் தோற்கடிக்கப்படவேண்டும். அதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. முக்கியமாக பொது மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் இல்லாமல் பயங்கரவாதத்தை தோற்கடித்து அப்பகுதிகளில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே எமது நோக்கமாகும். இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் அதிகாரப்பகிர்வு குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார். அந்த கூற்றுடனும் நாம் உடன்படுகின்றோம். அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அதிகாரப்பகிர்வை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது. ஆனால் 13 ஆவது திருத்தச் சட்டத்தை தாண்டி செல்லவேண்டுமானால் நாங்கள் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறவேண்டியுள்ளது. அல்லது சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டிவரும். இவற்றில் எதனையும் செய்யாமல் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் செல்ல முடியாது. காரணம் அரசியலமைப்பில் மாற்றம் செய்யவேண்டிவரும். அவ்வாறான சந்தர்ப்பம் ஒன்று வரும்போது எமக்கு முன்பாக இரண்டு தெரிவுகள் இருக்கும். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் எந்த தெரிவை மேற்கொள்வது என்பது தொடர்பில் ஆராய முடியும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment