சர்வதேச உள்ளூர் அழுத்தங்களுக்கு நாம் ஒரு போதும் அடிபணியோம்: ஜனாதிபதி
நாட்டுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. நாம் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற நோக்கில் ஜனாதிபதியாகிய என்னையும், பாதுகாப்பு செயலாளரையும், இராணுவத் தளபதியையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக கொண்டு செல்வதற்குத் தேவையான தகவல்களைச் சிலர் திரட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளைகளினதும் சங்கங்களினதும் பிரதிநிதிகள் சந்திப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. இச்சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இச்சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், புலிகளின் பணத்திற்கும், அவர்களின் கவனிப்புக்கும் மதிமயங்கிய சிலரே இவ்வாறான செயலில் ஈடுபடுகின்றனர். எமது நாட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒரு சாராரும், வெளிநாட்டில் வாழுகின்ற வேறு சக்திகளும் தமக்குக் கிடைக்கின்ற பொருளாதார, அரசியல் இலாபங்களையும், பணத்தையும் மட்டுமே மனதில் கொண்டு இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.
சிலர் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மட்டுமல்ல அமெரிக்காவிலும் இருந்து கொண்டு இவ்வாறான செயலில் ஈடுபடுகின்றனர். நாட்டுக்கு கெடுதல் செய்யும் இவ்வாறான சூழ்ச்சிக்காரர்கள் நாம் முன்னெடுக்கின்ற வேலைத் திட்டங்களை தோல்வி அடையச் செய்வதற்கு எமக்கு எதிராக சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.
நாம் புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கை இன்னொரு இனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கையாக அமையாது. பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பது என்பது இந்த நாட்டில் வாழுகின்ற சகல இனமக்களுக்கும் விமோசனத்தைப் பெற்றுக் கொடுக்கும் காரியமாகவே கருதுகிறேன்.
இந்த நிலைமையை சர்வதேச சமூகத்திற்கு நன்கு தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த நாட்டை அழித்தாவது, புலிகளுக்கு நாட்டைத் தாரை வார்த்தாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் ஒரு சாரார் செயற்படுகின்றனர். அவர்கள் புலிகளுடன் சேர்ந்து செயற்படுகின்றனர். இலங்கை தொடர்பான தவறான அபிப்பிராயங்களை பல்வேறு வழிகளிலும் இவர்கள் உலகிற்கு வழங்கி வருகின்றனர். இவற்றைத் தோற்கடிப்பதற்காக நாம் செயற்படுகின்றோம்.
எமக்கு எதிராக அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த அழுத்தங்களின் நோக்கம் நாம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துவதே. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எந்தவிதமான உள்ளூர், வெளியூர் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் நாம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்போம். அவற்றை ஒரு போதும் இடைநிறுத்த மாட்டோம்.
நாம் பயங்கரவாதத்தை முழுமையாகத் தோற்கடிப்போம். அதற்காக எம்மை ஏற்கனவே அர்ப்பணித்து விட்டோம். இந்நாட்டில் வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் சகலரையும் ஒரே மக்களாக பார்க்கிறோம் என்றார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜயந்த பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ எம். பி, மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, மேல் மாகாண சபைக்கான ஐ. ம. சு. மு. கொழும்பு மாவட்ட அபேட்சகர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment