திருமலையைக் குலுக்கிய பிஞ்சு வர்ஷாவின் கொடூர மரணம்
'துடிதுடித்து ஓர் உயிர் பறிபோனது படிக்கப் போன மாணவப் பறவை பாதகர் கையில் பதை பதைக்க படுகொலையானது. பாரெங்கும் கண்டிக்காதோ இச்செயலை நெஞ்சு பொறுக்குதில்லையே- இந்த நிலை கெட்ட செயலை நினைத்து விட்டால்...'
ஈவிரக்கமற்ற படுபாவிகள் சிலரின் ஈனச் செயலினால் திருகோணமலையைச் சேர்ந்த ஆறேவயதான ஜுட் ரெஜி வர்ஷா எனும் மொட்டு பிஞ்சிலே கருகிப் போனது இந்த சம்பவம் முழு இலங்கையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஈவிரக்கமற்ற இந்தச் கொலையை கண்டித்து திருகோணமலையில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்திலே மனதை நெகிழவைக்கும் மேற்கண்ட வரிகள் காணப்பட்டன.
ஈரமான இதயங்களை மட்டுமன்றி கல்மனம் படைத்தவர்களையும் உருகச் செய்யும் திருகோணமலை கடத்தல் நாடகம், திரைப்பட காட்சிகள் போல எதிர்பாராத பல திருப்பங்களையும் பரபரப்பையும் ஏற்படுத்திச் சென்றுள்ளது.
ஒருவாரத்துக்கு மேலாகியும் கூட யாராலும் இந்த குரூர சம்பவத்தை மறக்க முடியவில்லை. இந்த கடத்தல் நாடகத்தின் பின்னணி என்ன? உண்மையில் என்ன நடந்தது....?
ஜுட் ரெஜி வர்ஷா அன்பான சிறிய குடும்பத்தில் இரண்டாவது குழந்தை இந்த இனிய குடும்பம் திருகோணமலை பாலையூற்றுப் பகுதியில் வசித்து வந்தது.
வர்ஷாவின் தந்தை கடந்த 13 வருடங்களாக கட்டாரில் தொழில் புரிந்து வருகிறார். அவள் தனது தாய் கிருபராணியுடனும் அண்ணணுடனும் பாலையூற்றில் வசித்தாள்.
சிறுபராயம் முதலே கெட்டித்தனமும் சுறுசுறுப்பும் அவளிடம் நிறையவே இருந்தது. கடந்த வருடம் வரை முன்பள்ளிக்கு சென்று வந்த வர்ஷா ஜனவரி முதல் திருகோணமலை சென்மேரிஸ் கல்லூரியில் முதலாம் தரத்தில் பயிலத் தொடங்கினாள்.
தனது பாடசாலை வாழ்க்கை மட்டுமன்றி முழு ஆயுளும் இரண்டு மாதங்களுக்குள் முடிந்து விடப்போவதை முன்கூட்டியே அறிந்ததாலே என்னவோ அதிகமாக அவள் அழுது கொண்டு தான் பாடசாலைக்கு வருவாளாம்.
பாலையூற்றில் இருந்து பாடசாலைக்கு சுமார் 2கிலோ மீட்டர் தூரமிருக்கும். அதனால் அவள் முச்சக்கரவண்டியில் தான் பாடசாலைக்கு சென்று வந்தாள். அழுது கொண்டு பாடசாலைக்கு வந்தாலும் ஆசிரியர்களின் அன்பினாலும் பாடசாலையின் இனிய சூழலினாலும் அவள் மிகுந்த விருப்புடன் கல்வி கற்பதில் ஈடுபட்டாள்.
வர்ஷாவின் தந்தை நீண்டகாலம் மத்திய கிழக்கில் தொழில் புரிந்தாலும் விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் இலங்கைக்கு வந்து செல்ல மறக்கவில்லை. தன் அன்புச் செல்வங்களை காண்பதற்காக அவர் ஒரு மாதத்துக்கு முன்பு கூட இலங்கைக்கு வந்து விட்டுச் சென்றாராம்.
மகளுடன் அவள் கல்வி பயிலும் பாடசாலைக்கு வந்த அவர் 'இனிமேல் வர்ஷா அழுது கொண்டு பாடசாலை வரமாட்டாள்' என்று ஆசிரியர்களிடம் கூறிச் சென்றாராம். தந்தை கூறியது போல மற்றவர்களை கண்ணீரில் மூழ்க வைத்து விட்டு அவள் அழுகைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள்.
அன்று மார்ச் 11ம் திகதி வழமை போல வர்ஷா முச்சக்கர வண்டியில் பாடசாலைக்குப் புறப்பட்டாள். அவளின் சாவுக்கு நாள் குறிக்கும் தினத்தில் பாடசாலையில் அதிபரின் பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெற்றது. ஆசிரியர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பரபரப்பாக இருந்தனர்.
நண்பகல் 11.30 ஆனது. முதலாம் தர மாணவர்கள் புத்தகப் பொதிகளை தோளில் சுமந்தவாறு பிரதான வாயிலை நோக்கி ஓட்டம் பிடித்தனர். தனக்கு வர இருக்கும் ஆபத்தை உணராமல் வர்ஷாவும் பட்டாம் பூச்சி போல வீதியோரத்துக்கு ஓடினாள். ஆனால் வழமையாக அழைத்துச் செல்லும் ஆட்டோ வண்டியை காணவில்லை.
வேறொரு ஆட்டோவில் வந்த இளைஞர்கள் இருவர் சிறுமியை நெருங்கி அவளின் காதோரமாக எதோ முணுமுணுத்தனர். வர்ஷா தனது சக நண்பர்களுக்கு இறுதியாக டாட்டா காட்டி விட்டு அந்த ஆட்டோவில் ஏறிக் கொண்டாள்.
ஆட்டோ வேகமாக பறந்தது. வர்ஷாவின் வீட்டுக்குச் செல்லும் பாதையினூடாகச் செல்லாது வேறு பாதையினூடாகவே ஆட்டோ பயணித்தது. வயதில் சின்னவளாக இருந்தாலும். வீட்டுக்குச் செல்லும் பாதை குறித்து வர்ஷா அறிந்து வைத்திருந்தாள்.
தனது சந்தேகத்தை அவர்களிடம் கேட்டுத் தீர்த்தாள். வர்ஷாவின் தாய்க்கு சுகவீனமில்லை என்று கூறிய மேற்படி இளைஞர்கள் அவளை ஆட்டோவில் அழைத்து வந்தனர். சிறுமி கேள்வி மேல் கேள்வி கேட்கத் தொடங்கினாள்.
அவளுக்கு சில விளையாட்டுச் சாமான்கள் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு செல்வதாக அவளுக்கு பதில் கிடைத்தது.
ஆனால் ஆட்டோவில் வந்த இளைஞர்கள் இருவரும் அவளை வீடுபோன்றிருந்த இடமொன்றுக்கு அழைத்துச் சென்றனர். தன்னை பொய் சொல்லி அழைத்து வந்திருப்பதை உணர வர்ஷாவுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. தாயிடம் அழைத்துச் செல்லுமாறு கேட்டு அழத் தொடங்கினாள் நேரம் செல்ல அவளின் அழுகை இரட்டிப்பானது.
அவ்வளவு நேரமும் அன்பு ஒழுக பேசிய இளைஞர்கள் இருவரும் தமது சுய ரூபத்தைக் காட்டத் தொடங்கினர். அவளின் அழுகையை கட்டுப்படுத்துவதற்காக வர்ஷாவின் காலுரைகளிரண்டையும் கழற்றி அவளின் வாய்க்குள் திணித்தனர் படுபாதகர்கள்.
அவளின் முகம் முழுவதும் பிளாஸ்டரால் ஓட்டப்பட்டது. மூச்சு விட மட்டும் சற்று இடம்விடப்பட்டது. சிறுமியின் கைகால்களையும் கட்டிய கடத்தல்காரர்கள் அவளை இருட்டறையொன்றில் தள்ளினர்.
இதற்கிடையில் சிறுமியை வழமையாக அழைத்து வரும் ஆட்டோ சற்று தாமதமாக பாடசாலைக்கு சென்றது. ஆட்டோவின் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே ஆட்டோ அன்று தாமதமானது. வர்ஷாவை பாடசாலையில் காணவில்லை.
குழப்பமடைந்த ஆட்டோ சாரதி அவளை பாடசாலையெங்கும் தேடினார். தாய்க்கு சுகமில்லை என கூறி அவளை வேறு யாரோ ஆட்டோவின் அழைத்துச் சென்றதாக தகவல் கிடைத்தது. உடனேவர்ஷாவின் தாயுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முனைந்தார்.
வர்ஷா வீட்டிக்கு வராததால் ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்த அவளின் தாய் பதற்றமடைந்தார். உடனே சென் மேறிஸ் பாடசாலைக்கு விரைந்து வந்தார்.
அங்கிருந்தவர்களிடம் வினவிய போது தாயாருக்கு சுகமில்லையென்று சிலர் அவளை அழைத்துச் சென்றது தெரியவந்தது.
வர்ஷாவின் தாய் அவரது உறவினர்கள் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் அனைவரும் திருமலை நகரெங்கும் அவளை தேடி அலைந்தனர். மகளுக்கு என்ன நேர்ந்தது. வர்ஷாவின் தாயின் மனக்கண் முன் என்னென்னவோ சம்பவங்கள் தோன்றி மறைந்தன. அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
மகளைத் தேடித் தேடி எதுவும் பலனளிக்காததால் அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார். மற்றவர்கள் வர்ஷாவை தேடுவதில் ஈடுபட்டனர்.
ஒன்றரை மணி நேரம் கடந்தது. ஒரு மணியளவில் வீட்டு தொலைபேசி சிணுங்கியது. எமனிடமிருந்து தொலைபேசி அழைப்பு மறுபக்கமிருந்து முரட்டுத்தனமான குரல் கேட்டது.
'வர்ஷா பாதுகாப்பாக இருக்கிறாள் பிள்ளை உயிருடன் வேண்டுமென்றால் வர்ஷாவின் தந்தையின் தொலைபேசி இலக்கத்தை "தா" என மறுமுனையில் இருந்து கூறப்பட்டது.
தனது மகள் கடத்தப்பட்டு விட்டாள் என்பதை உணர வர்ஷாவின் தாய்க்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. உடனடியாக கணவனின் கட்டார் நாட்டு தொலைபேசி இலக்கத்தை வழங்கினார்.
வர்ஷாவின் தந்தையுடன் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் மகளை விடுவிக்க வேண்டுமென்றால் 3 கோடி கப்பமாக வழங்க வேண்டு என்று அச்சுறுத்தியுள்ளனர். ஆனால் தன்னிடம் அந்தளவு வசதி இல்லை என்று கூறியுள்ள அவர் கெஞ்சிக் கூத்தாடி கப்பத் தொகையை 10 இலட்சம் ரூபாவாக குறைத்துள்ளார்.
குழந்தை கடத்தப்பட்டது குறித்து பொலிஸிடமோ வேறு யாரிடமோ கூறினால் அவளை கொன்று விடுவதாக கடத்தல்காரர்கள் எச்சரித்திருந்தனர்.
இதற்கிடையில் வர்ஷா கடத்தப்பட்டது மெதுமெதுவாக திருகோணமலையில் பரவத்தொடங்கியிருந்தது. வர்ஷாவின் வீட்டுத் தொலைபேசி மீண்டும் சிணுங்கியது கடத்தல் காரர்களாக இருக்குமோ என பயந்தபடி வர்ஷாவின் தாய் தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்தார்.
மறுபக்கம் கணவரின் குரல் கேட்டது. அவரால் ஒப்பாரி வைத்து அழுவதைத் தவிர வேறு எதுவும் பேசமுடியவில்லை. வர்ஷாவை விடுவிக்க கடத்தல்காரர்கள் 10 இலட்சம் ரூபா கேட்கும் விசயத்தை அவர் மனையிடம் கூறினார்.
கடத்தல்காரர்கள் தன்னுடன் தொடர்பு கொண்ட தொலைபேசி இலக்கத்தை வர்ஷாவின் தந்தை தனது மனைவிக்கு வழங்கினார். பணத்தைக் கொடுத்து மகளை காப்பாற்றுவோம் எனவும் பயப்பட வேண்டாமெனவும் அவர் மனைவியை ஆறுதல் படுத்தினார்.
இதற்கிடையில் கடத்தல்காரர்கள் கப்பப் பணத்தை எவ்வாறு பெறுவது என சிறுமியை கடத்தி வைத்திருந்த ஓவர்சீல் பகுதி வீட்டில் இருந்தவாறு மும்முரமாக ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர் நேரம் கடந்து கொண்டே இருந்தது.
கடத்தல் காரர்களிடமிருந்து எதுவித தகவலும் வராததால் வர்ஷாவின் தாய் கலவரமடைந்தார். நேரம் செல்லச் செல்ல பயத்தினால் அவரின் பதற்றம் அதிகரித்தது மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கணவர் தந்த கப்பக்காரர்களின் இலக்கத்தை சூழற்றினார்.
தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்த கடத்தல் காரர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. மறுபக்கம் வர்ஷாவின் தாயின் குரல் கேட்டது. ரகசியமாக திட்டமிட்டு மேற்கொண்ட தங்களது கடத்தல் நாடகம் அம்பலமாகி விட்டதோ என அவர்களுக்கு பயம் ஏற்பட்டது. வர்ஷாவின் தாய்க்கு தங்களது தொலைபேசி இலக்கம் கிடைத்திருப்பதை அறிந்து அவர்கள் கலவரமடைந்தனர்.
மறுநாளாகியும் வர்ஷா பற்றிய தகவல் எதுவும் இல்லை. கடத்தல்காரர்கள் தரப்பில் இருந்து எந்தவித பதிலையும் காணவில்லை. இருட்டென்றால் அலறி அடித்து ஓடும் அந்த பச்சிளம் சிறுமி இருள் மண்டிய அறைக்கும் சுருண்டு கிடந்தாள் ஒவ்வொரு நிமிடமும் யுகங்களாக நீண்டிருந்தன.
வாய்விட்டு அழ முடியாமல் அவரின் கண்களில் இருந்து மாலை மாலையாக நீர் வடிந்து கொண்டிருந்தது.
சிறுமியை விடுவித்தால் தாங்கள் பொலிஸில் மாட்டிக் கொள்வோம் என்பதால் கப்பப்பணம் கிடைத்தாலும் இல்லாவிட்டாலும் சிறுமியை கொலை செய்வதென அந்த ஈவிரக்கமற்ற பாதகர்கள் முடிவு செய்தனர். சிறுமியை கொலை செய்து உரைப்பையொன்றில் இட்டு ஆழ்கடலில் போட்டுவிடுவது தான் கடத்தல்காரர்களின் திட்டமாக இருந்தது.
ஏனென்றால் இதற்கு முன்பும் பல கடத்தல்களுடன் தொடர்பு பட்டிருந்த இவர்கள் இவ்வாறு தான் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் சிலரின் உதவியுடன் பலரை கொலை செய்து கடலில் வீசியுள்ளனர்.
அழகாக துறுதுறுவென்றிருக்கும் அந்த இளம் பிஞ்சை அடிப்பதற்கு கைதூக்கவே யாருக்கும் தைரியம் வராது. ஆனால் கடத்தல்கார படுபாவிகள் ஈவிரக்கமின்றி அவளை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அந்த பிஞ்சுக்கு சத்தம் இட்டு அழக்கூட முடியவில்லை.
ஏனென்றால் அந்த மிருகங்கள் அவளின் வாயை பிளாஸ்டர் கொண்டு இறுக அடைத்திருந்தனர். ஒரு சில நிமிடங்களில் அந்த பட்டாம் பூச்சியின் மூச்சு அடங்கியது.
உரைப்பையொன்றில் சிறுமியின் உடல் வைத்துக் கட்டப்பட்டது. அவளின் சப்பாத்து, தண்ணீர் போத்தல், புத்தகப் பொதி என்பற்றையிட்டு உரைப் பையில் இட்டு கட்டப்பட்டது. திட்டமிட்ட படி மறுநாள் அதிகாலையில் (13ம் திகதி) சடலத்தை ஆழ்கடலில் வீசுவதற்கென மீன்பிடிப்படகு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் கடத்தல்காரர்களின் திட்டங்கள் மீண்டும் தோல்வி கண்டன. கடற்படையின் அனுமதி கிடைத்தால் மட்டுமே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியும் அன்றைய தினம் (13) மீன் பிடிக்கச் செல்வதற்கு கடற்படை தடைவிதித்திருந்தது.
தமது திட்டம் பலிக்காததால் சிறுமியின் சடலத்தை எங்காவது வீசி விடுவதென கடத்தல் கும்பல் தீர்மானித்தது. இதற்கிடையில் சிறுமி கடத்தப்பட்ட விவகாரம் பொலிஸாரின் காதுக்கும் எட்டியிருந்தது. பொலிஸாரும் சிறுமியை தேடுவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
மூன்று நாளாகியும் சிறுமி கிடைக்காததால் 13ம் திகதி காலை 11.00 மணியளவில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் வர்ஷாவை விடுவிக்குமாறு கோரி அமைதியான ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் முடிந்த பின் தனது அலுவலகத்துக்கு வந்த பாடசாலை அதிபர் அருட் சகோதரி பவளராணி, சிறுமியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதிக்கும் கல்வி அமைச்சருக்கும் கடிதமொன்றை பெக்ஸ் செய்ய தயாரானார்.
அதற்கிடையில் பாடசாலை தொலைபேசி அலறியது. மூர்வீதியில் குறுக்கு ஒழுங்கை ஒன்றில் உரைப்பையில் இடப்பட்ட நிலையில் சிறுமி ஒருத்தியின் சடலமொன்று கிடப்பதாக அதிபருக்கு தகவல் கூறப்பட்டது. அவருக்கு தலையில் இடிவிழுந்தது போல இருந்தது.
இதற்கிடையில் இந்த செய்தி திருமலை நகரமெங்கும் பரவியது. வர்ஷாவின் தாயும் தகவலறிந்து பதறியடித்துக் கொண்டு அந்த இடத்துக்கு விரைந்தாள்.
உரைப்பைக்குள் பாடசாலை சீருடையுடன் வர்ஷாவின் சடலம் கிடந்தது. சடலம் சற்று ஊதியிருந்தது. அவளை சடலமாகக் கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். முழு திருமலை நகரமும் சின்னஞ்சிறு வர்ஷா கொலையானதை கேட்டு அதிர்ச்சியில் புதைந்தது.
சிறுமியின் கடத்தல் குறித்து மந்தகதியில் விசாரணை செய்து கொண்டிருந்த பொலிஸார் அவள் கொலையானதையடுத்து சுறுசுறுப்பானார்கள்.
பல்வேறு கோணங்களிலும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. விசேட பொலிஸ் குழுக்கள் முடுக்கிவிடப்பட்டன. கடத்தல்காரர்களின் தொலைபேசி இலக்கத்தின் அடிப்படையிலும் விசாரணைகள் நடத்தப்பட்டன.
ஆனால் சென் மேறிஸ் மாணவர்கள் சிலரிடமிருந்து கிடைத்த தகவல் விசாரணையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.கடத்தல்காரர்களுடன் ஆட்டோவில் சென்ற வர்ஷா, தான் கம்பியூட்டர் அங்கிளுடன் செல்வதாகவே தனது மாணவர்களிடம் கூறியிருந்தாள். யார் இந்த கம்பியூட்டர் அங்கிள் என பொலிஸார் தேடத்துவங்கினர்.
கணனி பட்டதாரியான இளைஞனொருவர் வீட்டுக்கு வந்து சிலகாலம் வர்ஷாவுக்கு கணனி வகுப்பு நடத்தியிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து வர்ஷாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான மேர்வின் ரினவூசன் பொலிஸாரின் வலையில் சிக்கினான்.
இவர் கைதானதையடுத்து கொலையுடன் தொடர்புடைய பல தகவல்கள் அம்பலமாகின. கொலையுடன் தொடர்புடைய மேலும் 5 சந்தேக நபர்களும் பொலிஸாரிடம் சிக்கினர்.
இவர்களை விசாரணை செய்ததில் கடத்தலுக்கான காரணங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
கணனி பட்டதாரியான மேர்வினுக்கு தனியார் வானொலி சேவையொன்றை ஆரம்பிக்க ஆசை நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. அதனை நிறைவேற்ற நண்பன் ஒருவரின் உதவியை நாடியிருக்கிறான். செல்வந்தர் ஒருவரை அல்லது அவரின் குடும்பத்தவர் யாரையாவது கடத்தி கப்பம் பெற திட்டம் தீட்டப்பட்டது.
வர்ஷாவின் வீட்டில் சில காலம் கம்யூட்டர் பயிற்சி வழங்கியதால் அவரின் தந்தை நீண்டகாலம் வெளிநாட்டில் தொழில் புரியும் விபரத்தை மேர்வின் அறிந்திருந்தான். இதன் படி வர்ஷாவை கடத்த முடிவு செய்யப்பட்டது.
கடத்தல்காரர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின் படி ஓவர்சீல் பகுதியில் உள்ள வீடு சுற்றிவளைக்கப்பட்டது. அறையொன்றுக்குள் சிறுமியின் சாப்பாட்டு பெட்டி கிடந்தது.
நிலத்தில் இரத்தக்கறை படிந்திருந்தது. அந்த இரத்த மாதிரி டி. என். ஏ. பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
பிரேத பரிசோதனையின் பின்னர் வர்ஷாவின் சடலம் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. அவளின் உடல் முழுவதும் சூட்டுக் காயங்களும் தாக்கப்பட்ட காயங்களும் காணப்பட்டன. முச்சுத் திணறியே இருந்திருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.,
சிறுமியின் இறுதிக் கிரியைகள் 15ம் திகதி இடம்பெற்றது. தாய்மார்களினதும் அன்பு உள்ளங்களினதும் கண்ணீரினால் திருகோணமலை மண் ஈரமானது. அந்தத் தாய்மாரின் கண்ணீரின் சக்தியினாலோ என்னவோ கடத்தல் கும்பல் தலைவரின் மரணமும் அன்றே அரங்கேறியது.
அன்று நண்பகல் 12.00 மணியளவில் கொலை நடைபெற்ற இடத்துக்கு பிரதான சந்தேக நபரான மேர்வின் ரினவூசன் பொலிஸ்" ஜீப்பில் அழைத்துச் செல்லப்பட்டான். திருகோணமலை பொது நூலகத்துக்கு அருகில் வைத்து பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் கழுத்தை கடித்து விட்டு ஜிப்பில் இருந்து தப்பி ஓட எடுக்க முயற்சிக்க துப்பாக்கி சன்னங்கள் முற்றுப்புள்ளி வைத்தன. பாதுகாப்பிற்காகச் சென்ற பொலிஸார் சுட்டதில் மேர்வின் பிணமாக விழுந்தான்.
அவனின் சாவு பலருக்கு ஆறுதலை கொடுத்தது. படுபாவிக்கு இவ்வுலகிலே தண்டனை வழங்கப்பட்டு விட்டதாக மகிழ்ந்தவர்களும் உண்டு. நாய்மாதிரி வீதியோரம் சூடுபட்டு விழுந்த அவனுக்கு மரணம் கூட நிம்மதியை கொடுக்கவில்லை.
பிரேத பரிசோதனையின் பின்னர் அவன் சடலம் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அந்த ஈவிரக்கமற்ற பாவியின் சடலத்தை ஏற்க பத்துமாதம் நொந்து பெற்றிதாய் கூட தயாராக இல்லை.
அநாதை பிணமாக கிடந்த சடலத்தை பிரதேச கிராம உத்தியோகஸ்தரினூடாக அரச செலவில் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதலாவது சந்தேகநபரின் மரணத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட மற்றொரு சந்தேக நபரும் கடந்த வியாழக்கிழமை சயனைட் அருந்தி தற் கொலை செய்துகொண்டார்.
மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை பொலிஸாருக்கு காட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போதே அவர் திடீரெனத் தன்னை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆயிரம் ஆயிரம் ஆசைக்கனவுகளோடு பாடசாலை சென்று வந்த அந்த சின்னம் சிறு பட்டாம்பூச்சியின் வாழ்வு 6 வருடங்களுடன் முடிந்துவிட்டது. இந்தக் குரூர சம்பவத்தை யாரும் எளிதில் மறந்துவிடமுடியாது.
பணத்திற்கு முன்னால் மனித உயிர்கூட இன்று துச்சமாகிவிட்டன. இந்த மண்ணில் இருந்து இவ்வாறான கொடூரங்கள் பூண்டோடு ஒழிக்கப்பட வேண்டும். தமது குழந்தைச் செல்வங்கள் குறித்து பெற்றோர் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment