தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் மக்கள் பாவனைக்காக ஏ9 வீதியை திறக்க முடியும்-பிரான்ஸ், ஆ.அ. வங்கி உதவி வழங்க தயார் என்கிறார் அமைச்சர்
ஏ9 வீதியை எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் பொது மக்களின் பாவனைக்காக திறந்துவிட முடியும் என எதிர்பார்க்கின்றோம்.
அதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்தார். ஏ9 வீதியை புனரமைக்க பிரா ன்ஸ் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளன என்றும் அமைச்சர் மேலும் கூறினார். ஏ9 வீதி மக்கள் பாவனைக்காக எப்போது திறக்கப்படும் ? என்று வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அமைச்சர் மேலும் கூறியதாவது ஏ9 வீதியை எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் மக்களின் பாவனைக்காக திறப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தற்போதைய நிலைமையில் பாதையின் இரு மருங்கிலும் 5 மீற்றர் தூரத்துக்கு நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இது தொடர்பான அறிக்கை பாதுகாப்பு அமைச்சிலிருந்து கிடைக்கபெற்றதும் வீதியை திறப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம். ஆனால் இதுவரை பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை கிடைக்கவில்லை. இந்த வீதி இராணுவ போக்குவரத்துக்காக அண்மையில் திறக்கப்பட்டது. இது அபிவிருத்தி அதிகாரசபையின் கிழ் வருகின்ற வீதியாகும். இந்நிலையில் வீதியின் குறிப்பிட்ட பிரதேசங்களில் பெயர்ப்பலகைகள் அமைக்கப்படும். இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இதேவேளை ஏ9 வீதியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதற்காக வெளிநாட்டு உதவிகள் கிடைக்கவுள்ளன. இவ்விடயம் தொடர்பில் உதவிகளை வழங்குவதற்கு பிரான்ஸ் தூதுவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அது தொடர்பான நடவடிக்கைகள் முறைப்படி இடம்பெறும். அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கியும் நிதி உதவி செய்வதற்கு முன்வந்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment