புலிகளே எம்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். காயமடைந்த குழந்தையின் தாயார் தெரிவிப்பு
வடக்கில் புதுமாத்தளன் பகுதியிலிருந்து தப்பிவந்த பொதுமக்களை இலக்கு வைத்து புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று மாதக் குழந்தையொன்று படுகாயமடைந்துள்ளது.
அக் குழந்தையை தாயார் வைத்திருந்த சமயமே குழந்தையின் வயிற்றுப் பகுதியில் புலிகளின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட இரத்தப்பெருக்குக் காரணமாக செய்வதறியாத அக்குழந்தையின் தாய் இராணுவத்தினரை நோக்கி ஓடிச்சென்று தமது குழந்தையைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் நிலையை அவதானித்த படை வீரர்கள் உடனடியாக அவ்விடத்திலேயே அவசர சிகிச்சை வழங்கியதுடன் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளதுடன் தற்போது அக்குழந்தை அங்கு அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வைத்து தகவல் தெரிவித்துள்ள அந்த குழந்தையின் தாய் புலிகளே தம்மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவித்ததுடன் தப்பிவரும் பொதுமக்கள் மீத ஆண் பெண் வயது பேதம் பாராது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை புலிகளின் பிடியிலிருந்து படகுகள் மூலம் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ள 131 பொதுமக்கள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு கரைசேர்க்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. சுண்டிக்குளம் கடற்பிரதேசத்திலிருந்து காப்பாற்றப்பட்ட 131 பொதுமக்களும் யாழ்.குடாநாட்டிலுள்ள முனைப் பிரதேசத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவர்களில் 37 ஆண்களும், 28 பெண்களும், 66 சிறுவர்களும் அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் கடற்படையினர் வழங்கியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment