புதுமாத்தளன் மண் அணையோடு சேர்ந்து புலிகளின் பொய்த் தோற்றமும் தகர்ந்தது
கடந்த திங்கட்கிழமை புதுமாத்தளனில் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. புலிகளின் பிடியிலிருந்து சிவிலியன்களை மீட்டெடுக்கும் பணியில் படையினர் காத்திரமான வெற்றியை ஈட்டியுள்ளனர். முப்பத்தையாயிரம் சிவிலியன்கள் அன்றைய தினம் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்து சேர்ந்தனர்.
அடுத்த நாளும் பதினையாயிரத்துக்கு மேற்பட்டோர் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்து சேர்ந்தனர்.
இது போன்ற மீட்பு நடவடிக்கை உலகில் எங்கும் நடந்ததாக இல்லை. இவ்வளவு கூடுதலான எண்ணிக்கையில் மக்கள் மீட்டெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை எனலாம்.
மக்கள் மீட்டெடுக்கப்பட்டிருப்பது முக்கியமான நிகழ்வு. புலிகள் கட்டிவளர்த்த பொய்த் தோற்றம் தகர்ந்ததும் அதே அளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றது.
புதுமாத்தளன் பாதுகாப்புப் பிரதேசத்தில் தங்கியிருந்த மக்கள் புலிகளினால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுகின்றார்கள் என்றும் அவர்கள் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறுவதற்குப் புலிகள் இடமளிக்கின்றார்களில்லை என்றும் அரசாங்க தரப்பு கூறியதைப் புலிகளுக்காகப் பிரசாரம் செய்பவர்கள் மறுத்தார்கள்.
புலிகளுடன் தங்கியிருக்கும் மக்கள் எல்லோரும் புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் அங்கிருந்து வெளியேறுவதற்கு அவர்கள் விரும்பவில்லை என்றும் இப்பிரசாரகர்கள் அடித்துக் கூறினார்கள். தடையை மீறி வெளியேறியவர்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது பற்றியும் அதில் பலர் இறந்தது பற்றியும் உள்ளூர் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன. அப்படியிருந்தும் இப் பிரசாரகர்கள் தங்கள் பிரசாரத்தைத் தொடர்ந்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழக அரசியல் தலைவர்கள், சில சர்வதேச நிறுவனங்கள் என இப்பிரசாரகர்களின் பட்டியல் நீள்கின்றது.
இந்தப் பிரசாரம் பொய் என்பது திங்கட்கிழமை முழு உலகுக்கும் தெரிந்தது. பாதுகாப்பு வலயத்திலிருந்து மக்கள் வெளியேறுவதற்குத் தடையாக இருந்த மண் அணையைப் படையினர் தகர்த்ததும் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியதைத் தொலைக்காட்சியில் காண முடிந்தது. விமானப் படைத் தலைமையகத்திலுள்ள நடவடிக்கை அறையிலிருந்து வெளிநாட்டு இராஜதந்திரிகளும் இக்காட்சியைப் பார்த்தார்கள். எப்போது வெளியேறுவோம் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் போல மக்கள் முண்டியடித்து வெளியேறினார்கள்.
சுயவிருப்பத்தின் பேரிலேயே புதுமாத்தளனில் மக்கள் தங்கியிருக்கின்றார்கள் என்ற பிரசாரம் பொய்யாகியது.
புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதும் ஒரு பொய்மைத் தோற்றமே. ஆயுத பலத்தின் மூலம் புலிகள் தாங்களாகவே உருவாக்கிக்கொண்ட செயற்கைத் தலைமை அது. இத் தலைமை தனிநாடு என்ற மாயைக்குள் மக்களைப் பலவந்தமாக அமிழ்த்தி வைத்திருந்தது. இன்று எல்லாம் முடிந்துவிட்டது. மக்கள் சுயமாகச் சிந்தித்துச் செயற்படுவதற்கு இனிமேல் முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இனிமேல் சுயமாகச் சிந்திக்குமா?
பல தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாகியது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இது உருவாகிய காலமும் நோக்கமும் முக்கியமான கவனத்துக்குரியவை.
பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்குச் சமர்ப்பிக்கப்பட்ட காலத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகியது. அத் தீர்வுத்திட்டம் சமஷ்டி அடிப்படையில் அமைந்தது. சில குறைபாடுகள் உள்ள போதிலும் சிறந்த தீர்வு என்று பெரும்பாலானோரால் அது வரவேற்கப்பட்டது.
அத் தீர்வுத் திட்டம் சிறந்தது என்பதைப் புலிகள் விளங்கிக்கொள்ளாமலில்லை. அது நடைமுறைக்கு வந்தால் தங்கள் தனிநாட்டுக் கொள்கை அம்போ ஆகிவிடும் என்பது விளங்கியதால், எப்படியாவது அதைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவுக்குப் புலிகள் வந்தார்கள். அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்காகப் புலிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள எல்லாக் கட்சிகளும் இனப் பிரச்சினைக்கான தீர்வாகத் தனிநாட்டை ஏற்றுக்கொண்டவையல்ல. தனிநாட்டை ஏற்றுக்கொண்டவர்கள் ஒரு சாரார். நிர்ப்பந்தம் காரணமாகத் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகச் செயற்பட்டவர்கள் இன்னொரு சாரார். ஆனால் எல்லோரும் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தை எதிர்த்தார்கள். எதிர்ப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட அமைப்பினால் எதிர்க்காமலிருக்க முடியுமா?
பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ்த் தலைவர்கள் தமிழினத்துக்குப் பாரதூரமான துரோகத்தைப் புரிந்துள்ளார்கள் என்பது எதிர்கால வரலாற்றில் பதியப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் புலிகளையும் விமர்சிக்கும் தமிழ்த் தலைவர்கள் கூறுகின்றார்கள். உண்மையான கூற்று.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புலிகளை விசுவாசத்தோடு ஏற்றுக்கொண்டவர்களும் நிர்ப்பந்தம் காரணமாக ஏற்றுக்கொண்டவர்களும் இருப்பதொன்றும் இரகசியமல்ல. உள்ளார்ந்து அடங்கியிருந்த இந்த வேறுபாடு இப்போது வெளிப்படத் தொடங்கிவிட்டது.
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுத்த அழைப்பு தொடர்பான நிகழ்வுகளில் இந்த முரண்பாட்டைக் காண முடிந்தது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு சிவசங்கர் மேனன் விடுத்த அழைப்பைக் கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் முதலில் நிராகரித்தனர். சில நாட்களின் பின் இன்னொரு பிரிவினர் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு புதுடில்லிக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். முதலில் அழைப்பை நிராகரித்தவர்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு புதுடில்லிக்குச் சென்றவர்களைப் பகிரங்கமாக விமர்சித்தார்கள்.
எவ்வளவு தான் மூடி மறைத்தாலும் இது தனிநாட்டை வலியுறுத்துபவர்களுக்கும் மற்றையோருக்கும் இடையிலான முரண்பாடு.
தனிநாடு நடைமுறைச் சாத்தியமற்றது என்பதில் இன்று சந்தேகம் வேண்டியதில்லை. எனவே நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகள் மூலம் ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வை அடைவதற்கு முயற்சிப்பதைத் தவிர வேறு வழி தமிழ்த் தலைவர்களுக்கு இல்லை.
மூன்று இலட்சம் மக்கள் சுயவிருப்பத்தின் பேரில் புலிகளுடன் புதுமாத்தளனில் தங்கியிருக்கின்றார்கள் என்ற பிரசாரத்தை இனியும் தொடர முடியாது. அது கண்முன்னாலேயே பொய்த்துவிட்டது.
புதுமாத்தளனில் தங்கியிருந்த மக்கள் சந்தர்ப்பம் கிடைத்ததும் தொகை தொகையாக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்துவிட்டனர். மூன்று நாட்களுக்குள் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் இவ்வாறு வந்தனர். மக்கள் ஆவலோடு வெளியேறி வரும் காட்சிகள் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டன. அவர்கள் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.
மீட்கப்பட்டு வெளியேறி வரும் மக்களுக்குத் தேவையான சகல உதவிகளையும் அரசாங்கம் செய்கின்றது. அவர்களின் உணவுத் தேவை, வைத்தியத் தேவை போன்றன சரியான முறையில் நிறைவேற்றப்படுகின்றன.
புதுமாத்தளனிலிருந்து வெளியேறி வந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் நலன்புரி நிலையத்துக்குச் சென்றுகொண்டிருக்கையில் பஸ்ஸில் அவருக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டது. இராணுவ வீராங்கனைகள் பஸ்ஸ¤க்குள்ளேயே அப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தார்கள். தாயும் சேயும் சுகமாக இருக்கின்றனர்.
புலிகளின் பிடியிலிருந்து பெருந்தொகையானோர் மீண்டு வந்துள்ளனர். இவர்களுக்கு அரசாங்கம் செய்யும் உதவிகளுக்கு மேலதிகமாகப் பல பொது நிறுவனங்களும் தொண்டர் அமைப்புகளும் உதவிகளைச் செய்து வருகின்றன.
பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் மக்களின் நலன் பற்றியும் அவர்களின் பிரச்சினைகள் பற்றியும் இப்போது தேர்தல் மேடைகளில் அதிகம் பேசுகின்றது. ஆனால் யுத்த சூன்யப் பிரதேசத்திலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்திருக்கும் தமிழ் மக்களுக்கு ஏதேனும் உதவி செய்வது பற்றி இதுவரை ஐக்கிய தேசியக் கட்சி சிந்தித்ததாகத் தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் வழமையான பாணியே இதுதான். பேச்சுப் பல்லக்கு; தம்பி கால்நடை என்ற மாதிரி.
இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றி ஐக்கிய தேசியக் கட்சி அடிக்கடி பேசுகின்றது. ஆனால் எந்தக் காலத்திலும் அரசியல் தீர்வுக்காகச் சுண்டுவிரலைக் கூட ஐக்கிய தேசியக் கட்சி அசைத்ததில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் தீர்வைக் குழப்பும் வகையில் செயற்பட்டிருக்கின்றதேயொழியத் தீர்வுக்கு ஆதரவாகச் செயற்பட்டதில்லை. இதுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் நிஜமுகம்.
புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பேச்சு அடிபட்ட நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் ஜயவிக்கிரம பெரேரா பாராளுமன்றத்தில் கூறிய ஒரு கூற்று நினைவுக்கு வருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க விடாமல் தமிழ் மக்களைத் தடுத்ததன் மூலம் ரணிலுக்குச் செய்த பாவத்தின் பலனைப் பிரபாகரன் அனுபவிக்கின்றார் என்று ஜயவிக்கிரம பெரேரா கூறினார்.
அவருடைய இக் கூற்று அரசியல் வட்டாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான விமர் சனத்துக்கு வழிவகுத்துள்ளது. ரணில் ஜனாதி பதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தால் பிரபாகரனுக்கு இந்தப் பாதிப்பு நேர்ந்திரு க்காது என்பதே ஜயவிக்கிரம பெரேரா வினுடைய கூற்றின் அர்த்தம் என்று விமர்சனம் செய்கின்றார்கள். இன்றைய நிலையில் இந்த விமர்சனம் ஐக்கிய தேசியக் கட்சியை வெகுவாகப் பாதிக்கின்றது.
மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மனோ கணசேனின் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் மூன்று வேட்பாளர்களும் ஐக்கிய தேசியக் கட்சிச் சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள். பத்திரிகை விளம்பரத்தில் இவர்கள் தங்களை ஐக்கிய தேசியக் கூட்டணி வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள். ஆனால் யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள் தங்களை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் என்றே அறிமுகப்படுத்துகின்றனர். கூட்டணி என்ற பேச்சே இல்லை.
தமிழ் மக்களின் குரலாகத் தங்களை அறிமுகப்படுத்தும் ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திக் காட்டுவதற்காகவே கூட்டணிக் கதை பேசுகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் மக்களின் நலன்களுக்கு முரணானது என்பது இவர்களுக்கும் புரிகின்றது போலும்.
Thinakaran
0 விமர்சனங்கள்:
Post a Comment