48 மணித்தியாலங்கள் தாக்குதல் நிறுத்தம் அரசாங்கம் அறிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை 48 மணித்தியாலங்கள் இடைநிறுத்தி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற முக்கிய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, சித்திரைப் புத்தாண்டையொட்டி, போர்ப்பிரதேசத்தில் சிக்கியுள்ள பொதுமக்கள், அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான பிரதேசங்களுக்கு வருவதற்காகவே இந்த தாக்குதல் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அரசாஙகத்தின் இந்த தாக்குதல் நிறுத்தம் தொடர்பான அறிவித்தல் தொடர்பில் விடுதலைப்புலிகளிடமிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
போர்ப்பிரதேசத்தில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு மனிதாபிமான ரீதியில் போர் நிறுத்தப்பட்டு உரிய அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகள் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் அழுத்தங்களைக் கொடுத்து வருவதைத் தொடர்ந்து அரசாங்கத்தின் தாக்குதல் நிறுத்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டு தினங்களாகிய அடுத்த இரு தினங்களிலும் படையினர் தாக்குதல்கள் நடத்தமாட்டார்கள் என்றும், இந்த நடவடிக்கை அந்தப் பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான அவகாசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சரவை முடிவுகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ரோகித பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.
ஐநா சபை மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் போர்ப்பிரதேசத்தில் சிக்கியுள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருதி உடனடி போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி் வந்துள்ளன என்பதுடன், போர்நிறுத்தத்தை வலியுறுத்தி, ஐரோப்பிய நாடுகள் உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பொதுமக்களுக்கான பாதுகாப்பு வலயம் என சிறியதோர் நிலப்பரப்பினை அறிவித்துள்ள பகுதியைத் தவிர்ந்த ஏனைய விடுதலைப்புலிகளின் பிரதேசங்கள் அனைத்தையும் இராணுவம் கைப்பற்றி, விடுதலைப்புலிகளைப் பாதுகாப்பு வலயத்தினுள் தள்ளியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment