புலிகளின் செயற்பாடுகள் 21 ச.கி.மீற்றருக்குள் முடக்கம்
வன்னியில் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த வெற்றிகரமான நடவடிக்கைகள் மூலம் புலிகளின் சகல செயற்பாடுகளையும் 21 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் பாதுகாப்புப் படையினர் முடக்கியுள்ளதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினர் புலிகள் மீது தாக்குதல் நடத்தி ஒரு சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தையே கைப்பற்ற வேண்டியுள்ளதாகவும் ஏனைய 20 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு பொது மக்களுக்காக அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை கொழும்பில் நடைபெற்றது.
கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் உரையாற்றுகையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் தற்பொழுது பாதுகாப்புப் படையினர் வெற்றியடைந் துள்ளனர்.
படையினரின் கடுமையான தாக்குதல்களினால் தோல்வியின் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள புலிகள் தற்பொழுது ஒரு சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.
படையினரின் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் நாளுக்கு நாள் பின்னடைவுகளைக் கண்ட புலிகள் செய்வதறியாது பொதுமக்களுக்காக அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்திற்குள் ஊடுருவியுள்ளனர்.
தற்பொழுது அந்தப் பிரதேசத்தில் தங்களது கனரக ஆயுதங்களை வைத்து பொதுமக்களுக்கு மத்தியிலிருந்து பாதுகாப்பு படையினரை இலக்குவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
போர் முனையில் காயமடைந்த படைவீரர்களை அழைத்து வரச் சென்ற விமானப் படையின் பெல்-212 ரக ஹெலிகொப்டர்களை இலக்குவைத்து பாதுகாப்பு வலயத்திலிருந்து ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டமை இதற்கு சிறந்த சான்றாகும்.
புலிகளின் செயற்பாடுகள் இப்பொழுது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. புலிகளின் கடுமையான தாக்குதல்களை வெற்றிகரமாக
எதிர்கொண்டு எமது படைவீரர்கள் முன்னேறி வருகின்றனர். புலிகளின் பிடியில் எஞ்சியுள்ள சின்னஞ்சிறிய பிரதேசம் எந்தத் தறுவாயிலும் படையினரிடம் வீழ்ந்து விடும் நிலையிலுள்ளது.
புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களின் நலனில் அக்கரையுள்ள சர்வதேச நிறுவனங்கள் இன்று ஆற்ற வேண்டிய முக்கியமான பணி என்னவென்றால், புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனிதநேய மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்கு அரசுடன் இணைந்து ஆதரவு வழங்குவதாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹ¥லுகல்லெ, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார, கடற்படை பதில் பேச்சாளர் கமாண்டர் மஹேஜ் கருணாரட்ன, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment