400 வெளிநாட்டவர்கள் கைது; நாடு கடத்தல்
இலங்கையின் குடிவரவு- குடியகழ்வு சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நானூறு (400) வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள்.
2006ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையான காலப் பகுதியிலும், இந்த ஆண்டின் முற்பகுதியிலும் இவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
79 நாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பயணிகளுக்கு ஒரு மாதம் தங்குவதற்கான வருகை விஸாவுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கி இருந்தது. இவர்கள் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் இலங்கையில் முப்பது நாட்கள் தங்கி இருப்பதற்கான விஸா வழங்கப்பட்டு வந்தது. அவர்களுடைய தேவையைப் பொறுத்து மேலும் இரண்டு மாதங்கள் விஸா நீடித்துக் கொடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. என்றாலும் இவர்கள் அதனை துஷ்பிரயோகம் செய்து நாட்டில் சட்ட விரோதமாக தங்கி இருப்பது தெரிய வந்ததையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
இவர்கள் உல்லாச ஹோட்டல்கள், நகைக்கடைகள், கட்டிட நிர்மாணத்துறை, தொழில் நுட்பத்துறை, மசாஜ் நிலையங்கள், கெசினோ கிளப்கள் உட்பட பல இடங்களில் சட்ட விரோதமாகத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதை விடவும் சிலர் போதைப் பொருள் வியாபாரம், வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புதல், விபசாரத்தில் ஈடுபடுதல் உட்பட மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment