ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் மகிந்த சமரசிங்க நிகழ்த்திய உரை
கடந்த முறை நாம் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, எமது நாட்டில் பல அடிப்படை மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. நாம் பல சவால்களுக்கு முகம்கொடுத்து வருகின்றோம்.
இறுக்கமான பல தடைகளை நாம் தாண்டி வருகின்ற போது எதிரிடையான பல புதிய விடயங்களையும் நாம் சந்திக்க வேண்டியுள்ளது. முரண்பாட்டுச் சூழலில் இது பொதுவாக நிகழுகின்ற ஒருவிடயம்.
ஆனால் நிச்சயம் இவற்றை ஒருநாள் வெல்லுவோம். மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களில் நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் பேரில் இந்த வெற்றிப் பாதையில் நாம் உறுதியாகப் பயணம் செய்கின்றோம். மேலும் சகலருக்கும் கெளரவத்தை வழங்கக் கூடிய உறுதியான சமாதானத்தை நோக்கிய எமது தேடலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
பல வருடங்களாக இலங்கை பயங்கரவாதப் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றது. இதனால் பல்வேறு இனத்தவர்களும், பல்வேறு சமயத்தவர்களும் பல்வேறு மொழி பேசுகின்றவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலுள்ள அரசியல் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காண்பதில் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் பயங்கரவாத சக்திகள் இதில் அக்கறை காட்டாமல் தொடர்ந்தும் அலட்சியப்படுத்தி வந்தன. இப்போதுதான் இந்த பயங்கரவாதப் பிரச்சினைக்கு ஒரு முடிவுகட்டும் நிலைக்கு எமது நாடு வந்துள்ளது.
இலங்கையின் பயங்கரவாதிகள் இலங்கைக்கு மட்டும் அன்றி முழு உலகுக்குமே தலைவலியாக இருக்கின்றனர் என்பதை இன்று உலக நாடுகள் பல உணர்ந்துள்ளன. இவர்களின் படுகொலைகள், போதைப் பொருள் கடத்தல் என்பன காரணமாக அவர்களை நன்கு புரிந்துகொண்ட பல நாடுகள், அவர்களையும் அவர்களின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் குற்றச் செயல்கள் என்பனவற்றையும் தடைசெய்துள்ளன.
இதன் விளைவாக இலங்கைக்கும் அதன் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாடு என்பனவற்றுக்கு அச்சுறுத்தலாக இருந்துவந்த சக்தியை நசுக்க முடிந்துள்ளது. இருப்பினும் பயங்கரவாதத்தை முற்றாக அழித்து எமது நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தி சகல மக்களுக்கும் சந்தோஷத்தை வழங்க உங்கள் அனைவரதும் ஆதரவும் எமக்கு அவசியமாகின்றது.
1985ஆம் ஆண்டு முதல் இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலேயே, இன்றைய தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. 1985 முதல் 2006 வரை சர்வதேச மட்டத்தில் பல நகரங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பதற்கு நாம் மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் L.T.T.E. பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகி அவர்கள் நன்கு அறிந்த பயங்கரவாதத்திலேயே தொடர்ந்தும் நாட்டம் காட்டினர்.
2003 இல் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிக் கொண்ட L.T.T.E. 2006 இல் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பியது. ஏற்கனவே தாங்கள் பேச்சுவார்த்தை நடத்திய இரண்டு தலைவர்களைக் கொலை செய்துள்ள L.T.T.E. இந்தக் காலப் பகுதியில் எமது இராணுவத் தளபதியை ஒரு கர்ப்பிணிப் பெண் தற்கொலையாளியைப் பாவித்து கொலை செய்ய முயன்றனர்.
அத்தோடு வடக்கு, கிழக்கில் உள்ள எமது படைகள் மீதும் பாரிய தாக்குதல்களை நடத்தினர். இதன் பின்னர்தான் 2007 ஆம் ஆண்டு அவர்களோடு செய்துகொண்ட யுத்த நிறுத்த உடன்பாட்டில் குறிப்பிட்டுள்ள சுய பாதுகாப்புக்கான உரிமை என்ற நிலைப்பாட்டுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையை L.T.T.E. ஏற்கனவே நான்காயிரம் தடவைகள் மீறியுள்ளது என்பதை அதன் கண்காணிப்பாளர்களே உறுதி செய்துள்ளனர்.
இதன் பிறகு இலங்கையில் நடத்தப்பட்ட அனைத்து ஜனநாயக ரீதியான தேர்தல்களிலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு மக்கள் ஜனநாயக ரீதியான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் கடந்த இரண்டு தசாப்தங்களாக நாம் மிகவும் ஆபத்தான சூழலில் பயணம் செய்த இருண்ட குகையின் இறுதியில் இப்போது எம்மால் வெளிச்சத்தைக் காண முடிந்துள்ளது.
பயங்கரவாதப் படைகளை வீழ்த்துவதற்கான எமது இராணுவப் பயணம் இலகுவான ஒன்றல்ல. மோதல்கள் இடம்பெறும் பிரதேசங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை L.T.T.E. தொடர்ந்தும் தடுத்து வருவதால் நாம் எமது இராணுவ மூலோபாயங்களைப் பல தடவைகள் புதுப்பிக்க வேண்டிய நிலைக்கும், அவை குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம்.
சிவிலியன்கள் மீது நாம் ஆகக் கூடுதலான கவனம் செலுத்துவதால் எமது படையினரின் நகர்வும் தாமதமாகி வருகின்றது. நாம் சிவிலியன்களுக்காகப் பாதுகாப்பு வலயம் ஒன்றைப் பிரகடனப்படுத்தியதும், L.T.T.E. இனர் அந்தப் பிரதேசத்துக்குள் தமது ஆயுதங்களை நகர்த்தி பொதுமக்கள் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் அந்தப் பிரதேசத்தையும் தமது தேவைகளுக்குப் பயன்படுத்தினர். இந்தப் பாதுகாப்பு வலயம் இப்போது மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. தற்போது L.T.T.E. இனரின் கொலைகாரப் பட்டாளம் நாற்பது சதுர கிலோ மீற்றருக்கும் குறைவான பரப்பளவுக்குள் முடக்கப்பட்டுள்ளது.
எமது அடிப்படைக் கவனம் இந்தப் பிரதேசத்திற்குள் சிக்கி L.T.T.E. இனரால் வெளியேற முடியாமல் தடுத்துவரும் பொதுமக்களின் பக்கமே திரும்பியுள்ளது. அண்மையில் எமது நாட்டுக்கு விஜயம் செய்த ஐ. நா. மனித உரிமை விவகார உதவிச் செயலாளர் நாயகம் சேர். ஜோன் ஹோம்ஸ¤ம் இதனை வலியுறுத்திவந்தார். இந்த விடயத்தில் கடந்த சில வாரங்களாக சர்வதேச அமைப்புக்கள் பலவும் எம்மோடு இணைந்து L.T.T.E. பலவந்தமாகப் பிடித்து வைத்துள்ள பொதுமக்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். உண்மையில் நாம் எதிர்நோக்கியிருப்பது மிகவும் மோசமானதோர் பணயக்கைதிகள் விவகாரமாகும்.
முரண்பாட்டுச் சூழலில் மக்களை பணயக் கைதிகளாக்குவது, சர்வதேச ரீதியில் மனிதாபிமானச் சட்டங்களை தெளிவாக மீறும் ஒரு செயலாகும். எனவே அப்பட்டமாக இடம்பெற்று வரும் இந்தப் பணயக் கைதிகள் விடயத்தில், அவர்களை ஆயுத முனையில் பலாத்காரமாக தடுத்துவைத்திருக்கும் L.T.T.E. இனர் மீது இந்தச் சபையும், அதன் அங்கத்தவர்களும் அதன் அங்கத்துவ நாடுகளும் தம்மாலான சகல நெருக்குதல்களையும் பிரயோகிக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும். L.T.T.E. இனர் மக்களுக்குரிய சுதந்திரத்தை வழங்கினால், நிச்சயம் அவர்கள் இராணுவக் கட்டுப்பாடு பிரதேசங்களுக்குத் தப்பினார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு, அப்போது அவர்களின் தேவைகள் அனைத்தும் கவனிக்கப்படும் என்ற உறுதியையும் நாம் வழங்குகின்றேன்.
எமது நாட்டில் தலைவிரித்தாடிய பயங்கரவாதச் சக்தியை நாம் இப்போது ஒரு சிறிய பொதியாகக் கட்டி இலங்கையின் ஒரு மூலைக்குள் முடக்கியுள்ளோம். எமது மக்களைக் காப்பாற்றிப் பராமரிக்கும் பணியிலிருந்து நாம் பின்வாங்கவில்லை. மோதல்கள் தொடங்கியது முதல் இற்றைவரை ஐ. நா. மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பனவற்றின் துணையோடு இலங்கை அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான அனைத்து நிவாரணப் பொருள்களையும் அனுப்பி வந்துள்ளதோடு, மருத்துவ மற்றும் கல்விச் சேவைகளையும் தொடர்ந்து வழங்கி வந்துள்ளது.
வன்னியில் சிக்கியுள்ள மக்களின் எண்ணிக்கைகள் குறித்து மிகைப்படுத்தப்பட்ட தகவல்களே வழங்கப்பட்டு வந்துள்ளன. இருந்தாலும் இதை தெரிந்துகொண்டும் கூட அந்த எண்ணிக்கைக்கான உணவு மற்றும் நிவாரணப் பொருள்களை நாம் தொடர்ந்து வழங்கி வந்துள்ளோம்.
சில உதவிகள் திசை திருப்பப்படுவதாக நாம் தகவல் அறிந்திருந்தும் கூட அவற்றை நிறுத்தாமல் வழங்கி வந்துள்ளோம். சில அரசாங்க ஆஸ்பத்திரிகளில் L.T.T.E. இனர் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். அவர்களது உறுப்பினர்களுக்கு அங்கு பிரத்தியேகமான சிகிச்சைகள் வழங்கப்படுவதை தெரிந்திருந்தும் கூட நாம் அங்கு மருத்துவ நிவாரணங்களை அனுப்பியுள்ளதோடு அரச வைத்தியர்களும் தொடர்ந்து சேவையில் இருந்தனர்.
இவ்வாறு பொதுமக்களை கருத்திற்கொண்டு நாம் மிகவும் அவதானமாக நடவடிக்கைகளை எடுத்துவருகின்ற போதிலும் L.T.T.E. மற்றும் அவர்களின் முகவர்கள் உலகம் முழுவதும் சிவிலியன் உயிரிழப்புக்கள் குறித்து போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். எமது படை வீரர்களை இலக்குவைத்து L.T.T.E. பரப்பிவரும் இந்தப் போலிக் கதைகள் தான் அவர்களிடம் நெஞ்சியுள்ள இறுதி ஆயுதம், சர்வதேச ஊடகம், மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் அரச உயர் மட்டத்தினரிடையிலும் இத்தகைய பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் தீவிரமாக முன்னேறிவரும் படையினரைத் தடுப்பதற்கு L.T.T.E. இனர் தான் அப்பாவிப் பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது தான் உண்மையாகும். இலங்கை இராணுவத்தின் சகல மட்டத்தினரும் யுத்த நீதிகளையும், தர்மங்களையும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தொடர்பில் படையினருக்கு கடந்த பத்தாண்டுகளுக்கு முன் பயிற்சிகள் கட்டாயப்படுத்தப்பட்டன. இது இலங்கைப் படையினருக்கு இப்போது சிறந்த பலனளித்துள்ளது.
நாம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளிலும் மிகவும் அவதானமாக இருக்கின்றோம். சட்டத்துக்கு கட்டப்பட வேண்டிய அவசியத்தை நன்கு உணர்ந்துள்ளோம். எமது படைவீரர்கள் பலரின் உயிரிழப்புக்களுக்கு மத்தியிலும் கூட நாம் இந்த சட்டதிட்டங்களைச் விதிமுறைகளையும் தீவிரமாகக் கடைப்பிடித்து வருகின்றோம்.
இதுவரை 36 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் L.T.T.E. பிடியிலிருந்து தப்பி வந்துள்ளனர். இவர்களுள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வரப்பட்டவர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் இப்போது முழு வசதிகளும் கொண்ட நலன்புரிக் கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எமது சக பிரஜைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க நாம் உறுதி பூண்டுள்ளோம். இவர்களுக்கு உளவள ஆலோசனைகள் தொழில் பயிற்சிகள் என்பனவற்றையும் வழங்கி வருகின்றோம். இந்த முயற்சிகளில் எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி வரும் ஐ. நா. பிரதிநிதிகள் மற்றும் ஐ. நா. முகவராண்மை அமைப்புக்களுடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற நாம் உறுதி பூண்டுள்ளோம். L.T.T.E. இனரின் செல்வாக்கை ஒழித்துக் கட்டுவதன் மூலம், இந்த விடயத்தில் சாதகமான ஒரு முடிவை எட்டமுடியும் என்பதையும் நாம் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். 20 வருடங்களுக்கு முன் வட பகுதியில் இருந்து L.T.T.E. இனரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுள் கணிசமான தொகையினர் இன்னும் இடம்பெயர்ந்த மக்களாக முகாம்களில் வசித்து வருகின்றனர்.
இவர்களின் பிரச்சினைக்கு முடிவுகாண அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசுகள் மேற்கொண்ட முயற்சிகளும், L.T.T.E. இனருடன் பேச்சுவார்த்தை நடத்திதான் இதற்கு முடிவுகாண வேண்டும் என்ற அவசியம் இருந்ததால், பலனளிக்கவில்லை.
நலன்புரி முகாம்களில் வசதிகளை ஏற்படுத்துவதற்கு ஐ. நா. முகவராண்மைகளோடு இணைந்து நாம் எல்லா முயற்சிகளையும் எடுத்துள்ளோம். உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களோடு நடந்துகொள்ள வேண்டிய விதம் பற்றி பாதுகாப்புப் படைகளுக்கு U.N.H.C.R. தேவையான பயிற்சிகளையும் வழங்கி வருகின்றது. சிவிலியன்களின் சுதந்திர நடமாட்டத்தை L.T.T.E. இனர் தொடர்ந்தும் தடுக்க முடியாது என்ற நிலை விரைவில் ஏற்படுத்தப்படும்.
அத்தகைய நிலை ஏற்படும் போது மேலும் பலர் இராணுவக் கட்டுப்பாடுப் பகுதிகளை நோக்கி இடம்பெயருவர் என நாம் எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு வரும் அனைவரையும், இப்போதுள்ளவர்களையும் சேர்த்து இலங்கைப் பிரஜைகள் என்ற ரீதியில் பராமரிக்க முடியும் என்ற நம்பிக்கை அரசுக்கு உண்டு.
இறுதியில் இவர்கள் அனைவரும் பாதுகாப்பான ஒரு எதிர்காலத்துடன் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்பி அனுப்பப்படுவார்கள் என்பதில் உறுதி. பாரிய உள்கட்டமைப்பு அபிவிருத்திகளையும், விஷேடமாக உள்ளூராட்சி மன்ற அமைப்புக்களையும் மாகாண சபைகள் போன்ற ஜனநாயக நிறுவனங்களையும் மீள ஏற்படுத்தினால் மட்டுமே இது சாத்திய மாகும்.
பயங்கரவாதத்தை முறியடிக்கும் இராணுவ இலக்கில் வெற்றிபெற்ற பின் சமாதானத்தை அடைந்துகொள்ளும் அடுத்தகட்ட நடவடிக்கை களை நாம் திட்டமிட்டுள் ளோம். நீண்ட காலமாக தேசிய மட்டத்தில் இருந்து வரும் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியமா கின்றது. இந்த அரசியல் தீர்வை ஆயுதங்களால் திணிக்கவும் முடியாது பயங்கரவாதத்தால் அடைய வும் முடியாது. இதனால் தான் இலங்கையர் அனை வராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தர அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்து வதாக நாம் தீவிர கவனம் செலுத்தியுள்ளோம். இந்தத் தீர்வானது சமூக சமத்துவ உறுதிப்பாடு மற்றும் அடிப் படைச் சுதந்திரம் என்பன வற்றை மட்டும் வழங்கு வதாக மட்டுமன்றி சகல பிரஜைகளையும் அதிகாரப் பகிர்வின் மூலம் வலுவூட் டுவதாகவும், அரசாங்கத்தை மக்களுக்கு மிக நெருக்கமாகக் கொண்டுவரும் ஒரு தீர்வாகவும் இருக்க வேண்டும்.
சமாதானத்தில் நாட்டமின்றி L.T.T.E. பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிக் கொண்டதையடுத்து, இதற்கு முன் ஓரம்கட்டப்பட்ட ஏனைய ஜனநாயக சிறுபான்மைக் கட்சிகளுடன் நாம் இணைந்து பணியாற்ற வேண்டியதாயிற்று. L.T.T.E. தன்னை தமிழ் இனத்தின் ஏக பிரதிநிதி என்று கூறிக்கொண்டு தமிழ் தலைவர்களை கொன்று குவித்தவாறே இந்தக் கட்சிகளையும் ஓரம்கட்டி வைத்திருந்தது. இவற்றுக்கு மேலதிகமாக சர்வ கட்சிப் பிரதிநிதிகளின் சிபார்சின் படி இலங்கை இந்திய உடன்படிக்கையைத் தொடர்ந்து 1987 இல் ஏற்படுத்தப்பட்ட அரசியல் யாப்பின் 13 வது திருத்தத்தை நாம் பூரணமாக அமுல்செய்துள்ளோம் L.T.T.E. இன் நெருக்குதல் காரணமாக, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை அரசியல் வாதிகள் சிலர் இந்தத் திருத்தச் சட்டமூலத்தை அமுல் செய்யத் தவறியமை வேதனைக்குரியதாகும். அந்த வகையில் இன்று நாம் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முதலமைச்சர் ஒருவரின் தலைமையின் கீழ் முழு அளவில் செயற்படக்கூடிய ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை ஆட்சி முறையை நிறுவியுள்ளோம். வடக்கிலும் இது விரைவில் சாத்தியமாகும் என்பதே எமது நம்பிக்கையாகும்.
எமது இனப் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருந்தது மொழி. அரசியல் யாப்பின் பிரகாரம் மொழி உரிமையை உறுதிசெய்ய அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
மனித உரிமைகள் தொடர்பாக U. N. D. P. அதிகாரிகளுடனும், ஐ. நா. மனித உரிமை ஆலோசனை அதிகாரிகளுடனும் நாம் விரிவான கலந்துரையாடல்களை இப்போது நடத்துவருகின்றோம். ஐ. நா. தரப்பிலிருந்து இதற்கு பூரண ஆதரவும் கிடைத்து வருகின்றது. இந்த விடயத்தில் தேசிய செயல்திட்டம் ஒன்றுக்கான ஆரம்ப கட்டப் பணிகளில் நாம் இப்போது ஈடுபட்டுள்ளோம். இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான அளப்பரிய முன்னேற்றத்துக்கும் நாட்டில் இது தொடர்பாக உறுதியான தேசிய பாதுகாப்பு வலை பின்னல் ஒன்றை கட்டியெழுப்பவும் இது பெரிதும் உதவியாக இருக்கும்.
மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அது தொடர்பான வேலைத் திட்டங்களை அமுல் செய்யவும் அடி மட்டத்தில் இருந்து நாம் பல திட்டங்களை அமுல் செய்து வருகின்றோம். இதில் ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பிரச்சினைகள் மற்றும் ஆயுதக் குழுக்களின் பிடியில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் என்பனவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. U. N. I. C. E. F. உதவியோடு மிக அண்மையில் இதற்கான தேசிய வேலைத் திட்டம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரசாரத்தை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்.
பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்படும் இந்தச் சிறுவர்களின் நலன் கருதி புனர்வாழ்வு மையம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகளைப் பொறுத்தமட்டில் ஐ. நா. பாதுகாப்புச் சபையின் பணிக் குழு, மற்றும் அதன் விசேட பிரதிநிதி ஆகியோரின் சிபார்சுகளை அமுல்செய்ய நாம் ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றோம். மற்றும் அது தொடர்பான எமது சொந்த உடன்பாடுகள், கடப்பாடுகள், சர்வதேச நியதிகள் என்பனவற்றையும் நாம் முழுமையாகப் பேணி வருகின்றோம்.
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் மேலதிக கலந்துரையாடல்களுக்கும் நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். இது சம்பந்தமாக எமது நண்பர்களோடு நாம் இருதரப்பு மற்றும் பல்தரப்பு கலந்துரையாடல்களை பல வருடங்களாக நடத்தியும் வருகின்றோம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment