வன்னி மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதாக கூறுவது சுத்தப்பொய்
வன்னி மக்களின் அத்தியாவசியத் தேவைகள் விடயத்தில் அமைச்சர்களினதும் அதிகாரிகளினதும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை. அவல நிலை அனுபவித்துக் கொண்டிருக்கும் அந்த மக்களை பாதுகாப்பதாகவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருவதாகவும் கூறுவது சுத்தப் பொய்யாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட எம்.பி. டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார்.
வவுனியா மற்றும் மன்னார் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களும் அத்துடன் மோதல்களில் சிக்கிக் காயப்பட்ட நிலையில் அரசு கட்டுப்பாட்டு பிரதேச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களும் தமது நிலைமையை வெளிப்படுத்த முடியாதவர்களாகவே இருக்கின்றனர் என்றும் அவர் சொன்னார்.
வன்னி மக்களுக்கென மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்ற அதேவேளை அங்கு மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் நோயாளிகளின் இறப்பு அதிகரிப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கேட்ட போதே ஜயலத் ஜயவர்த்தன எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், உண்மையில் அங்கு என்ன நடக்கின்றது என்பதே புரியாத புதிராக இருக்கின்றது.
அரச பணியாளரான சுகாதாரப் பணிப்பாளரே மருத்துவப் பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் இதனால் இறப்புகள் அதிகரிப்பதாகவும் கூறுகின்றார்.
மறுபுறத்தில் உலக சுகாதார மையத்தின் தலைவரும் சுகாதார அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா முல்லைத்தீவுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாகக் கூறுகின்றார்.
அதே நேரம் அத்தியாவசியப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகா?கள் தெ?விக்கின்றனர். மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் இதனையே கூறுகின்றார்.
ஆனால், இவைகளில் எந்தளவு உண்மை இருக்கின்றது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது இருக்கின்றது.
வன்னியைப் பொறுத்த வரையில் அங்கு மக்கள் இருதலைக் கொள்ளிகளாக இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் உணவு, மருந்து, குடிநீர் போன்ற அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் மறுக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
இந்நிலையில் உயிரைப் பிடித்துக் கொண்டு அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருகின்ற மக்களை அரசாங்கம் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கிறது.
இந்த மக்கள் தாங்கள் அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கின்ற உண்மை நிலைமைகளை வெளிப்படுத்த முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.
அரசாங்கத்தின் பிரசாரத்துக்காக நலன்புரி நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகளுடன் அரச தரப்பினரால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சிலரே (நலன்புரி நிலையங்களில் உள்ளோர்) சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இதனால் அம் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதுடன் அவர்களின் உணர்வுகளும் உண்மைகளும் வெளிப்படுத்தப்படுவதில்லை. இது அந்த மக்களை வைத்து அரசாங்கம் நடத்துகின்ற பொய்ப் பிரசாரமாகும்.
அரச ஊடகங்களையும் வெளிநாட்டு ராஜ தந்திரிகளையும் அழைத்துச் செல்கின்ற அரசாங்கம் இந்த நாட்டின் மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற எமக்கு மேற்படி பிரதேசங்களுக்கு செல்வதற்கு அனுமதி மறுப்பது ஏன்? நாம் அங்கு செல்வதால் அங்குள்ள உண்மை நிலைவரங்களை வெளியில் கொண்டு வர முடியும். நாம் அங்கு செல்வதற்கான அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் அங்குள்ள நிலைமைகளை அல்லது உண்மைத் தன்மைகளை அதிகரித்தோ அல்லது குறைத்தோ வெளியிட்டால் அரசாங்ம் எம்மிடம் கேள்விகளை கேட்க முடியும்.
ஏனெனில் அங்கு நடைபெறுவது என்னவென்பதை உணர முடியாமல் இருக்கின்றது. எந்த தரப்பினரை நம்புவது என்ற பாரிய சிக்கலும் ஏற்பட்டுள்ளது. எனவேதான் அங்கு சென்று அந்த மக்களின் சுக துக்கங்களை விசாரித்தறிய அனுமதி கோருகின்றோம்.
எமக்கு அனுமதி மறுக்கின்ற அரசாங்கம் பாதுகாப்பு விடயத்தை காரணம் காட்டுகின்றது. இதிலிருந்து அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் பிரசாரங்கள் அனைத்தும் சுத்தப் பொய் என்பது தெளிவாகின்றது என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment