உலகின் முதலாவது கலப்பிறப்பாக்கம் மூலம் உருவாக்கப்பட்ட ஒட்டகக் குட்டி பிரசவம்
உலகின் முதலாவது கலப்பிறப்பாக்கம் (குளோனிங்) மூலம் உருவாக்கப்பட்ட ஒட்டகக் குட்டி வெற்றிகரமாக பிரசவமாகியுள்ளதாக துபாய் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
5 வருட கால தீவிர பரிசோதனை நடவடிக்கைகளையடுத்து கடந்த 8 ஆம் திகதி பிறந்த இந்த ஒட்டகக் குட்டிக்கு இன்ஜாஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இன்ஜாஸ் என்றால் அராபிய மொழியில் சாதனை எனப் பொருள்படும்.
2005 ஆம் ஆண்டு இறைச்சிக்காக கொல்லப்பட்ட முதிர்ந்த ஒட்டகம் ஒன்றின் கருப்பை கலத்திலிருந்து பெறப்பட்ட மரபணுவை பிறிதொரு பெண் ஒட்டகத்தின் முட்டையில் உட்செலுத்தி இந்த ஒட்டகக் குட்டி கருத்தரிக்கச் செய்யப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த கலப்பிறப்பாக்க செயன்முறையில் கிடைத்த வெற்றியானது எதிர்காலத்தில் ஆற்றல்மிக்கதும் பால் உற்பத்தி செய்யக் கூடியதுமான ஒட்டகங்களை விருத்தி செய்ய உதவும் என மேற்படி பரிசோதனை நடவடிக்கையில் பங்கேற்ற ஒட்டக இன விருத்தி நிலையத்தை சேர்ந்த விஞ்ஞானியான கலாநிதி லுலு சிகிட்மோர் தெரிவித்தார்.
30 கிலோகிராம் நிறையுடைய இந்த ஒட்டகமானது அதனது மரபணு கலங்கள் வழங்கியான ஒட்டகத்தை அச்சு அசலாக ஒத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment