புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும்: இணைத்தலைமை நாடுகள் கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமெரிக்கா தலைமையிலான டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இணைத்தலைமைகள் சார்பில் அமெரிக்க காங்கிரஸ் செய்மதித் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுடன் மூன்றாவது கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளது. பத்து நாட்களுக்குள் இது மூன்றாவது கலந்துரையாடலாக அமைந்துள்ளது.
விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமெனத் தாம் கோரிக்கை விடுப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் ரொபேர்ட் வூட் தெரிவித்துள்ளார்.
“விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு மூன்றாவது தரப்பிடம் சரணடைய வேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். அதேநேரம், விடுதலைப் புலிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவதுடன், மீள்குடியேற்றம் தொடர்பான தெளிவான திட்டங்களைத் தயாரித்துக்கொண்டு, அரசியல் பேச்சுவார்த்தைக்கான பாதையை இலங்கை அரசாங்கம் திறக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கிறோம்” என்றார் அவர்.
மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறியிருப்பதைத் தாம் வரவேற்பதுடன், மேலும் சிக்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் இணைத்தலைமை நாடுகள் தமது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளன.
மூன்றாம் தரப்பிடம் சரணடையுமாறு கோருவது நியாயமற்றது
இதேவேளை, விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து மூன்றாம் தரப்பிடம் சரணடையுமாறு வெளிநாடொன்று கோருவது நியாயமற்றது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்ற வகையில் உள்ளகப் பிரச்சினையைத் தம்மால் தீர்த்துவைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment