இலங்கை வரலாற்றில் எதிரி ஒருவருக்கு நான்கு மரண தண்டனைகள்
இலங்கையில் முதற் தடவையாக குற்றவாளியொருவருக்கு நாலு மரண தண்டனைகள் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம் .இளஞ்செழியன் இத் தீர்ப்பை வழங்கினார்.
1993 ஆம் ஆண்டு திருகோணமலை கோமரசங் கடவல இராணுவ முகாமில் 2 இராணுவ கோப்ரல்களை சுட்டுக் கொன்றது. மேலும் ஒரு இராணுவ கோப்ரலை சுட்டுக் காயப்படுத்தி கொலை செய்ய முயற்சி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் இராணுவ சிப்பாய் சனத் பிரேமரட்ண என்பவருக்கு எதிரான வழக்கில் அவரை குற்றவாளியெனத் தீர்ப்பளித்த நீதிமன்றம் இரு கொலைகளுக்கும் இரு மரண தண்டனைகளை வழங்கி தீர்ப்பளித்ததுடன் கொலை முயற்சி குற்றத்துக்கு 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதேவேளை இதே இராணுவ சிப்பாய் 1999 ஆம் ஆண்டு இரு பொது மக்களை சுட்டுக் கொலை செய்ததுடன் ஒருவரை சுட்டுக் காயப்படுத்திய வழக்கில் குற்றவாளியெனத் தீர்ப்பளித்த நீதிமன்றம் இரு கொலைகளுக்கும் இரு மரண தண்டனைகளை வழங்கியதுடன் கொலை முயற்சிக் குற்றத்துக்கு 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்குவதாகவும் நீதிபதி தீர்ப்பில் கூறினார்.
இரு வழக்குகளுக்கும் ஒரே நாளில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளியென தீர்ப்பளித்த பின் உனது இறுதி விருப்பமாக ஏதாவது கூற விரும்புகிறாயா என எதிரியிடம் கேட்டபோது கௌரவ நீதிபதி அவர்களே நீங்கள் இதுவரை பல வழக்குகளில் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்புக் கூறியுள்ளீர்கள். ஆனால் ஒருவர் கூட தூக்கில் இடப்படவில்லை. முதல் தடவையாக என்னைத் தூக்கிலிட்டு கொல்லும்படி உத்தரவு பிறப்பியுங்கள் என எதிரி கேட்டுக் கொண்டார்.
நீதிபதி தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்க முன்னர் நீதிமன்ற விளக்குகள் அணைக்கப்பட்டன. அனைவரும் எழுந்து சிரம் தாழ்த்திய வண்ணம் நின்றனர். நாலு மரண தண்டனைகள் வழங்குவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். அதே நேரம் முன்னைய வழக்குகளில் தூக்குத் தண்டனைத் தீர்ப்பு அனுபவித்த பின்னர் அவர்களது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்து வந்தேன். அதேபோன்று உன்னையும் தூக்கில் இட வேண்டாம் எனவும் அவற்றை ஆயுள் தண்டனைகளாக குறைக்குமாறும் ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்ததாக எதிரிக்கு நீதிபதி கூறினார்.
இலங்கை வரலாற்றில் ஒருவருக்கு நான்கு மரண தண்டனைகள் விதிக்கப்பட்டதையடுத்து திருமலை மேல் நீதிமன்ற வளாகத்துக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸார் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். நீதிபதி நீதிமன்றத்தை கலைத்து விட்டு சென்றவுடன் திருமலை உதவிப் பொலிஸ் அத்தியட்சர் தலைமையிலான ஆயுதம் தாங்கிய பொலிஸ் படையணியினர்உடனடியாக நீதிமன்ற வளாகத்துக்கு வந்து மறியற்சாலை உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கி எதி?யை கண்டி போகம்பரை சிறைச்சாøலக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அரச சட்டவாதி செல்வி சுகந்தி கந்தசாமி வழக்கை நெறிப்படுத்தினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment