மக்கள் தொடர்ந்து வெளியேற்றம்
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து செவ்வாய்கிழமை நண்பகல் வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வந்திருப்பதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.
ஞாயிற்றுக் கிழமை இரவு இராணுவத்தினர் ஆரம்பித்த முன்னகர்வு நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகள் காட்டிய கடும் எதிர்ப்பை முறியடித்து, புதுமாத்தளன் மற்றும் அம்பலவன் பொக்கணை ஆகிய பகுதிக்குள் இராணுவத்தினர் பிரவேசித்து அங்கு படையினர் தமது நிலைகளைப் பலப்படுத்தி வருவதாகவும் இராணுவத் தலைமையகம் கூறியிருக்கின்றது.
பாதுகாப்பு பிரதேசத்தில் இருந்து வந்துள்ள பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தேவையான அத்தியாவசிய பொருட்கள், பாதுகாப்பு அமைச்சுச் செயலாளரின் உத்தரவுக்கமைய புதுக்குடியிருப்புப் பிரதேசத்திற்கு வான்வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
அத்துடன் இந்த மக்களுக்கு அவசரமாகத் தேவையான மருந்துப் பொருட்கள், மற்றும் வைத்தியர் குழுவினரையும் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைத்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கின்றது.
இதற்கிடையில் ஓமந்தை பகுதிக்கு இராணுவத்தி்னரால் அழைத்து வரப்பட்ட 7000 பேரை மனிக்பாம் அருணாச்சலம் நிவாரண கிராமம் மற்றும் புதுக்குளம், தாண்டிக்குளம், ஆண்டியாபுளியங்குளம், முதலியாகுளம் ஆகிய இடங்களில் உள்ள பாடசாலைகள் என்பவற்றிற்கு அனுப்பி தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளில் இராணுவ அதிகாரிகளும, சிவில் அதிகாரிகளும் ஈடுபட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கி்ன்றனர்.
திங்கள்கிழமை இரவு முதல் வன்னிப்பகுதியில் இருந்து 316 காயமடைந்தவர்களும், இறந்தவர்களின் 17 உடல்களும் வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. இந்த 17 உடல்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் கூறியிருக்கின்றன.
BBC Tamil
0 விமர்சனங்கள்:
Post a Comment