தாகம், பசிக்களை, கிழிந்த அழுக்கான ஆடைகளுடன் எலும்புக் கூடுகளாக காணப்படும் இடம்பெயர்ந்தவர்கள்!பயங்கரமான திரைப்படத்தை பார்ப்பது போன்றது!
மோதல் பகுதிகளிலிருந்து தமிழ் பெண்களும் பிள்ளைகளும் வெளியேறி கஷ்டப்பட்டு நடந்து வருவதைப் பார்த்தபோது பயங்கரமான திகிலூட்டும் திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்பட்டதாக நிவாரணப் பணியாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அவர்களில் சிலர் மெலிந்து காணப்பட்டதுடன் எலும்புகள் வெளியே தெரிந்ததாகவும் இரத்தம் தோய்ந்த நிலையில் அழுக்கான கிழிந்த உடைகளுடன் காணப்பட்டதாகவும் ஐ.ஏ.என்.எஸ். செய்தி சேவை தெரிவித்தது.
அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் பல வாரங்கள் தோய்க்கப்படாமல் இருந்தது. பலரின் காயங்களுக்கு மருந்து கட்டப்பட்டிருக்கவில்லை பலர் நோய்வாய்ப்பட்டிருந்தனர். நிற்கமுடியாமல் பலர் காணப்பட்டனர் தமக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் வெற்றுத்தரையில் அமர்ந்தனர்.
ஒருசிலரே கதைக்க விரும்பினர் பலர் பலவீனமாக இருந்ததால் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே அவர்களிடமிருந்து வெளிப்பட்டது. தண்ணீர் குடிப்பதே ஒரே விருப்பமாக இருந்தது.
நீண்ட காலமாக அவர்களுக்கு ஒழுங்கான சாப்பாடு கிடைத்திருக்கவில்லை அவர்கள் கண்கள் உணவுக்காக மன்றாடின. கடந்த ஜனவரி முதல் மோதலுக்கு இடையில் சிக்கி இவர்கள் அல்லல் பட்டவர்கள். ஷெல், மோட்டார் மழைகளுக்கு மத்தியில் சிதறியோடியவர்கள் இவர்கள்.
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுடன் கதைத்தவர்கள், அவர்கள் கூறியதை தெரிவித்துள்ளனர். பலர் இலையான்கள் போல இறந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். தம்மை இனங்காட்ட வேண்டாமென்ற நிபந்தனையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக ஐ.ஏ.என்.எஸ்.செய்திசேவை குறிப்பிட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்தது.
புலிகளும் மக்கள் மத்தியிலிருந்து தாக்குதலை நடத்தியுள்ளனர். மக்கள் வெடித்து சிதறியதையும் கை, கால்களை இழந்ததையும் கண்டதாக உயிர்தப்பிய ஒருவர் தான் நேரில் கண்ட பயங்கரமான காட்சியை விபரித்திருக்கிறார். குடும்பங்கள் பிரிந்து சின்னாபின்னமாகிவிட்டன. புலிகளின் பகுதிகளிலிருந்த இரு வைத்தியசாலைகளில் உயிர்காக்க மருந்துகள் இல்லை தப்பியோட முயன்றபோது புலிகளால் சுடப்பட்டவர்களும் காயமடைந்தவர்களில் உள்ளடங்கியிருந்தனர். உணவு விநியோகம் இல்லை. கிடைக்கும் சிறிதளவு உணவும் தடை செய்யப்பட்டதாகவே இருந்தது உயிரைக் காப்பாற்றுமாறு பிரார்த்தனையுடன் பதுங்கு குழிகளுக்குள் அவர்கள் இருந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தமது உடைகளை கிழித்தே கட்டுப் போட்டுள்ளனர் இரத்தம் ஓடுவது கட்டுப்படாத போது மண்ணை எடுத்து அப்பிவிட்டு துணியால் சுற்றிக்கட்டியுள்ளனர். காயங்கள் சிதழ் பிடித்துள்ளன. மோதல் பகுதியிலிருந்து வெளியேறி பஸ்களில் ஏற்றப்பட்டு கொண்டுவரப்பட்டபோது சிலர் இறந்து விட்டனர். 2009 இன் பின்னர் எத்தனை பொதுமக்கள் இறந்துள்ளனர் என்பது ஒருவருக்கும் தெரியாத நிலை காணப்படுவதாக தோன்றுகிறது.
சில ஆயிரங்கள் என்று கொழும்பு தெரிவித்துள்ளது. இராஜதந்திரிகள் அதிக புள்ளி விபரங்களை கூறுகின்றனர்.
ஆஸ்பத்திரியில் கட்டிலொன்றில் தமிழ் பெண் ஒருவர் கட்டப்பட்டிருந்தார். மேலாடையின்றி வார்ட்டில் ஓடித்திரிந்ததால் கட்டிவைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மனிதாபிமான நெருக்கடியை அடுத்து சர்வதேசத்தின் உதவிநாடப்பட்டுள்ளது. வவுனியாவில் 70 ஆயிரம் பேர் வரைபாடசாலைகள். முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரிகளில் உணவு வழங்க முடியாமல் இருப்பதால் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் உதவியளிக்க முன்வந்துள்ளன. வவுனியாவில் போத்தல் நீர், பிஸ்கட், குளுக்கோஸ் பற்றாக்குறையாக உள்ளது ஆயிரக்கணக்கானோர் தற்போதும் ஓமந்தையில் உள்ளனர் ஒரு ஆயிரம் பேரை உள்ளீர்க்க தயாரென மன்னார் மாவட்ட அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் கூறியுள்ளன. ஆனால் மன்னாருக்கு சென்றால் தமிழர்கள் படகுகளில் இந்தியாவுக்கு சென்றுவிடுவார்களொன சில அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment