புதுமாத்தளன் பிரதேசத்தில் நடமாடுவது போலியான பிரபாகரனா எனச் சந்தேகம்?
பிரபாகரன் எங்கிருக்கிறார் என்பது பற்றி பல்வேறு வகையான தகவல்களும் செய்திகளும் ஊடகங்கள் தரப்பிலிருந்தும் பாதுகாப்பு புலனாய்வுத் தரப்பிலிருந்தும் அண்மைக் காலமாக வெளியாகி வருகின்றன.
இந்த வகையில் தற்போது பாதுகாப்புத்துறை தரப்பிலிருந்து வெளியாகியுள்ள தகவல்களுக்கேற்ப அரச படையினரின் இராணுவ நடவடிக்கைகளற்ற பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சமாதான வலயமாக உள்ள புதுமாத்தளன் பிரதேசத்தில் பிரபாகரன் நடமாடிவருவதாகத் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பிரபாகரன் பொதுமக்கள் போன்று சிவில் உடைகள் அணிந்த நிலையிலேயே பொதுமக்களிடையே நடமாடி வருகிறார்.
மேலும் இந்த புதுமாத்தளன் பகுதியிலேயே பிரபாகரனும் அவருடைய மகன் சாள்ஸ் அன்ரனியும் ஏனைய தலைவர்களும் பதுங்கியிருக்கும் வசதியான பதுங்குழி நிலையம் அமைந்துள்ளதாகவும் குறித்த நிலையம் அடையாளங் காணமுடியாதவகையில் புதுமாத்தளன் பிரதேசத்தில் ஒரு அதி இரகசியமான இடத்தில் அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு யுத்த நடவடிக்கையற்ற வலயத்தில் பொதுமக்கள் வாழும் பிரதேசத்தை அண்டிய பகுதியிலே இந்த இரகசிய பதுங்குகுழி அமைந்துள்ளபோதிலும் அந்த நிலையம் பொது மக்களாலோ அல்லது விமானக் கண்காணிப்பு நடவடிக்கைகளின்போதே இலகுவில் அடையாளம் காணமுடியாத வகையில் பூடகமாக அமைக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் தெரியவந்துள்ளது. இவ்வாறு குறித்த இரகசிய பதுங்குகுழியிலிருந்து பிரபாகரனும், அவர் மகன் சாள்ஸ் அன்ரனியும் மற்றும் உயர் மட்டத் தலைவர்களும் தற்போது வெளிவந்து பொதுமக்களிடையே நடமாடத் தொடங்கியிருப்பதாக புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து பாதுகாப்புத் துறைக்குத் தகவல்கள் தெரியவந்துள்ளன.
எவ்வாறாயினும் பிரபாகரனும் மகனும் அப்பகுதியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் நடமாடி வருகின்றனர்.
இவ்வாறு பிரபாகரனும், மகன் சாள்ஸ் அன்ரனியும் ஏனைய தலைவர்களும் பொதுமக்களிடையே சிவில் உடைகளில் நடமாட ஆரம்பித்திருப்பதற்குக் காரணம் தற்போது அனைத்துப் பிரதேசங்களையும் இழந்து சுமார் எட்டு சதுர கிலோமீற்றர் பிரதேசத்திற்குள் மட்டும் அரச படையினரால் ஒடுக்கப்பட்டிருக்கும் பிரபாகரன் அந்தச் சிறிய பிரதேசத்தையும் இராணுவத்தினர் கைப்பற்றாமல் தடுப்பதற்காக இறுதியான கடும் யுத்தத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருப்பதே எனத் தெரியவந்துள்ளது.
இவ்வாறு இறுதிப் போருக்காக புதுமாத்தளன் பிரதேசத்தில் எஞ்சியிருக்கும் சிறுதொகையினரான தமிழர்களிடையே ஆதரவு கோருவதும் ஆட்சேர்ப்பதுமே பிரபாகரனினதும் ஏனைய தலைவர்களினதும் நோக்கமாகும்.
எவ்வாறாயினும் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றிய அரச படையினருக்கு புதுமாத்தளனிலுள்ள சிறிய பிரதேசத்தைக் கைப்பற்றுவது பெரிய அளவிலான கஷ்டமான நடவடிக்கையல்ல. எனவே பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதாமல் அரச படையினர் அப்பகுதியில் தீவிர இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தால் ஒரு வார காலத்துக்குள் அது வெற்றிகரமாகப் படையினரால் கைப்பற்றப்பட்டுவிடும். இந்நிலையில் பிரபாகரன் தற்போது நடத்தவிருக்கும் இறுதித் தாக்குதல் அந்த சிறிய பிரதேசத்தையும் அங்கு வாழும் தமிழர்களையும் காப்பாற்றுவதற்காகச் செய்யப்போகும் யுத்தமல்ல.
பிரபாகரனும் மகனும், தலைவர்களும் தம் உயிரைக் காப்பாற்றுவதற்காகச் செய்யத் தயாராகிவரும் இறுதியுத்தமே என அனைத்துத் தரப்புகளும் நன்கு அறியும். இவ்வாறான இறுதியுத்தம் ஒன்றில் எஞ்சியிருக்கும் தமிழர்களைப் பணயமாகவும் பலிக்கடாக்களாகவும் ஆக்குவதே தற்போது பிரபாகரனின் நோக்கம் ஆகும். எனவேதான் இறுதியான இந்த ஆதரவை தமிழர்களிடம் கோருவதற்குப் பிரபாகரனே நேரில் மகனுடன் வெளியே வந்து மக்களிடையே இரகசியமாக சிவில் உடையில் நடமாட ஆரம்பித்துள்ளார். இந்த தகவல்களையே தற்போது அப்பிரதேசங்களிலிருந்து இரகசியமாக வெளியேறி அரசபடையினரிடம் வந்துசேரும் புதுமாத்தளன் பகுதித் தமிழர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தற்போது புலிகள் இயக்கத்தினர் அரசபடையினர் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களும் புதுமாத்தளன் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்களாக உள்ள பிரதேசங்களிலிருந்தே ஆகும்.
இறுதிக் கட்டத்திலாவது அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடனேயே பிரபாகரனும் தலைவர்களும் உள்ளனர். அதுவரை அங்கு வாழும் தமிழர்களைப் பணயக்கைதிகள் போல் வைத்துக்கொண்டு அங்கு ஒளிந்திருந்து இராணுவத்தினர் மீது தாக்குதல்களை நடத்திக்கொண்டிருப்பதே பிரபாகரனின் இறுதியான திட்டமாகும். எவ்வாறாயினும் அரசபடையணிகள் பிரபாகரன் பதுங்கியிருக்கும் புதுமாத்தளன் பகுதியை நோக்கி மெதுவாக முன்னேறிய வண்ணமுள்ளார். இராணுவத்தின் 58 ஆவது படையணிகள் தற்போது இரணைப்பாலைப் பிரதேசத்தைக் கைப்பற்றிவிட்டதைத் தொடர்ந்து குறித்த பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தை நெருங்கியுள்ளது. 58 ஆவது படையணியின் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ள தகவல்களில் அவரது படையணிகள் புலிகள் பதுங்கியிருக்கும் புதுமாத்தளன் பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்திலேயே நிலைகொண்டுள்ளதாகவும் அப்பிரதேசத்துக்கு அருகில் மேற்கு எல்லையில் களப்புப் பகுதியில் தற்போது நிலைகொண்டுள்ள படையினர் அங்கிருந்து வெளியேறிவரும் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் காத்திருப்பதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.
தற்போது பிரபாகரனின் படையணியினர் இராணுவத்தினர் மீது பீரங்கித் தாக்குதல்களை நடத்திவரும் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சுமார் 2000 பொதுமக்கள் பலாத்காரமாக மனித கேடயமாகத் தங்க வைக்கப்பட்டிருப்பதாக மேலும் தகவல்கள் தெரியவந்துள்ளன. குறித்த பகுதி பொதுமக்கள் பாதுகாப்பு வலயமாக இருப்பதால் இராணுவத்தினர் அப்பகுதி மீது பதிலுக்குத் தாக்குதல்களை நடத்தாமல் இருக்கும் சாதகமான நிலையைப் பயன்படுத்தியே பிரபாகரன் இந்தப் பீரங்கித் தாக்குதல்களை பொது மக்களிடையே ஒளிந்திருந்து மேற்கொண்டு வருகிறார். அவ்வாறே விமானத் தாக்குதல்களோ பீரங்கித் தாக்குதல்களோ குறித்த புதுமாத்தளன் பிரதேசத்தை நோக்கி அரசபடையினர் மேற்கொள்ளமாட்டார்கள் என்ற தைரியத்திலேயே தற்போது பதுங்கு குழியை விட்டு சிவில் உடையில் வெளியேவந்து தன் மகனுடனும் உயர் மட்டத் தலைவர்களுடனும் மக்களிடையே நடமாடி ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் நேரடியாக இறங்கியுள்ளார். எது எவ்வாறாயினும் விமானப்படையினரின் விமானக் கண்காணிப்பின் போது இவ்வாறு பிரபாகரனின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதோ தாக்குதல் நடத்துவதோ விமானப்படையினருக்கு இயலாத காரியமாக இருக்காது. இதனைப் பிரபாகரன் அறியாமல் இருக்கமுடியாது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது உண்மையில் பிரபாகரன் துணிந்து இவ்வாறு வெளியே வந்து பகிரங்கமாக நடமாடுவாரா என்ற சந்தேகமும் உள்ளது. எனவே தான் ஏனைய தலைவர்கள் அப்படிப் பகிரங்கமாக நடமாடினாலும் பிரபாகரன் அவ்வாறு பகிரங்கமாக நடமாடுவது பொதுவாக நடக்கக் கூடியதாக எதிர்பார்க்க முடியாது. எனவே அங்கு நடமாடுவது உண்மையில் பிரபாகரனா என்ற சந்தேகமும் விமர்சகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் சிவில் உடையில் நடமாடுவதாகக் கூறப்படுவதால் அவ்வாறான உடைகளில் பிரபாகரனை அடையாளம் காணுவதும் அப்பகுதி மக்களுக்குக் கஷ்டமாகவே இருக்கும். எனவே அங்கு நடமாடுவது பிரபாகரன் அல்ல என எதிர்பார்ப்பதற்கும் சாதகங்கள் உண்டு. மிகக் குறுகிய பிரதேசத்துக்குள் அரசபடையினரின் உறுதியான சுற்றிவளைப்பில் சுமார் 400 மீற்றர் சதுரத்தில் அரசபடையணிகள் நிலைகொண்டிருக்கும் நிலையில் பிரபாகரன் தன் பாதுகாப்புப் பற்றிய சிந்தனையின்றி இன்னும் அங்குதான் பதுங்கியிருப்பாரா அதற்கு மேலாக நவீன விமானக் கண்காணிப்பு பற்றியோ குறிதவறாத விமானத் தாக்குதல் பற்றியோ பயமின்றி அவ்வாறு முட்டாள்த்தனமாகப் பகிரங்கமாக நடமாடுவாரா என்பதே விமர்சகத் தரப்பின் நியாயமான சந்தேகமாகும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment