உண்மை நிலையையே தெரிவித்தேன்: கட்சிக்கு ஒருபோதும் துரோகமிழைக்க மாட்டேன் -வினோ நோகராதலிங்கம் எம்.பி
வவுனியா நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்களுக்கு அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள வசதிகள் தொடர்பான உண்,மை நிலையை நான் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தேன்.
இது தவிர தான் சார்ந்த கட்சிக்கு எதிராகச் செயற்படவேண்டுமென்ற நோக்கத்தில் அவ்வாறு கருத்துகளைத் தெரிவிக்கவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி எமது லங்கா ஈ நியூஸ் இணையத்ததளத்தில் வெளியான செய்தி குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரியின் கருத்துகள் தொடர்பாகவும் அவர் தனது நிலைப்பாட்டினை எமக்குத் விளக்கினார்.
வவுனியா நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்கள் அச்சமின்றி நிம்மதியாக இருப்பதாகவும் அங்கு இயங்கும் சதொச விற்பனை நிலையம், பாடசாலைகள், வங்கிகள் என்பன சிறப்பாக இயங்கி வருவதாகவும் அதிகாரிகள் மக்களின் தேவைகளை இனங்கண்டு செயற்படுவதாகவும் நான் தெரிவித்துள்ள கருத்துகள் உண்மையானவை. உண்மையைக் கூறுவதில் தயக்கம் தேவையில்லை.
ஆனால் சில ஊடகங்கள், தான் இவ்வாறான கருத்துகளைத் தெரிவித்தமை தொடர்பாக பல்வேறு ஊகங்களை வெளியிட்டுள்ளன. அவற்றில் எவ்வித உண்மையுமில்லை. நான் எந்தக் காரணம் கொண்டும் கட்சிக்குக் கொள்கைக்கு மாறாகச் செயற்படப் போவதில்லை. அதே போன்று கட்சியை விட்டு விலகப் போவதுமில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாங்கள் 22 பேரும் ஒரு கட்டுக்கோப்புடன் செயற்பட்டு வருகிறோம். எதிர்காலத்தில் கூட இந்த நிலையே தொடரும்.
வவுனியா நிவாரணக் கிராமங்களைப் பார்வையிட சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இந்நிலையில் உங்களுக்கு மட்டும் இந்த விசேட சலுகை கிடைக்கக் காரணம் என்னவென்று வினவியபோது,
நான் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதிப்படுத்துபவன் எனது மக்களே நிவாரணக் கிராமங்களில் வசித்து வருகின்றனர். அவர்களைப் பார்வையிட எனக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென நான் விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்த அனுமதியை சம்பந்தப்பட்ட தரப்பினர் எனக்கு வழங்கினரே தவிர வேறு எந்த விசேட காரணமும் இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment