தீர்வு எங்களைத் தேடி வராது தீர்வைத் தேடி நாங்கள் தான் செல்ல வேண்டும்
புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கின்றது. இப்போது நடைபெறுவது இறுதிப் போர் என்பதே இதன் அர்த்தம். இதில் இரு தரப்பும் கூடுதலான இழப்புகளைச் சந்திக்கலாம். ஆனால் புலிகள் தோல்வியைத் தவிர்க்க முடியாது.
புலிகளின் தோல்விக்குப் பின் தமிழ் மக்களுக்கு இருண்ட காலம் என்று சிலர் எதிர்வு கூறுகின்றார்கள். இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு சாத்தியமற்றதாகிவிடும் என்பது இவர்களின் கருத்து. புலிகளைத் தவிர வேறு எவராலும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்ற சிந்தனையின் வெளிப்பாடு தான் இக்கருத்து. இந்தச் சிந்தனையின்படி பார்த்தால், புலிகள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்திருக்க வேண்டும். அல்லது அரசியல் தீர்வை நோக்கிய நகர்வு ஆரம்பித்திருக்க வேண்டும்.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்தக் காலத்தில் தான் இனப் பிரச்சினை மென்மேலும் சிக்கலடைந்தது. அந்தக் காலத்தில் தான் தமிழ் மக்கள் பல துன்பங்களுக்கு உள்ளாகினார்கள். இவை எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துப் பார்க்கும் போது, இனப் பிரச்சினையின் தீர்வுக்குப் புலிகள் தடையாக இருந்திருக்கின்றார்கள் என்பது புரியும். தீர்வுப் பாதையிலுள்ள தடை முற்றாக நீங்குவது அரசியல் தீர்வு முயற்சியை முன்னெடுப்பதற்கு வாய்ப்பான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும். இன்றைய இராணுவ நடவடிக்கையை இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால் இனிமேல் சாத்தியமில்லை என்ற நிரானுகூல சிந்தனை தோன்றாது.
அரசியல் தீர்வு முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்திட்டம் திருப்திகரமான பல அம்சங்களைக் கொண்டிருந்தது. சில குறைபாடுகள் உள்ள போதும் சமஷ்டித் தீர்வு என்று அதைக் கூறலாம்.
இன்று அந்த நிலையிலிருந்து கிட்டத்தட்டப் பதினைந்து வருடங்கள் பின்தள்ளப்பட்டு மாகாண சபை மட்டத்தில் நிற்கிறோம். இது எப்படி ஏற்பட்டது என்ற கேள்வியை நாங்கள் எங்களுக்குள் கேட்டுப் பார்க்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மாகாண சபையைக் கலைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் புலிகள் செயற்பட்டார்கள். மாகாண சபையைக் கலைக்க வேண்டும் என்பதிலும் இந்திய அமைதி காக்கும் படையைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதிலும் ஜனாதிபதி பிரேமதாசவுக்கும் புலிகளுக்கும் இடையே உடன்பாடு நிலவியது. இவ்விரு எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதற்காக அவர்கள் சேர்ந்து செயற்பட்டார்கள். வெற்றியும் கண்டார்கள்.
இந்திய அமைதி காக்கும் படையைத் திருப்பி அனுப்பியதன் மூலமும் வடக்கு, கிழக்கு மாகாண சபை செயற்பட முடியாத நிலையை உருவாக்குவதன் மூலமும் தனக்கு நன்மை கிடைக்கும் என்று பிரேமதாச நினைத்ததில் நியாயம் உண்டு. பெளத்த சிங்கள தேசியவாதியான பிரேமதாச அந்தச் சமூகப் பிரிவினரின் வாக்குகளை இலக்கு வைத்து செயற்பட்டிருக்கின்றார்.
புலிகள் இதன் மூலம் என்ன நன்மையை எதிர்பார்த்தார்கள்? மாகாண சபையைச் செயற்பட விடவில்லை என்ற மானசீக திருப்தியைத் தவிர நன்மைகள் ஏதும் இல்லை. புலிகளுக்கும் நன்மை இல்லை. தமிழ் மக்களுக்கும் நன்மை இல்லை.
மாகாண சபை செயலற்றுப் போய் கிட்டத்தட்டப் பத்து வருடங்களுக்குப் பின் பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத்திட்டம் வெளியாகியது. அத்தீர்வுத்திட்டம் சிறுபான்மையினருக்கு மிகவும் சாதகமான ஒரு முக்கிய சரத்தைக் கொண்டிருந்தது.
பிராந்திய சபைகளின் எல்லைகளையோ விடயங்களையோ அதிகாரங்களையோ அச்சபைகளின் தனித்தனியான சம்மதத்தைப் பெறாமல் எவ்விதத்திலும் மாற்ற முடியாது என்பதே அச்சரத்து. அத்தீர்வுத்திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் இழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் இடம் இருந்திருக்காது.
தமிழ்க் கட்சிகள் ஆதரவளித்திருந்தால் அந்தத் தீர்வுதிட்டத்தைப் பாராளுமன்றத்தில் மூன்றிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடிந்திருக்கும். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்வுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்குத் தயாராக இருந்தனர். இவர்களுடன் தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தால் மூன்றிரண்டு பெரும்பான்மை கிடைத்திருக்கும்.
தமிழ்க் கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஐக்கிய தேசியக் கட்சியின் மேலே குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இருந்தது.
தமிழ்க் கட்சிகள் பாராளுமன்றத்தில் எதிராகப் பேசிய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்வாங்கினார்கள். தமிழ்க் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் மூன்றிரண்டு பெரும்பான்மை கிடைக்காது என்றும் அந்த நிலையில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறித் தாங்கள் ஆதரவளிப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர்கள் கருதினார்கள். இதே காரணத்துக்காக வாக்களிப்பை நடத்துவதில்லை என்று அரசாங்கமும் தீர்மானித்தது.
பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்திட்டம் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற முடியாததற்கான முழுப் பொறுப்பும் தமிழ்க் கட்சிகளையே சார்கின்றது. தமிழ்க் கட்சிகள் எதிர்ப்பு நிலைப்பாட்டைத் தாமாகவே எடுக்கவில்லை.
புலிகளின் அழுத்தம் காரணமாகவே அந்த நிலைப்பாட்டை அவை எடுத்தன. தீர்வுத்திட்டத்துக்குப் பாராளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து தமிழ்க் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகச் செயற்படுவது புலிகளின் அழுத்தம் காரணமாகவே அவர்கள் தீர்வுத் திட்டத்தை எதிர்த்தார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
புலிகள் இடைக்கிடை சமாதானத் தீர்வு பற்றிப் பேசினாலும் உண்மையில் அவர்கள் தனிநாட்டு இலக்குடனேயே செயற்படுகின்றார்கள். தீர்வுத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு திரட்ட முடியாமற் போய்விடும் எனக் கருதியதாலேயே புலிகள் அதற்கு எதிராகத் தமிழ்க் கட்சிகளை அணிதிரட்டினார்கள். தீர்வுத்திட்டம் நிறைவேற முடியாமற் போனதன் பின் உருவாகிய நிலைமை காரணமாக இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சி வெகுவாகப் பின்தள்ளப்பட்டது.
அரசியல் தீர்வு முயற்சியின் பின்னடைவுக்கு யார் காரணம் என்ற ஆராய்ச்சியிலும் பார்க்க, இனி என்ன செய்ய வேண்டும் என்பதே முக்கியமான விடயம்.
இனிமேல் தீர்வு என்ற பேச்சுக்கு இடமில்லை என்று அவநம்பிக்கைத் தொனியில் சிலர் பேசுகின்றார்கள். முழுமையான அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைக்கும் வரை எந்தவொரு தீர்வு முயற்சியிலும் பங்கு பற்றுவதில்லை என்ற கருத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீண்ட காலமாகக் கூறி வருகின்றது. இந்த இரண்டு நிலைப்பாடுகளுமே தவறானவை.
இனிமேல் எதுவும் சாத்தியமாகாது என்ற தோல்வி மனோபாவம் எந்தப் பிரச்சினையினதும் தீர்வுக்கு உதவாது. +வி:!சீ8rதில் பேரினவாதிகளும் இருப்பதால் தீர்வு சாத்தியமில்லை என்று இக்கருத்தை முன்வைப்பவர்கள் கூறுகின்றார்கள். சிங்களம் மட்டும் என்ற கோஷத்துடனேயே மக்கள் ஐக்கிய முன்னணி 1956 ஆம் ஆண்டு பதவிக்கு வந்தது. சீ. ஏ. எஸ். மரிக்காரைத் தவிர மற்றைய அமைச்சர்கள் எல்லோரும் சிங்களவர்கள். அப்போது தமிழ்த் தலைமை இது போன்ற விரக்தியான நிலைப்பாட்டை எடுத்திருந்தால் தமிழினம் எதிர்காலத்தை முற்றாக இழந்திருக்கும்.
எல்லாமே முடிந்து விட்டது என்று ஒதுங்காமல் யதார்த்ததை உணர்ந்து தீர்வு முயற்சியை நகர்த்துவதற்கு இங்கு தடையேதும் இல்லை.
முழுமையான அரசியல் தீர்வை முன்வைக்கும் வரை எந்தத் தீர்வு முயற்சியிலும் பங்கேற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் முன்வைத்த கருத்து அரசியல் தீர்வின் மீதுள்ள அக்கறையின் வெளிப்பாடல்ல. புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் செயற்பட்டார்கள்.
எனவே, அரசியல் தீர்வை அவர்கள் விரும்பவில்லை. அதைத் தவிர்ப்பதற்கான தந்திரோபாயமாகவே மேற்படி கருத்தை முன்வைத்தார்கள். சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளிலிருந்து விலகி நிற்பதற்கும் இக்கருத்து அவர்களுக்குத் துணை புரிந்தது.
புலிகள் ஓரளவுக்குப் பலமானவர்கள் என்ற தோற்றம் நிலவிய காலத்தில், அவர்கள் தனிநாடு அமைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் கூட்டமைப்பினர் இக்கருத்தை முன்வைத்திருக்கலாம். இப்போது புலிகளின் தோல்வி நிச்சயமாகிவிட்டது. இந்த நிலையில் தனிநாடு பற்றிய நம்பிக்கையைத் தொடர்ந்தும் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இப்போதும் இதே கருத்தைச் சொல்லப் போகின்றார்களா?
முழுமையான தீர்வை முன்வைக்காவிட்டால் எந்தத் தீர்வு முயற்சியிலும் பங்குபற்ற மாட்டோம் என்று இப்போது கூறுவது தலைமையைக் கைவிடுவதற்குச் சமன். தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடனேயே மக்கள் தலைவர்களைத் தெரிவு செய்தார்கள்.
எனவே தீர்வுக்காக முயற்சி செய்வது தலைவர்களின் கடமை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் த¨வைர்கள் முழுமையான தீர்வைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டுமேயொழிய அவ்வாறான தீர்வு வரும் வரை அசைய மாட்டோம் என்று இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பார்களேயானால், தீர்வுக்காக முயற்சிக்கும் தலைவர்களின் பக்கம் மக்கள் திரும்புவதைத் தவிர்க்க முடியாது.
இன்றைய நிலையில் முழுமையான தீர்வுக்கான முயற்சி எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது பிரதானமான கேள்வி.
முழுமையான தீர்வொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் அத்தியாவசியமானது. அரசியலமைப்பைத் திருத்துவதற்குத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்கத்திடம் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு இல்லாமல் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்காது.
அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வழங்கத் தயார் என்று அக்கட்சியின் இரண்டு தலைவர்கள் அண்மையில் கூறியுள்ள போதிலும் கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பாக அது வெளிவரவில்லை. மேலும் கட்சியின் தலைவர் இந்த அறிவிப்புடன் இதுவரை தன்னை இனங்காட்டவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்த கால மற்றும் நிகழ்கால செயற்பாடுகள் அரசியல் தீர்வுக்கு அக்கட்சியின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிக்கவில்லை.
பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறிய ஐக்கிய தேசியக் கட்சி கடைசி நேரத்தில் காலை வாரியது. சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி பங்குபற்றவில்லை. அரசியல் தீர்வில் உண்மையான அக்கறை இருக்குமேயானால் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அதன் ஆலோசனைகளை ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்திருக்க வேண்டும். சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஆலோசனை வெளிவந்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அதன் ஆலோசனையை முன்வைக்கும் என்று ரவி கருணாநாயக்க அண்மையில் கூறினார். இக்கூற்று ஐக்கிய தேசியக் கட்சியின் நிஜமுகத்தை வெளிப்படுத்துகின்றது. சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு அதன் ஆலோசனைகளை வெளியிட்டதும் அதற்கு முரண்பாடான ஆலோசனைகளை முன்வைப்பதுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம்.
அதனால் தான் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஆலோசனைகள் வெளியாகிய பின்னரே கட்சியின் ஆலோசனைகளை வெளியிடப் போவதாக ரவி கருணாநாயக்க கூறுகின்றார்.
அரசியலமைப்பைத் திருத்தக் கூடிய சூழ்நிலை இப்போது இல்லாத காரணத்தால் பதின்மூன்றாவது திருத்தத்துடன் அரசியல் தீர்வு முயற்சியை ஆரம்பிப்பது தான் பொருத்தமானது. பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் அவசியமில்லை.
பதின்மூன்றாவது திருத்தம் போதுமானதல்ல என்பதால் அதை ஏற்க முடியாது என்று கூட்டமைப்பினர் கூறுகின்றனர். வேறு சிலரும் கூறுகின்றார்கள். பதின்மூன்றாவது திருத்தம் போதுமானதல்ல என்பது உண்மை. அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதால் தமிழ் மக்கள் எதையாவது இழக்கின்றார்களா அல்லது எதையாவது பெறுகின்றார்களா என்பது பிரதான விடயம். இத்திருத்தம் நடைமுறைக்கு வருவதால் தமிழ் மக்கள் இப்போது அனுபவிக்கும் எந்த உரிமையையும் இழக்கப் போவதில்லை. இப்போது அவர்கள் அனுபவிக்கும் சில துன்பங்கள் மறைவதற்கு இடமுண்டு.
பதின்மூன்றாவது திருத்தத்தை நிராகரிப்பதாகக் கூறுபவர்கள் முழுமையான தீர்வை அடைவதற்கு நடைமுறைச் சாத்தியமான வழி என்ன என்பதையும் கூற வேண்டும். பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்க மாட்டோம்; முழுமையான தீர்வு தான் தேவை என்று காலம் முழுவதும் பேசிக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பதால் தீர்வு வந்துவிடாது. தீர்வை நோக்கி நாம் தான் செல்ல வேண்டும்.
பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்பதால் சில விடயங்கள் தொடர்பான அதிகாரம் மாகாணங்களுக்குக் கிடைக்கின்றது. இடம்பெயர்ந்து வாழும் மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியும். மாகாண சபைகளை நிர்வகிக்கின்ற அதேநேரம் முழுமையான தீர்வுக்கான முயற்சியையும் முன்னெடுக்கலாம். அரசியலமைப்பு மாற்றத்துக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கவும் முடியும். முழுமையான அரசியல் தீர்வு என்று வெறுமனே பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பதிலும் பார்க்க இது ஆக்க பூர்வமானது.
சுரேஷ் நாகேந்திரா
0 விமர்சனங்கள்:
Post a Comment