குடும்பத்தை இழந்த ஒரு அகதியின் அழுகை!
யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தைச் சேர்ந்தவர் சிவகரன். வியாபாரத்தில் ஈடுபட்டு நல்ல நிலையில் வாழ்ந்தவர். இவரது மனைவி சிவகரன் சியாமளா (வயது 34). இவர்களுக்கு சிவகரன் சுவர்ணன் (வயது 12), துளசி (வயது 10), என்ற இரு மகன்களும் சிவகரன் புவிதாஜினி வயது 4 என்ற மகளும் உண்டு.
இந்த குடும்பம் இலங்கையில் ஏற்பட்டுள்ள போரை அடுத்து 1990இல் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு இடம் பெயர்ந்தது. பின்னர் அங்கிருந்து முல்லைத்தீவு செல்லும் வழியில் விசுவமடு பகுதிக்கு இடம் பெயர்ந்தது.
இந்த நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு அகதியாக சிவகரன் குடும்பத்தை பிரிந்து இந்தியா வந்தார். அகதிகளை பரிசோதித்த போது சிவகரன் உள்ளிட்ட சிலர் மீது சந்தேகம் அடைந்த கியூ பிரிவு பொலிஸார் சிவகரன் உள்ளிட்ட சிலரை சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் திருச்சி நீதிமன்ற உத்தரவுப்படி சிவகரன் உள்ளிட்டோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் ஆனாலும், கியூ பிரிவு பொலிஸாரின் பரிந்துரைபடி இவர்களது கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் முடக்கப்பட்டன சிவகரன் உள்ளிட்டோர் பூந்தமல்லியில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் தாக்குதல் காரணமாக,சிவகரனின் குடும்பம் முல்லைத்தீவில் உள்ள மாத்தளன் பகுதியில் அடைக்கலம் புகுந்தது.
இறுதியில் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற எறிக ணைத் தாக்குதலில் சிவகரனின் மனைவி சிவகரன் சியாமளா, மகன்கள் சிவகரன் சுவர்ணன், சிவகரன் துளசி, மகள் சிவகரன் புவிதாஜினி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மனைவி மக்கள் அனைவரையும் இழந்து ஆதரவற்ற நிலையில், குடும்பத் தலைவன் என்ற முறையில் இறுதிச் சடங்கு களைக் கூட செய்ய முடியாத நிலையில் சிவகரன் பூந்தமல்லியில் ஒரு முகாமில் அடைக்கப்பட்டுள்ளது இதயம் உள்ள அனைவரையும் துயரத்தில் ஆழ்த்துவதாக உள்ளது.
நான் உயிருடன் இருந்தும் குடும்பத்தினரை காப்பாற்ற முடியாமல் போனேனே என்கிறார் சிவகரன் கண்ணீருடன்.
குடும்பத்தினரை இழந்து தவிக்கும் இது போன்ற சிவகரன்களின் குரல், தமிழ் உணர்வு வியாபாரத்தில் மூழ்கித் திளைக்கும் தமிழக அரசியல் வாதிகளின் காதில் விழுவது எப்போது. புத்திர சோகத்தில் ஆழ்ந்திருக்கும் சிவகரனின் பரிதவிப்பு, புத்திரபாசத்தில் மூழ்கிக்கிடக்கும் தமிழக தலைவர்களுக்கு புரிவது எப்போது என்பதே தமிழர்களின் கேள்வி.
0 விமர்சனங்கள்:
Post a Comment