அடித்துப்பிடித்து உணவைப் பெறுவதால் சிறுவர்களுக்கும், வயோதிபர்களுக்கும் உணவில்லை!
புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறிய மக்களுக்கு உணவே பிரதான பிரச்சினையாக இருப்பதுடன், உணவு வழங்கப்படும்போது ஒருவரை ஒருவர் அடித்துப் பிடித்து வாங்குவதால் சிறுவர்களும், முதியவர்களும் உணவின்றி அவதிப்படுவதாக புதுமாத்தளன் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதுமாத்தளன் பகுதியிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் கொழும்பிலிருந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குழுவொன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினரால் புதுமாத்தளன், கிளிநொச்சிப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் மற்றும் அங்குள்ள நிலைமைகள் குறித்து ஊடகவியலாளர்கள் பார்வையிட்டு வந்துள்ளனர். இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் நிலை மிகவும் மோசமாகவிருப்பதுடன், அம்மக்களுக்கு உணவே பாரிய பிரச்சினையாக உள்ளது என அங்கு சென்று திரும்பியிருக்கும் ஊடகவியலாளர் ஒருவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
“இங்கு (அரச கட்டுப்பாட்டுப் பகுதி) வந்ததன் பின்னரே சாப்பிட உணவு கிடைக்கிறது” என முதியவர் ஒருவர் கூறியதாகவும், “வன்னியில் ஷெல் தாக்குதல்கள் தாங்கமுடியாமல் தப்பியோடி வந்துவிட்டோம். இங்கு கவனிப்புக்கள் பரவாயில்லை” என தனது ஒரு பிள்ளையை இழந்து எஞ்சிய பிள்ளையுடன் வந்த தயார் ஒருவர் கூறியதாகவும் அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வீதியோரமாக வாய்க்காலைப் போன்று ஓடிக்கொண்டிருக்கும் அழுக்கடைந்த நீரில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் என இடம்பெயர்ந்தவர்கள் குளித்துக்கொண்டிருந்தமையைக் காணக்கூடியதாகவிருந்தாக அந்த ஊடகவியலாளர் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுஇவ்விதமிருக்க, முதலில் தாம் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், கிளிநொச்சி செல்லும் வழியில் ஆங்காங்கே இராணுவத்தினர் முகாம்கள் அமைத்திருப்பதைக் காணக்கூடியதாகவிருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்தமுறை அழைத்துச் செல்லப்பட்டபோது கிளிநொச்சி நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் அமைக்கப்பட்டிருந்த 58வது படைப்பிரிவின் இராணுவத் தலைமையகம் தற்பொழுது விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்துக்கு அலுகிலுள்ள புலிகளின் கட்டடமொன்றுக்கு மாற்றப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செல்லும் வழியில் முறிந்த மரங்களையும், இடிந்து தரைமட்டமாக்கப்பட்ட கட்டடங்களையுமே தம்மால் காணமுடிந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment