இலங்கையின் மனிதநேய நிலைமைகள் பற்றி இணைத்தலைமை நாடுகள் ஆராய்வு
இலங்கையின் மனிதநேய நிலைமைகள் குறித்து டோக்கியோ உதவிவழங்கும் மாநாட்டின் இணைத்தலைமை நாடுகள் கூடி ஆராய்ந்துள்ளன.
இலங்கையின் மோதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில் இணைத்தலைமை நாடுகள் இரண்டாவது தடவையும் கூடி ஆராய்ந்துள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் இலங்கை அரசாங்கப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் சிக்குண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பாதுகாப்புக் கூறித்து இணைத்தலைமை நாடுகள் கலந்துரையாடியுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் 48 மணித்தியாலங்கள் தற்காலிக மோதல் நிறுத்த அறிவிப்பை வரவேற்றிருக்கும் இணைத்தலைமை நாடுகள், மேலும் இரத்தக் களரியை ஏற்படுத்தாதவாறு பொதுமக்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளன.
மோதல்கள் நடைபெறும் பகுதியில் சிக்குண்டிருக்கும் பொதுமக்கள் சுதந்திரமாக வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இணைத்தலைமை நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
அத்துடன், பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருள்களை கப்பல் மூலம் அனுப்பிவைப்பதற்கும், காயமடைந்தவர்களை வெளியேற்றுவதற்கும் இரண்டு தரப்பும் அனுமதிக்க வேண்டும் என இணைத்தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன.
இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சட் பௌச்சர் கலந்துகொண்டார். இலங்கையில் போர்நிறுத்தமொன்றைக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் முயற்சித்துவரும் நிலையிலேயே இணைத்தலைமை நாடுகளின் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment