தமிழக அரசியல் தலைவர்களிடம் ஒரு வேண்டுகோள்
தமிழகத்தின் அரசியல் கோலங்களை நோக்கும் போது மாநிலத்தின் சகல அரசியல் கட்சிகளுமே இந்திய பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை முன்னர் எதிர்பார்க்கப்பட்டதையும் விட கூடுதலான அளவுக்கு முக்கியமான ஒரு சர்ச்சையாக்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
இலங்கையில் தமிழ் மக்கள் எதிர் நோக்கியிருக்கும் படுமோசமான மனிதாபிமான நெருக்கடியைத் தேர்தல் பிரசாரத்தொனிப்பொருளாக்கினால் தமிழக மக்கள் வெளிக்காட்டும் ஒருமைப்பாட்டு உணர்வை கட்சி அரசியல் அடிப்படையில் மலினப்படுத்துவதாக அமைந்துவிடும் என்று அக்கறையுடைய தரப்புகளினால் வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும், மாநிலத்தின் அரசியல் தலைவர்கள் இலங்கைப் பிரச்சினையையே பயன்படுத்தி தங்களுக்குள் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசிக் கொண்டிருக்கும் விபரீதமான நிலைமையைக் காண்கிறோம்.
பலவருடகாலத்துக்குப் பிறகு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் சகல கட்சிகளுமே ஆக்ரோஷமாகக் குரலெழுப்புகின்ற சூழ்நிலை தோன்றுவதற்கான ஆரம்பப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் நடத்தியது. அந்தக் கட்சியின் தமிழ்நாடுமாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஒருநாள் உண்ணாவிதரப் போராட்டமே இலங்கை நெருக்கடி தொடர்பில் உறங்கு நிலையில் இருந்து வந்த பிரதான திராவிடக் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை. இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் கொழும்பு அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டுமென்ற கோரிக்கையை சகல தமிழகக் கட்சிகளுமே முன்வைத்துப் போராட்ட இயக்கங்களை முன்னெடுத்தன. ஆனால், இந்தப் போராட்டங்களினால் மத்திய அரசாங்கத்தின் அணுகுமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. அத்தகைய தொரு நிலைமைக்குக் காரணம் மத்திய அரசாங்கத்தின் மீது தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி போதுமான நெருக்குதல்களைப் பிரயோகிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த பின்னரே முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இலங்கை நெருக்கடி தொடர்பான தனது அணுகுமுறையை மாற்றுவதற்கு மனம் கொண்டார். கருணாநிதிக்கு எதிராக இலங்கைப் பிரச்சினையைப் பயன்படுத்த முடியுமென்ற நம்பிக்கை பிறந்த பின்னரேயே ஜெயலலிதா உண்ணாவிரதப் போராட்டத்தில் அதுவும் பாராளுமன்றத்தேர்தலுக்கான அறிவிப்பு வந்த பின்னர் குதித்தார்.
ஜெயலலிதாவுக்கு எதிராகப் பயன்படுத்த முடியுமென்றால் எந்த வொரு பிரச்சினையையும் கலைஞர் கருணாநிதி தவறாமல் பயன்படுத்துவதும் கருணாநிதிக்கு எதிராகப் பயன்படுத்த முடியுமென்றால் எந்தவொரு பிரச்சினையையும் அதன் விளைவுகளைப் பற்றிப் பொருட்படுத்தாமல் ஜெயலலிதா பயன்படுத்துவதும் அண்மைக்கால தமிழக அரசியலில் எழுதப்படாத ஒரு விதி. அந்த விதிக்கு இலங்கைத் தமிழர்களின் அவலமும் தப்ப முடியாது. அதன் பிரகாரமே அரசியல் சக்கரம் அந்த மாநிலத்தில் சுழன்று கொண்டிருக்கிறது. மத்தியிலே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இலங்கையில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்கு இராஜதந்திர முறையில் உறுதியான முயற்சிகளை மேற்கொள்வதற்கு தவறிவிட்டது என்ற அபிப்பிராயம் தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் நிலையில் காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணியை வைத்திருக்கும் திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியிருக்கிறார் என்பதை அவரின் பேச்சுகள் மற்றும் அறிக்கைகள் மூலமாக தெளிவாக உணரக் கூடியதாக இருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் அணுகுமுறையை நியாயப்படுத்த வேண்டிய நிலையில் அவர். காங்கிரஸ் கட்சியை நம்பியே தமிழகத்திலும் ஆட்சியில் இருப்பதால் வெறும் வேண்டுகோள்களையும் கோரிக்கைகளையும் விடுப்பதைத் விர உருப்படியாக எதையுமே செய்ய முடியாதவராக கலைஞர் காணப்படுகிறார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையுடன் தொடர்புபட்ட விவகாரங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் காணப்படக் கூடியதாக இருக்கின்ற விசித்திரமான அம்சமென்னவென்றால் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் போர் என்றால் மக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாததே என்று கூறிய ஜெயலலிதாவின் தலைமையிலான அணியில் இலங்கை விவகாரத்தில் தீவிரமான நிலைப்பாட்டைக் கொண்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர். எஸ். ராமதாஸ் போன்றவர்களும் கம்யூனிஸ்ட் பாண்டியனும் சேர்ந்து நிற்கின்றமைதான். இதேபோன்றே தீவிரமான நிலைப்பாட்டைக் கொண்ட இன்னொரு தலைவரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவனும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்து தேர்தல் களத்தில் குதிக்க வேண்டிய நிலை.
இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தேர்தலுக்குப் பயன்படுத்த மாட்டோம் என்று ஆரம்பத்தில் கூறிய பாண்டியன் இப்போது இந்தப் பிரச்சினையே தமிழக தேர்தல் களத்தில் முக்கியமானதாக இருக்கும் என்று கூறிகிறார். இலங்கைத்தமிழர் பிரச்சினை பாராளுமன்றத் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று சில வாரங்களுக்கு முன்னர் கூறிய கலைஞர் கருணாநிதி அண்மையில் தி.மு.க.சொற்பொழிவாளர்களை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து தேர்தல் பிரசாரங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக தானும் தனது கழகமும் செய்தவற்றை மக்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்திப் பேசுங்கள் என்று ஆணையிட்டிருக்கிறார். இறுதியாக நேற்று முன்தினம் சென்னையிலே நடைபெற்ற பேரணியிலே, "இலங்கைப் பிரச்சினைக்கு வழி சொல்லுங்கள் என்று என்னைப் பல தலைவர்களும் வற்புறுத்துகின்றனர். ஆனால், என்ன வழி என்று தெரியாமல் புலம்பித் தவிக்கிறேன் என்பதுதான் உண்மை நிலை' என்று கலைஞர் கூறினார். இந்தக் கூற்று ஒன்றே போதும் இலங்கைப் பிரச்சினையில் அவரின் கையறு நிலையை வெளிக்காட்டுவதற்கு.
டாக்டர் ராமதாஸூம் இலங்கைப் பிரச்சினையே தேர்தலில் பிரதான பிரச்சினையாக இருக்கும் என்று கூறிவிட்டார். வைகோ சிறைசெல்லவும் தயங்கமாட்டேன் என்று சவால் விடுக்கிற துணிச்சலுடன் இலங்கை நெருக்கடி தொடர்பில் சர்ச்சைக்குரியவகையிலான கருத்துக்களைப் பகிரங்கமாகக் கூறுகிறார். ஜெயலலிதா சொல்வதை நம்புங்கள் என்று கலைஞர் கிண்டல் செய்கிறார். கலைஞர் நாடகமாடுகிறார் என்று ஜெயலலிதா சொல்கிறார். இந்த இருவருமே நாடகமாடுகிறார்கள் என்று தேசிய முற்போக்கு திராவிடர் கழக தலைவர் நடிகர் விஜயகாந்த் சொல்கிறார். ஒவ்வொருதலைவரும் மற்றையவர் ஆடுகின்ற நாடகத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலைவரங்களையெல்லாம் பார்க்கும் போது இலங்கைப் பிரச்சினையைப் பற்றிப் பேசாமல் தமிழகத்தில் எந்தவொரு கட்சியுமே இன்று அரசியல் செய்யமுடியாது தேர்தலில் வெல்ல முடியாது என்றநிலை ஏற்பட்டுவிட்டது என்பதைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. 20 மைல் கடலுக்கு அப்பால் தமிழர்கள் படுகின்ற அவலங்கள் தொடர்பில் தமிழக மக்கள் மத்தியில் அனுதாபமும் ஒருமைப்பாட்டு உணர்வும் பாரியளவில் தோன்றியிருக்கிறது என்பதுதானே இதன் அர்த்தம். இந்த அனுதாபத்தையும் ஒருமைப்பாட்டையும் வாக்குகளாக மாற்றி தேர்தலில் ஆசனங்களைக் கைப்பற்றத் துடிக்கும் தமிழக கட்சிகளின் தலைவர்களிடம் ஒரு தயவான வேண்டுகோள். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு உங்கள் கட்சிகளுக்கு கிடைக்கும் ஆசனங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து புதுடில்லியில் அமையப் போகும் அரசாங்கத்தில் சேருவதற்கு நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. இடம் பெறக்கூடிய பேரம் பேசலின் போது ஆட்சியமைக்க உங்களின் ஆதரவை கோரும் அணியிடம் இலங்கை தமிழர்களின் இன்னல்களைப் போக்குவதற்கு உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பீர்களா? அந்த நிபந்தனை ஏற்றுக் கொள்ள ப்படாத பட்சத்தில் மத்திய அரசாங்கத்தில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவிப்பீர்களா? அத்தகைய நிலைப்பாட்டை நீங்கள் எடுப்பீர்கள் என்று இப்போது தேர்தல் பிரசாரங்களின் போது அறிவிப்பீர்களா? அவ்வாறு செய்வீர்களேயானால் இலங்கைப் பிரச்சினையில் உங்களது அணுகுமுறையில் ஓரளவுக்கேனும் நேர்மை இருக்கிறது என்று நம்ப இடமுண்டு.
Thinakural
0 விமர்சனங்கள்:
Post a Comment