ஒஸாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமெரிக்கா முன்னுதாரணத்தை காண்பித்தால் புலிகளுடன் பேசத் தயார்
இலங்கைக்கு எதிராக துரோகமிழைத்த நாடு நோர்வேயாகும். இன்றும் அந்த துரோகத்தை அந்தநாடு முன்னெடுக்கின்றது. ஆனால்....
தற்போதைய சூழலில் அந்த நாட்டுடனான ராஜதந்திர உறவுகளை கைவிட வேண்டுமென்ற கோரிக்கை உசிதமானதல்ல. ஒஸாமா பின்லேடனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அமெரிக்கா முன்னுதாரணத்தை காட்டினால் புலிகளுடன் பேச நாமும் தயார் என்று அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவிக்கின்றது.
நோர்வேயிலுள்ள இலங்கை தூதரகம் மீதான தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே ஜாதிக ஹெல உறுமயவின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் நரேந்திர குணதிலக மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது இத் தாக்குதல் சம்பவத்தை கடுமையாக கண்டிக்கின்றோம். இதற்கு நோர்வேயின் அதிகாரத்தில் உள்ளோரினதும் ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்குமென்றே நினைக்கின்றோம்.
இன்று நேற்றல்ல பல தசாப்த காலங்களாக இலங்கைக்கு துரோகமிழைத்த எதிரி நாடு தான் நோர்வேயாகும்.
இதனை அன்றே ஹெல உறுமய தெரிவித்தது. அப்போது அந்த நாட்டுடன் ராஜதந்திர உறவுகளை கைவிட்டிருக்கவேண்டும்.
ஆனால் இன்று விடுதலை புலிகள் தோல் வியின் விளிம்பில் உள்ளனர். நோர்வே உட்பட சர்வதேச நாடுகள் பிரபாகரனை பாதுகாப்பதற்கு எல்லாவகையான சதித்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன.
இலங்கைக்கு எதிராக மெக்சிக்கோவை பயன்படுத்தி சட்ட மூலத்தை கொண்டு வர நோர்வே முயற்சிக்கின்றது ஆனால் சீனாவின் வீட்டோ அதிகாரத்தால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
ஆனால் இப் பிரயத்தனத்தை நோர்வே உட்பட மேற்குலக நாடுகள் கைவிடவில்லை தொடர்ந்து கொண்டுள்ளன.
இவ்வாறானதோர் சர்வதேச சூழ்நிலை உருவாகியிருக்கும் நிலையில் நோர்வேயுடனான ராஜதந்திர உறவுகளை நாம் முறித்துக்கொள்வோமானால் பாதகமான சில நிலைமைகள் உருவாகும். எனவே சூட்சுமமான ராஜதந்திர அணுகுமுறைகளை கையாளவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இதனால் மக்கள் மத்தியில் பிரபல்யமடை வதற்கான கருத்துக்களை வெளியிடாது, உணர்ச்சிவசப்படாது தீர்க்கதரிசனமான தீர்மானங்கள் எடுக்கவேண்டும்.
யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டுமென ஐ.நா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகிறது.இந்த நாடுகள் ஒஸாமா பின்லேடனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி எமக்கு முன்னுதாரணத்தை காட்டினால் நாமும் பேச்சுக்குத் தயார்.எமது ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், இராணுவத் தளபதி ஆகியோர் விடுதலைப் புலிகளை பூண்டோடு அழிக்கவேண்டுமென்பதில் தெளிவாகவுள்ளனர்.எனவே எந்தவொரு நாட்டு அழுத்தத்திற்கும் அரசாங்கம் அடிபணியாது. அதற்காக அனைத்து ஒத்துழைப்பையும் ஜாதிக ஹெல உறுமய வழங்கும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment