திரு. ஆனந்தசங்கரி அவர்கள் பிரபாகரனுக்கு எழுதியுள்ள மடல்
12.03.2009
திரு. வே. பிரபாகரன்,
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்
அன்புள்ள பிரபாகரன்,
எம் மக்களை காப்பதற்கான இறுதி சந்தர்ப்பம்
உமது கட்டுப்பாட்டின் கீழ் நீர் வைத்திருக்கும் 81,000 குடும்பங்களைச் சேர்ந்த, மூன்று இலட்சத்து முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் சாபம் உம்மை நிம்மதியாக வாழவிடாது. உம்மையும் உமது சந்ததியினரையும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இன்றும் உம்மை தொடர்ந்து ஆதரிப்பவர்களையும், அவர்களின் சாபம் விட்டுவைக்காது. இப்போதாவது உமது மனதை மாற்றி நீர் தடுத்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்யும்படி கேட்கின்றேன். அம்மக்கள் பட்டினியால் இறக்க ஆரம்பித்து விட்டனர். அதற்கு முழுப்பொறுப்பையும் நீரே ஏற்கவேண்டும்.
என்னசெய்வது என அறியாது உமது தற்போதய இருப்பிடம் தெரியாதமையால் இதை ஓர் பகிரங்க கடிதமாகவே எழுதுகின்றேன். இக்கட்டத்திலேனும் நீர் உருவாக்கிவைத்த சிலவற்றையேனும் மாற்றியமைக்க முடியாதாவென கேட்க விரும்புகின்றேன். வழமைபோல் இதற்கும் உம்மிடமிருந்து எதுவித பதிலையும் எதிர்பார்க்கவில்லை. என்றாலும் நீர் இந்த நிலைமைக்கு ஆளாக்கிய மக்களை காப்பதற்கு, உறுதியான சில நடவடிக்கைகளை எடுப்பீர் என நான் உண்மையாக நம்புகின்றேன். நல்ல எண்ணத்துடன் என்னால் எழுதப்பட்ட கடிதங்களை, அவற்றில் அனேகமானவை உம்முடைய உமது போராளிகளுடைய நடவடிக்கைகளை கண்டித்திருந்தும், அவற்றை நீர் பாரதூரமாக கருதாதமை துர்பாக்கியமே.
இவ்வாறு செய்வதற்கு எனக்கு எதுவித சுயநல நோக்கமும் இருக்கவில்லை. நான் எவருடைய முகவராகவும் செயற்படவில்லை. நான் என்றும் உமது ஆயுத போராட்டத்தை ஆதரித்தவனுமில்லை. எப்போதும் வன்முறையற்ற போராட்டத்திலேயே நம்பிக்கை கொண்டவனாகவே வாழ்ந்தேன். எவரையும் பகைக்காமல், அகிம்சை வழியில் எமது பிரச்சினையை வெற்றிகரமாக அணுகியிருக்கலாம் என இன்றும் எண்ணுகின்றேன். நான் உம்மை கண்டித்து எழுதிவந்தமைக்கு, இரு காரணங்கள் பிரதானமாக இருந்தன. அதில் ஒன்று தொடர்ந்து உமது குற்றங்களை சுட்டிக்காட்டிவந்தால், உம்மை அதன் மூலம் ஜனநாயக வழிக்குத் திருப்பலாம் என எண்ணினேன். எமக்கு எதுவித அந்தஸ்தும் கோராது, உமக்கு முழு ஆதரவு தந்ததன் நோக்கமும் அதுவே. மறு காரணம் உமது கட்டுப்பாட்டில் கால் நூற்றாண்டுக்குமேல் நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் விபரிக்கமுடியாத கஸ்டங்களை அனுபவித்துவந்த மக்களை, விடுதலையடையச் செய்யலாம் என கருதினேன். அம்முயற்சியில் உம்மனதை பெருமளவில் நோகடித்து உமது வெறுப்பையும் உமது போராளிகளின் கோபத்தையும் சம்பாதித்திருப்பேன். அது பற்றி நான் கவலைப்படவில்லை. என் முயற்சி சுயநலமற்ற உண்மையானதும் நேர்மையானதுமென நான் முழுக்க நம்பியதால் எனது உயிருக்கு ஏற்படக்கூடிய எந்த ஆபத்தையும் எதிர் நோக்க தயாராயிருந்தேன். எனது உண்மையான அக்கறை தமிழ் மக்களின் நன்மை தழுவியதையே பிரதிபலித்துக்காட்டியது என்பதை நீரும் பாராட்டுவீர் என திடமாக நம்புகின்றேன். இந்த நிலைப்பாட்டை எடுத்தமையால் உமக்காதரவான உலகம் முழுவதிலும் செயற்படும் அச்சு, மின் ஊடகங்கள் மூலமாக ஏற்படுத்திய அபகீர்த்தியும் மன உளைச்சலும் ஒரு மனிதனின் பொறுமையின் எல்லையை தாண்டியவையாகும். அவை மிக கீழ் தரமானவை என்றாலும் அவற்றை தாங்கிக்கொண்டேன்.
அரசியற் பிரமுகர்களாகிய இந்திய முன்னாள் பிரதமர் கௌரவ ராஜீவ்காந்தி, ஜனாதிபதி ஆர். பிரேமதாசா, ஜனாதிபதி வேட்பாளர் கௌரவ காமினி திசாநாயக்க அவருடன் பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் படுகொலைகள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொலைமுயற்சிகள் ஆகியவற்றில் நீர் சம்மந்தப்பட்ட கால கட்டத்திற்கு உமது சிந்தனையை பின்னோக்கி விட்டுப்பாரும். இச் செயல்களால், நீர் அடைந்த இலாபம்தான் என்ன? தமிழ்நாடு உட்பட முழு இந்தியாவினதும் சிங்கள மக்களினதும் கடும் வெறுப்பை சம்பாதித்தீர். அண்மையில் எமது இனப்பிரச்சினை சம்மந்தமாக தமிழ் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட எழுச்சி வெறும் அரசியல் இலாபந்தேடும் தந்திரமே. என்னால் மீணடும் மீண்டும் விடப்பட்ட அழைப்பை ஏற்று ஒரு தமிழ் நாட்டு தலைவரேனும் தள நிலைமையை அறிய வேண்டுமென ஆர்வம் கொண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை.
தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் திரு. அ. அமிர்தலிங்கம் யாழ் மாவட்டசபை தலைவர் திரு எஸ் நடராசா, யாழ்மேயர் திரு. பொ.சிவபாலன், அரசியற் சட்ட வல்லுனர் கலாநிதி நீலன்திருச்செல்வம், யாழ் நகர மேயர் சறோஜினி யோகேஸ்வரன் இன்னும் பல அரச அதிகாரிகள் கல்விமான்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுர் அரசியல் வாதிகள் இது போன்று இன்னும்; பல பிரமுகர்கள் உம்மால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உமது கொலைகள் தமிழ் தலைமையில், பெரும் இடைவெளியை ஏற்படுத்தியது. உயர் மட்ட தலைவர்கள் பலர் கொலை செய்யப்பட்டமையால் தமிழர் மத்தியில் காளான்கள் போல பல புதிய தலைவர்கள் உருவானார்கள். எக்குழுவினருடனும் முரண்படாது செயற்பட்ட மிதவாதக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியை கூட நீர் விட்டுவைக்கவில்லை. சில கூட்டணி தலைவர்களை கொன்றீர். ஏனையவர் சிலரை பாராளுமன்ற பதவியைக் கொடுத்து விலைக்கே வாங்கி விட்டீர். எந்த ஒரு சிங்களவராலோ அல்லது இஸ்லாமியராலோ என்றும் ஒருவித தீங்கும் விளைவிக்கப்படாத இந்த தமிழ் தலைவர்களை, பூரணமாக அற்றுப் போகச்செய்ய அந்த தமிழ் தலைவர்கள் உமக்கு என்ன தீங்கு செய்தார்கள்? இஸ்லாமியரான, இந்து சமயத்தில் மிக பாண்டித்தியம் பெற்றிருந்த மன்னார் அரச அதிபராய் இருந்த என் நண்பன் ஜனாப் மக்பூல் அவர்களை நினைத்து இன்னும் அழுகின்றேன அவரைக் கொன்றதாலேயோ, அல்லது ஒரு சிங்களவர் இஸ்லாமியர் எதுவித தீங்கு விளைவிக்க எண்ணாத மற்றத்தலைவர்களை கொன்று என்ன இலாபத்தை அடைந்தீர்? படிப்படியாக உமது பெறுமதியினை இழந்ததைத்தவிர.
தமிழ் மொழியை தாய் மொழியாகக்கொண்ட இஸ்லாமிய சகோதரர்களை 10ம் திகதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக்கூட கொண்டாடவிடாது 15 அப்பாவி மக்களை பலி எடுத்தும் 40க்கு மேற்பட்டோரை காயப்படுத்தியும் உள்ளீர். இப்போதாவது உமது இரத்த வெறி அடங்கியதா? எப்படியேனும் ஓர் இனக்கலவரத்தை ஏற்படுத்தவேண்டுமென நீர் எடுத்துவரும் முயற்சியில் இதுவும் ஒனறு. உமது பொறிக்குள் இனியும் இந்நாட்டு மக்கள் விழத்தயார் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளவும்.
எத்தனை அப்பாவி சிங்களவர்கள், தமிழர்கள் இஸ்லாமியர்களை நீர் இரத்தத்தால் குளிப்பாட்டியுள்ளீர்? பள்ளி வாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி இஸ்லாமிய சகோதரர்களை ஒரு தடவைக்கு மேல் படுகொலை செய்துள்ளீர். பௌத்த மதத்தினருக்கு மிகவும் புனித நகராகிய அனுராதபுரத்தில் வைத்து பௌத்த யாத்திரிகளை படுகொலை செயதீர். உலகப் பிரசித்த பெற்ற புத்த பெருமானின் புனித தந்தங்களை கொண்டுள்ள கோவிலை அழிக்க முற்பட்டீர். ஓர் பேரூந்தில் நிறைந்திருந்த பௌத்த குருமாராக பிரதிக்கினை செய்யப்பட்ட சிறுவர்களை படுகொலை செய்ய உமது உள்ளம் எவ்வாறு இடம் கொடுத்தது? வட பகுதியில வாழ்ந்த இஸ்லாமிய சகோதரர்களை ஈவு இரக்கமின்றி அவர்களின் சகல சொத்துக்களையும் பறிமுதல் செய்துவிட்டு வெறும் 500 ரூபா கொடுத்து வெளியேற்றினீர். எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த சிறு பாலகர்களைத்தன்னும் விட்டுவைத்தீரா? பல அப்பாவி சேனை விவசாயிகளை காரணமின்றி சுட்டுத்தள்ளினீர்.
எத்தனை கிளைமோர் பொறி, நிலப் பொறி, கைக்குண்டு தாக்குதல்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான பெருமளவு அப்பாவி சிங்கள மக்களையும் அவர்களுடன் அப்பாவி தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க காரணமாக இருந்திருக்கின்றீர். எத்தனை வாழ்விழந்த ஆண் பெண்கள் எத்தனை அநாதைகள் ஆகியோரை உருவாக்கியுள்ளீர்?. எத்தனை பேரை கால், கைகளை கண்பார்வையை இழக்க செய்துள்ளீர்?; எத்தனை பணக்காரர்களை ஒரே இரவில் ஓட்டாண்டியாக்கியுள்ளீர்?. அவர்களுக்கு எதைத்தான் விட்டுவைத்துள்ளீர்?. அவர்களின் விவசாயமும் கைத்தொழிலும் எங்கே?. அவர்கள் வீடுகள் வீட்டுத் தளபாடங்கள் வாகனங்கள் எல்லாம் எங்கே?. அவர்களின் கல்வி எங்கே? அத்தனையும் அழிந்து விட்டன. இதுதான் ஊழ்வினையா? என மக்கள் கேட்கின்றார்கள் அப்படியாயின் உமது கட்டுப்பாட்டின் கீழ் வாழ்ந்த, இத்தனை துன்பங்களை அனுபவித்த மக்களுக்கேன் இந்த நிலை வரவேண்டும் என, பிற நாட்டிலிருந்து பண உதவி செய்து, இத்தனையும் செய்ய உமக்கு உற்சாக மூட்டிவிட்டு, தம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடும் எமது வெளிநாட்டு உறவுகளிடம் நான் கேட்கின்றேன்;. இந்த அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட நஸ்டத்தை யாராலும் கணக்கிடமுடியுமா? உமது கட்டுப்பாட்டில் வாழ்ந்த காலத்தில் அனுபவித்த கொடூரங்களை யாராலும் விபரிக்கமுடியுமா? இதெல்லாம் முடிந்த கதை. நடந்தது நடந்ததுதான். ஆனால் அதற்கு பரிகாரமாக சிலவற்றை நீர்;; தாமதமின்றி செய்தால் பலவிடயங்களில் முன்னேற்றம் காணமுடியும். தாங்கள் வைத்திருந்த இப்போது முழுக்க இழக்கும் தறுவாயில் உள்ள சில பொருட்களையேனும் மீட்டெடுக்கலாம் அல்லவா.
இவையும் இன்னும் பல விடயங்கள் நடந்துவிட்டன் உமது செயற்பாடுகள் பல தொகுப்புக்களாக எழுதலாம் அவற்றின் சுருக்கத்தின் ஓரு துளியே நான் எழுதியுள்ளவை. உமது அழிவுச் சாதனை கோடானுகோடி பெறுமதியான எமது மக்களின் உடமைகளுக்கும், உயிர்களுக்கும் பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. தம் வீடுகளைவிட்டு இடம் பெயர்ந்த மக்கள் மீளச்சென்ற போது எதையும் காணமுடியவில்லை. எனது கிளிநொச்சி வீட்டில் கூட எதுவும் இருக்கவில்லை. ஒவ்வொரு தடவையும், இடம் பெயர்ந்து சென்ற மக்கள் தம்முடன் எடுத்துச் செல்லக்கூடியவற்றை மட்டுமே எடுத்துச்சென்றனர். திரும்ப வீட்டுக்கு வந்த போது எதுவும் கிடைக்கவில்லை மன்னார் தொடக்கம் உமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் தமது உடமைகள் அத்தனையையும் கைவிட்டுவிட்டே சென்றனர். அதே போலவே வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கும் நடந்தது. இதுவே கிழக்கு மாகாண மக்களுக்கும் நடந்தது. இவ்வாறு இடம் பெயர்ந்த மக்கள் புதிதாக தற்காலிகமாக வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைக்கப்பட்ட வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் எப்போது வீடுகளுக்கு திரும்புவார்களோ தெரியாது. அதற்கு பல மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் அவர்கள் தம் வீடுகளுக்கு திரும்பும்போது அங்கே எதுவும் இருக்கப்போவதில்லை.
நான் எழுதிய கடிதங்கள் உம்மிடம் இருப்பின், அல்லது நான் எழுதியது உமக்கு ஞாபகம் இருப்பின், உமது முன் சிந்தனையற்ற செயற்பாடுகளின் விளைவுகள் புரியும். ஆயுதங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு போகுமாறு எத்தனை தடவை மன்றாடி கேட்டிருந்தேன். ஏதாவது ஒரு கட்டத்திலேனும் எனது புத்திமதிகளைக் கேட்டு சரியாக செயற்பட்டிருந்தால் எல்லாத்தமிழ் மக்களுக்கும் ஏதாவது மிஞ்சி இருந்திருக்கும். இப்போது கால் நூற்றாண்டுக்குமேல் ஆயுதப் போராட்டம் நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை பலி கொடுத்து எம் அனைவரையும் ஓட்டாண்டியாக்கியதுதான் மிச்சம். வட பகுதி மக்களில் எத்தனை பேர் தம் உடமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் இன்று உணவுப் பொட்டலங்களை பெற வரிசையில் காத்து நிற்கின்றனர். எனது ஞாபகத்துக்கு எட்டியவரையில் வன்னிப் பகுதியில் பிச்சைக்காரரை நான் சந்தித்ததே இல்லை.
நீர் நினைத்தது போல், அத்தனையும் நடக்கும் என எதிர் பார்க்கவேண்டாம். அடுத்து வரும் சில நாட்களில் எதுவும் நடக்கலாம். மேலும் மேலும் மக்கள் பசியாலும் தாகத்தாலும் மடியக்கூடும். பசிக்கெர்டுமையால் ஏற்கனவே 13 பேர் இறந்துவிட்டதாக தெரிய வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில் பெரும் தொற்று நோய் கூட பெருமளவில் ஏற்படலாம். வன்னி மக்களுக்கு, பெரும் அனர்த்தம் கூட எதிர் பாராமல் நடக்கலாம் என எச்சரிக்கையாக இருக்கவும். இப்போது உமது கட்டுப்பாட்டுக்குள் அப்பாவி மக்களை வைத்திருப்பதனால் என்ன இலாபத்தை அடைகிறீர். அங்கே உம்மிடம் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட ஆண் பெண் பிள்ளைகள் ஆகியோர் உள்ளனர். அவர்களில் அநேகர் நோயாளிகளாகவும் காயப்பட்டவர்களாகவும் உள்ளனர். சிலர் முதியவர்களாகவும், நலிந்தவர்களாகவும் உள்ளனர். பல ஆண்டுகள் நீர் தொடர்ந்து போரிட்டாலும் உமது தற்போதய நிலைமைக்கு உம்மால் வர முடியுமென நான் எண்ணவில்லை. யுத்தம் முடிந்து விட்டது என்றே எம்மால் உணர முடிகிறது. இப்போது நடப்பதெல்லாம் 81000 குடுமபத்தினர் திணித்து வைக்கப்பட்டு வாழும் சிறுபகுதியை, துடைத்தெடுத்து அப்பகுதியில் யுத்ததிற்கு முற்றாக முடிவு கட்டும் பணியே நடக்கின்றது காலவரையின்றி இம் மக்களை தடுத்துவைத்திருப்பதால், எதுவித பலனும் ஏற்படப்போவதில்லை. உமது குழுவினரின் எதிர்காலம் கூட பாதுகாப்பற்ற நிலைதான். அவர்களையும் இழப்பதைவிடுத்து, தயவு செய்து புத்திசாலித்தனமாக அவர்களைக் காப்பாற்றவும். அவர்கள் அனைவரையும் சரணடையவைத்து பொதுமன்னிப்பு மூலம் காப்பாற்றலாம். அத்துடன் உமது இயக்கத்தை கலைத்துவிட்டு, இராணுவத்திடம் சரணடையவும். அவர்களைக்காப்பாற்ற இதுவும் ஒரு வழியாகும்.
உமது குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொண்டு, உமக்கு முறையான புத்திமதி கூறத்தவறியவர்களும், தமிழ் நாட்டில் சில தலைவர்களால் மிகத்தவறாக வழிநடத்தப்பட்ட மக்கள் சிலரையும், தவிர முழு உலகமும் உங்களுக்கு மாறாக திரும்பிவிட்டது. மக்களை மிக மோசமாக நடத்துகிறீர் என சர்வதேச சமூகம் உம்மீது குற்றம் சுமத்துகிறது. உமது செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபையும், ஐரோப்பிய ஒன்றியமும் வன்மையாக கண்டித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர், மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு போன்ற பல அமைப்புகள்கூட நீங்கள் அப்பாவி மக்களை பலாத்காரமாக தடுத்துவைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளன. பல்வேறு நாடுகளின் தலை நகர்களில் ஒன்றுகூடிய மக்கள், எம்மக்களை விடுவிக்கவேண்டுமென கேட்டார்களேயன்றி, உமக்காகபேசவில்லை. உமக்கு அவர்கள் விடுத்த செய்தி எமது மக்களை விடுவிக்கவேண்டும் என்பதே. தமிழ் மக்களை காப்பாற்றும் முழுப்பொறுப்பும் இப்போது உமது கையிலேயே.. அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர் நீரே. ஆகவே எதுவித தாமதமும் இன்றி மக்கள் எங்கே போக விரும்புகிறார்களோ அங்கே போக அனுமதிக்கவும். உம்மை ஆண்டவனின் பெயரால் கேட்கின்றேன் தயவு செயது, சுயநலத்துடன் செயற்படும் உமது இடத்தை பிடிக்க, ஆவலுடன்காத்திருக்கும் அரசியல் கழுகுகளிடம் மக்களை பாரம் கொடுத்து, போதிய கஸ்டங்களை அனுபவித்த மக்களின் துன்பமான வாழ்க்கையை மேலும் நீடிக்கவிடாது, சுதந்திரமாக வாழவிரும்பும் மக்களை அவர்கள் வழியிலேயே விட்டுவிடுங்கள். துப்பாக்கிகளை திரும்பி பார்க்கவே அவர்கள் இப்போது விரும்புகிறார்கள் இல்லை விளையாட்டு துப்பாக்கிகள் உட்பட.
இக்கட்டத்திலேனும் துப்பாக்கிகளை கைவிட்டு, யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரவும். சாவதேச ஆதரவுடன் கண்ணிவெடிகளை அகற்ற அதிககாலம் எடுக்காது. விரைவில் வன்னிப்பகுதிமக்கள் தமது இல்லங்களுக்கு திரும்பி, எஞ்சியுள்ள தமது பொருட்களையும் மீட்டெடுக்க முடியும். இப்போது கூட நீர் எனது புத்திமதியை கேட்கத்தவறின், ஏற்கனவே மக்கள் இழந்தது போக அவர்களின் எஞ்சியுள்ள பல்லாயிரம் கோடி பெறுமதியான சொத்துக்களை அவர்கள் இழப்பதற்கு நீரே பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் தமது வீடுகளுக்கு திரும்ப நீண்ட காலமெடுக்குமாயின் அவர்களின் சொத்துக்கள் எதுவும் அவர்களுக்கு இல்லாமல்போய்விடும். இதுவே நான், உமக்கு நம்பிக்கை அத்தனையையும் இழந்தநிலையில் விடுக்குன், இறுதி வேண்டுகோளாகும். மிக தாழ்மையாக விடுக்கும் வேண்டுகோள். நாம் அனைவரும் சிங்களவர், தமிழர், இஸ்லாமியர் பறங்கியர் மலாயர்கள் உடன் ஏனைய இன மக்களும் சமாதானமாகவும் அமைதியாகவும் ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்குள் சம உரிமையுடன் வாழவேண்டும் என்பதே. இந்த நாட்டீன் அமைதியை குலைத்த நீரே நிரந்தர சமாதானத்தையும் தரக்கூடிய தனி நபராகும்.
ஓர் இடைக்கால ஒழுங்காக, அரசை யுத்தத்தை நிறுத்துமாறு கேட்காது, நீரும் பதிலுக்கு அதேபோல் நடக்க சம்மதித்தால், விமான தாக்குதல், செல் அடித்தல், பீரங்கித்தாக்குதல் முதலியவற்றை நிறுத்தினால் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கலாம். அப்படியானதோர் நிலையில் அரசாங்கத்தை போதிய உணவு வகைகளையும் மருந்துவகைகளையும் மக்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளலாம். உமது பங்கிற்கு நீர் செல் அடிகளையும் பீரங்கித்தாக்குதல்களையும் உடன் நிறுத்தவேண்டும்.
நன்றி,
அன்புடன்,
வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி.
0 விமர்சனங்கள்:
Post a Comment