ஓமந்தைச் சோதனைச் சாவடியில் ஐ.நா. முகவர்கள்: யு.என்.எச்.சி.ஆர். கோரிக்கை
இடம்பெயர்ந்து வரும் மக்களை ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனங்கள் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் சந்திப்பதற்கு அனுமதி வழங்குவதுடன், இடம்பெயர்ந்தவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
“இடம்பெயர்ந்த மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் ஓமந்தைச் சோதனைச் சாவடிப் பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் சமூகசேவைகள் அமைச்சின் அதிகாரிகளுடன், ஐ.நா. முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இணைந்து இலங்கை அரசாங்கத்துக்கு உதவிசெய்ய விரும்புகிறோம். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்” என யு.என்.எச்.சி.ஆர். விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் பகுதிகளில் பணியாற்ற வேண்டும் என்ற தமது நிலைமையைச் சுட்டிக்காட்டியிருக்கும் யு.என்.எச்.சி.ஆர்., இதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இடம்பெயர்ந்த மக்களிடம் பதிவுகளை மேற்கொண்ட பின்னர், அவர்களுக்கு விசேட அடையாள அட்டைகளை வழங்கி சுதந்திரமான நடமாட்டத்துக்கு அனுமதிக்க வேண்டுமென யு.என்.எச்.சி.ஆரின் அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நிலைமைகள் சுமூகமான பின்னர் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் வெகுவிரைவில் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கான தங்குமிட வசதிகள் செய்துகொடுக்கப்பட வேண்டுமென அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“நலன்புரி நிலையங்களில் சிவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், நலன்புரி நிலையங்களுக்கு இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கினாலும் முகாம்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் அனைத்து நலன்புரி நிலையங்களிலும் ஒரு தரமான நிலையைப் பேண யு.என்.எச்.சி.ஆர். ஊக்கமளித்து வருகிறது. இதேபோன்று வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் தரமொன்றை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்” என யு.என்.எச்.சி.ஆரின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இடம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பு, மனிதநேய உதவிகள், சுதந்திரமான நடமாட்டம், நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் தொடர்பான சட்டங்கள் உறுதிப்படுத்தப்படவேண்டும். அத்துடன் இடம்பெயர்ந்தவர்களை அவர்களின் உறவினர்கள் நண்பர்கள் சென்று சந்திப்பதற்கும், விசேட தேவைகளுக்காக ஒருவர் வெளியேறுவதற்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும். அத்துடன், கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 300 பேரும் தனியான இடத்தில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு சர்வதேச சட்டத்துக்கு அமைய புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும்” எனவும் யு.என்.எச்.சி.ஆர். கோரிக்கை விடுத்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment