பிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலை

பிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் மனநிலை பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை காணமுடிந்தது என்று வவுனியாவில் தங்கவைத்துள்ள இடம்பெயர் தமிழ் மக்களை பார்வையிட்ட வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வவுனியா பகுதிகளில் தமிழர்கள் வைக்கப்பட்டு உள்ள முகாம்களை பார்வையிட்டுவிட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பிய வாழும் கலை அமைப்பின் நிறுவுனரும் ஆன்மிகவாதியுமான ஸ்ரீரவிசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வீடு வாசல்களை இழந்து ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நான் வவுனியா பகுதிகளில் செட்டிகுளம் உட்பட 8 முகாம்களை சென்று பார்வையிட்டேன்.
மனதை கல்லாக்கி கொண்டு தான் அங்கு செல்ல முடியும் மனிதனாக போக முடியாது என்று தான் சொல்லவேண்டும். இந்த முகாம்களில் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். பொறியியலாளர்கள், டாக்டர்கள் வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினர் அங்கு தங்கி உள்ளனர்.
பிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவர்களுடன் பேசிய போது இப்படியே விட்டுவிட்டால் அவர்களில் பெரும்பாலானோர் மனநிலை பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை காணமுடிந்தது. அகதிகள் முகாம்களில் தங்கியிருந்து தமிழர்களுக்கு வேட்டி சேலை போன்றவற்றை வழங்கினோம்.
முகாம்களில் தங்கி உள்ளவர்கள் இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். இராணுவத்தால் எந்த தொல்லையும் இல்லை என்று சொல்கிறார்கள்.
இந்திய அரசு எங்களுக்கு உதவும் என்று பெரிதும் நம்பினோம் கைவிட்டு விட்டார்களே என்று வேதனையுடன் தெரிவித்தார்கள். இந்த விஷயத்தில் இந்திய அரசு மிகப் பெரிய தவறை இழைத்துவிட்டதாக கருதுகிறோம்.
தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் அளவுக்கு தமிழ் தெரிந்த ஒருவரை தூதராக நியமிக்காததே இந்த பிரச்சினைக்கு முடிவு காணமுடியவில்லை என்று கருதுகிறேன். அத் துடன் இலங்கை பிரச்சினை தீராததற்கு இங்கும் சரி அங்கும் சரி தமிழர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாததும் ஒரு காரணம் ஆகும்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக இங்கு ஹர்த்தால் அல்லது உண்ணாவிரதம் போன்றவற்றை மேற்கொள்வதால் அங்கு பிரச்சினை சரியாகிவிடும் என்று சொல்லமுடியாது.
ஹர்த்தால் நடத்தினோம் உண்ணாவிரதம் இருந்தோம் என்று திருப்தி அடையலாமே தவிர அங்கு பிரச்சினை தீர்ந்துவிடாது.உணவு, உடை என்ற நிவாரண உதவிகளைப் பெறும் நிலையில் முகாம்களில் தங்கி இருந்தாலும் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்லவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.
இது குறித்து இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் நான் பேசினேன். முகாம்களில் தங்கி இருப்பவர்களை சொந்த வீடுகளுக்கு உடனடியாக செல்ல முடியாத அளவுக்கு வீடு வாசல்கள் தரை மட்டமாகி உள்ளன அவற்றை உடனடியாக சீரமைக்க முடியாது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
தீவிரவாதத்தை வேரோடு அழித்த பின்பே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார். இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்து இருக்கலாம்.
நானே பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பல முறை முயன்றேன்.
அதற்கு பலன் கிடைக்கவில்லை.
ஆனாலும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். தங்களை தீவிரவாதி என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற பயத்தில் உள்ளனர் என்று தெரிவித்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment