மனிதா எனக்கு ஒரே தாகமாக இருக்கிறது; உடனடியாக நீர் பாய்ச்சு
தாவரங்கள் தமக்கு நீர் போதவில்லை என எழுத்து மூல செய்தியொன்றின் மூலம் மனிதர்களைக் கோரினால் எப்படியிருக்கும்?
இந்த கற்பனைக்கு செயல் வடிவம் கொடுத்துள்ளனர் இஸ்ரேலிய விஞ்ஞானிகள்.
இந்த விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட நவீன உணர் கருவியானது தாவரம் போதிய நீர் இன்றி வாடுவதை துல்லியமாக கணக்கிட்டு, அது தொடர்பான சமிக்ஞைகளை தாவரத்தை பராமரிப்பவரின் கையடக்க தொலைபேசிக்கோ அன்றி கணினிக்கோ எச்சரிக்கை ஒலியுடன் அனுப்பி வைக்கும்.
இந்த உணர்வு கருவிகள், தாவரங்களுக்கு தேவைக்கு அதிகமான நீர் வழங்கப்படுவதை தவிர்க்கவும் உதவுகின்றன.
மேற்படி உணர்கருவிகளை பயன்படுத்துவதால் பயிர்ச் செய்கைக்கான நீர்ப்பாசனத்தை பயனுறுதிப்பாடுள்ள வகையில் முகாமை செய்து, அதனூடாக 50 சதவீதத்துக்கும் அதிகமான நீரைச் சேமிக்க முடியும் என இந்த உணர் கருவியை உருவாக்கிய விஞ்ஞானிகளான கலாநிதி எரான் ராவெக் மற்றும் கலாநிதி அறி நட்லர் ஆகியோர் தெரிவித்தனர். அவர்கள் 7 வருட கால தீவிர ஆராய்ச்சியின் பின்னரே இந்த உணர் கருவிகளை உருவாக்கியுள்ளனர்.
இந்த உணர் கருவியானது "வோக்கி டோக்கி' உபகரண தொழில்நுட்ப அடிப்படையில் செயற்படுவதாகவும் தாவரத்தின் தண்டுக்குள் செலுத்தப்பட்ட உலோக நுண்கருவிகள் மூலம் இந்த உணர்கருவிகள் தாவரத்திற்குத் தேவையான நீரை மதிப்பிடுவதாகவும் மேற்படி விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
250 அமெரிக்க டொலர் செலவில் 5,000 ஓர்கிட் தாவரங்களுக்கு இந்த உணர்கருவிகளை பொருத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment