அவலங்களை எதிர்நோக்கும் வீட்டு பணியாளர்கள்
பல்லாயிரக்கணக்கான ஆசியப் பெண்கள் வருமானத்திற்காக வீட்டுப் பணியாளர்களாக வேலை செய்வதற்கென மத்திய கிழக்கிலுள்ள ஷேய்க் ராஜ்ஜியங்களுக்கு செல்கிறார்கள்.
தங்கள் வாழ்வாதாரத்திற்காக அந்நாடுகளுக்கு செல்லும் இப்பெண்களில் பலர் எச்.ஐ.வி. கிருமித் தொற்று உள்ளவர்களா என்ற சோதனைக்கு உள்ளாக்கப்படும் போது பெரும் அவலங்களை எதிர்கொள்கிறார்கள்.
தொழில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும்போது இப்பெண்கள் மீது எச்.ஐ.வி.
சோதனை மேற்கொள்ளப்படும் போதே அவர்கள் தங்கள் எச்.ஐ.வி. நிலைமை குறித்து அறிய வருகிறார்கள் என்று குடியேற்றம் தொடர்பாக ஆராயும் அரச சார்பற்ற அமைப்பான "அச்சீவ்' என்ற சுகாதார நடவடிக்கை அமைப்பின் பணிப்பாளர் மலு மறின் கூறுகிறார். இவ்வமைப்பு மணிலாவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளது.
புலம்பெயர் பெண் தொழிலாளர்களுக்கு கட்டாயமான இந்த பரிசோதனை இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை நடத்தப்படுகிறது என்று மலுமறின் கூறுகிறார்.
எச்.ஐ.வி. தொற்று இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால் அத்தகைய பெண்ணை வேலைக்கு அமர்த்தியவருக்கு அதுபற்றி அறிவிக்கப்பட்டு அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் பூர்த்தி அடையும் வரை அவர் வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் நிலையம் ஒன்றில் தடுத்து வைக்கப்படுவார் என்று பிலிப்பைன்ஸ் தலைநகரிலிருந்து மலுமறின் அளித்த தொலைபேசிப் பேட்டி ஒன்றின் போது தெ?வித்தார். எச்.ஐ.வி. கிருமிகளை ஏனையோருக்கும் பரப்பக் கூடிய இப்பெண்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த இடைத்தங்கல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். தங்கள் உடைமை களை பொதி செய்வதற்கோ கிடைக்க வேண்டிய சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளவோ சந்தர்ப்பம் அளிக்காமலே இவர்கள் நாடு கடத்தப்பட்டு விடுவார்கள்.
மீண்டும் இப்பெண்கள் வேலைக்காக அந்நாடுகளுக்கு செல்ல ஒருபோதும் அனுமதிக்கப்படுவதில்லை.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டப் பிரிவும் எச்.ஐ.வி. எயிட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகள் கூட்டுத் திட்டப் பிரிவும் இந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் பெண் தொழிலாளர்கள் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் தாற்பரியம் குறித்து எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக நாடு கடந்து செல்லும் இப்பெண்கள், அந்நாடுகளிலும் தாயகம் திரும்பிய பின்னர் சொந்த நாட்டிலும் பாதுகாப்பற்ற நிலையில், வசதிகள் எதுவுமின்றி கஷ்டப்பட்டும், தங்கியிருக்கும் இடங்களில் அவல வாழ்வை வாழ்ந்தும் பாலியல் வல்லுறவுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சுகாதார சேவைகளையும் சமூக பாதுகாப்பையும் பெறமுடியாத ஆசிய புலம்பெயர் பெண் தொழிலாளர்கள் எளிதில் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகிறார்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.
இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளான பாஹ்ரெய்ன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றில் புலம் பெயர் பெண்கள் நீதியையோ தமக்கு நேர்ந்த அவலங்களுக்கு பரிகாரத்தையோ பெறுவதற்கான வழி வகைகள் எதுவுமற்று தவிக்கிறார்கள்.
எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகியிருந்தால் நாடு கடத்தப்படும் இவர்கள் சொந்த நாட்டிலும் பாரபட்சத்தையும் தனிமைப்படுத்தப்படலையும் எதிர்கொள்வதுடன் மாற்று வாழ்வாதாரத்தை பெறமுடியாமலும் அல்லற்படுகிறார்கள் என்கிறது அறிக்கை.
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை ஆகியன உட்பட புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பும் பல்வேறு நாடுகளில் வீட்டுப் பணிப் பெண்கள் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எச்.ஐ.வி. தொற்று குறைவாக காணப்படும் பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் புலம்பெயர் தொழிலாளர்களே கூடுதலாக இத்தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
உண்மையில் 2007ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவன அங்கத்துவ நாடுகளின் வருடாந்த ஜெனீவா மாநாட்டில் தெற்காசிய நாடான பாகிஸ்தான் அதன் குடிமக்களில் அதிகமானோர் அறபு நாடுகளில் வேலை பார்க்கும் போது எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளõகி பலவந்தமாக நாடு திருப்பப்படுவது குறித்து இம்மாநாட்டில் கவலை தெரிவித்ததை அடுத்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இந்த மாநாட்டின் போது, எச்.ஐ.வி.
தொற்றுக் காரணமாக அரபு நாடுகளிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு கடத்தப்படுவது குறித்து ஆராய்வதற்காக பாகிஸ்தான் ஏனைய ஆசிய நாடுகளின் கூட்டமொன்றை நடத்தியது என்று அறிக்கையை தயாரித்த ஆசிரியர்களில் ஒருவரான தார்தா வலேஜோ ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார். இந்த விடயம் அரபு நாடு களில் ஒரு உணர்வுபூர்வமான விடயமாக கணிக்கப்பட்டது.
இந்த புலம்பெயர் பெண் தொழிலாளர்களை அனுப்பும் ஆசிய நாடுகளுக்கு அவர்களிடமிருந்து கிடைக்கும் அந்நிய செலாவணியின் தொகையை அவதானிக்கும் போது அந்நாடுகள் கவலை கொள்வதில் நியாயம் இருப்பதாக உணரப்படுகிறது.
பிராந்தியத்தைச் சேர்ந்த புலம்பெயர் பெண் தொழிலாளர்கள் தங்கள் நாடுகளுக்கும் அவர்கள் பணியாற்றும் நாடுகளுக்கும் பெரும் பொருளாதார நலன்கள் கிடைப்பதற்கு காரணமாக இருக்கிறார்கள்.
அறபு நாடுகளில் வேலை செய்யும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் 2007ஆம் ஆண்டில் 2.17 பில்லியன் அமெரிக்க டொலரை தங்கள் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள் என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
இலங்கை தொழிலாளர்கள் தற்போது மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை அனுப்பியுள்ளார்கள்.
வறிய நாடான பங்களாதேஷை பொறுத்தமட்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மாத்திரம் பணியாற்றும் அந்நாட்டு தொழிலாளர்கள் ஏறத்தாழ 804.8 மில்லியன் டொலரை கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் தங்கள் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள் என்று பங்களாதேஷ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் பங்களாதேஷிற்க்கு அனுப்பிவைக்கப்பட்ட 6 பில்லியன் டொலர் மொத்த செலாவணியில் இது 7.4 சதவீதமாகும்.
சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் மதிப்பீட்டின்படி, வளைகுடா ஒத்துழைப்புச் சபை நாடுகளில் 9.5 மில்லியன் வெளிநாட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இவர்களில் 7.5 மில்லியன் தொழிலாளர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். பாஹ்ரெய்ன், கட்டார், குவைத், ஓமான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியன வளைகுடா ஒத்துழைப்பு சபையில் அங்கம் வகிக்கின்றன.
இந்தோனேசிய புலம்பெயர் தொழிலாளர்களில் கூடுதலானோர் பெண்களாவர். இவர்களில் அநேகமானோர் சவூதி அரேபியாவில் வேலை செய்கிறார்கள் என்று சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் ஆசிய பசுபிக் அலுவலக ஆலோசகர் மனோலோ அபேலா தெரிவித்தார்.
இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களில் 75 சதவீதத்தினரும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களில் 85 சதவீதத்தினரும் பெண்களாவர்.
வீட்டுப் பணி மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் சட்டங்களுக்கு உட்படுத்தப்படாமையே இப்பெண்கள் அவலங்களுக்கு உள்ளாகுவதற்கு காரணமாகும் என்று அபேலா பேட்டி ஒன்றின் போது தெரிவித்தார். அதாவது, சம்பளம் வழங்கப்படவில்லை என்றோ தொழில் உரிமை மீறப்பட்டதாகவோ முறைப்பாடு செய்யப்பட்டால் உத்தியோகபூர்வ விசாரணைக்கு வழிமுறை எதுவும் கிடையாது.
தொழில் ஒப்பந்தத்தில் சில பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாலும் பெண் தொழிலாளர்கள் வீட்டுக்குள்ளே அடைந்து கிடப்பதால் தங்களைப் பாதுகாக்கும் விதிகளை அறிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்றும் அபேலா கூறுகிறார்.
வீட்டுப் பணிப் பெண்கள் முற்று முழுதாக அவர்களது முதலாளிமாரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறார்கள்.
இவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் போது அவர்களால் அதனை எதிர்த்து எதுவும் செய்துவிட முடியாது.
(ஐ.பி.எஸ்.)
0 விமர்சனங்கள்:
Post a Comment