விளையாட்டாக அனுப்பிய குறுஞ் செய்தி ஒருவரை விளக்கமறியலுக்கு அனுப்பியது
குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பிய ஒருவரை ஏப்ரல் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிபத்கொடை பொலிஸார் மேலதிக நீதிவான் மஞ்சுல திலகரத்னவிடம் தெரிவிக்கையில், சந்தேக நபரான சாமர ஹெட்டியாரச்சி, கயான் என்பவருக்கு குறுஞ் செய்தியனுப்புவதுண்டு. ஆனால் தவறுதலாக அவரது நண்பர்களில் ஒருவரான புவனேகா என்பவருக்கு அச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அந்தச் செய்தி யில் ""குண்டுகளை வெடிக்கச் செய்ய எப்போது போக விடுவாய்?' (When will you drop me to Blast bombs) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புவனேகா குறுஞ் செய்தியைப் பெற்றதும் பொலிஸில் முறைப்பாடு செய்தார். தேசிய புலனாய்வுப் பணியகம் சந்தேக நபரைக் கைது செய்தது .
புலிகளுடன் சந்தேக நபருக்குத் தொடர்புண்டா என்பது குறித்த விசாரணைகள் நடைபெறுவதாகவும் எனவே அவரை பிணையில் விடுவது குறித்து தாம் ஆட்சேபிப்பதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி கவிந்த பாஸ்குவல், தனது கட்சிக்காரர் புலிகளுடன் எதுவிதத்திலும் தொடர்பற்றவர் என்றும் இச் செய்தி நண்பர்களுக்கிடையில் வேடிக்கைக்காக அனுப்பப்பட்டது என்றும் நீதிவானிடம் தெரிவித்தார்.
சந்தேக நபர் பிணையில் செல்ல அனுமதிப்பதை பொலிஸார் ஆட்சேபித்ததன் காரணமாக அவரை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment