உறவற்ற 24 வயது இளைஞர்களுடன் வசித்த 75 வயது பாட்டிக்கு 40 கசையடிகள்
தன்னுடைய வீட்டில் எதுவித உறவுமற்ற இரு ஆண்களைத் தங்க வைத்த குற்றச்சாட்டில் 75 வயது சிரிய நாட்டுப் பெண்மணி ஒருவருக்கு 40 கசையடிகளையும் நான்கு மாத சிறைத் தண்டனையையும் விதித்து சவூதி அரேபிய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் மேற்படி தண்டனைகளை அனுபவித்த பின் அப்பெண்ணை நாடு கடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அல் சம்லி எனும் இடத்தைச் சேர்ந்த கமிஸா மொஹமட் சவாடி என்ற மேற்படி பெண்ணின் வீட்டிற்கு மத பொலிஸார் விஜயம் செய்தபோது, அங்கு அப்பெண்ணின் உறவினரல்லாத பாஹ்த் மற்றும் ஹாடியன் ஆகிய இரு ஆண்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பாஹ்த் (24 வயது) தான் கைக் குழந்தையாக இருந்தபோது சவாடி தனக்கு முலைப் பாலூட்டியதாகவும் அந்த வகையில் இஸ்லாமிய மரபுகளின் பிரகாரம் தான் அவரது மகன் எனவும் அதனால் தனக்கு அவ்வீட்டில் இருக்க உரிமை உள்ளது எனவும் வாதிட்டுள்ளார்.
ஹாடியன் தனது நண்பன் எனவும் அவர் மேற்படி வயதான பெண்மணிக்கு பாணை விநியோகித்து வந்ததாகவும் பாஹ்த் கூறினார். பொலிஸார் அவ்விரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
சவூதி அரேபியாவானது உறவு முறையற்ற ஆண்களும் பெண்களும் பழகுவதற்கு கடும் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, பாஹ்த்திற்கு சவாடி பாலூட்டவில்லை என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனையடுத்து பாஹ்த்திற்கு 40 கசையடிகளும் 4 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்ட அதேசமயம் ஹாடியனுக்கு 60 கசையடிகளும் 6 மாத சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தனது பேரப் பிள்ளைகளின் வயதிலுள்ள இளைஞர்களை தங்க வைத்தமைக்காக வயது முதிர்ந்த மேற்படி பெண்மணிக்கு வழங்கப்பட்ட கடும் தண்டனைக்கு அந்நாட்டு மனித உரிமைகள் அமைப்புகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.






0 விமர்சனங்கள்:
Post a Comment