வன்னி மக்கள் மீதான தொடர் தாக்குதல் குறித்து மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
இலங்கையின் வன்னிப் பகுதியில் அரசாங்கப் படையினர் தொடர்ச்சியாக மக்கள் நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது என ஏ.எப்.பி செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
மக்கள் நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்படுவதில்லை என அரசாங்கம் மறுப்புத் தெரிவித்து வருகின்ற போதிலும், மோதல் தவிர்ப்பு வலயத்தில் இடம்பெறும் சேதங்கள் அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 2700 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள புதுமாத்தளன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் மக்களது எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இந்தச் சம்பவம் தொடர்பாக புதுமாத்தளன் வைத்தியசாலை வைத்தியருடன் தொலைபேசியில் உரையாடிய போதும், அருகில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு நிதியுதவி அளிக்கும் பேச்சுவார்த்தைகளின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு குறித்து சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் வலியுறுத்த வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்திஸ்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment