மனித நுரையீரலில் ஊசியிலைச்செடி வளர்ந்திருப்பது கண்டுபிடிப்பு
நபரொருவரின் நுரையீரலினுள் ஊசியிலைச் செடியொன்று வளர்ந்திருந்த அதிசய சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.
ரஷ்ய யூரல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஆர்ரியொம் சிடோக்கின் (28 வயது) என்ற இந்த நபர் கடுமையான நெஞ்சு வலிக்கு ஆளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நெஞ்சு வலி மட்டுமல்லாது இருமும் போது இரத்தமும் வருவதாக ஆர்ரியொம் மருத்துவர்களிடம் தெரிவித்ததையடுத்து, அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர்.
ஆர்ரியொம்மின் மார்புப் பகுதியை எக்ஸ்ரே படம் எடுத்துப் பார்த்தபோது அப்ப டத்தில் அவரின் நுரையீரலில் கட்டி போன்ற ஏதோ ஒன்று வளர்ந்திருப்பதைக் கண்டு, அவருக்கு ஏற்பட்டுள்ளது புற்றுநோய் தான் என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
புற்றுநோய் கட்டியை அகற்ற உடனடியாக அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
புற்றுநோய் கட்டிக்குப் பதிலாக நுரையீரலில் ஊசியிலைச் செடியொன்று வளர்ந்திருப்பதைக் கண்டு மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
2 அங்குல உயரமான இந்தச் செடியே ஆர்ரியொம்மின் நெஞ்சு வலிக்கு காரணமாக இருந்துள்ளது என்பது மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பில் மேற்படி அறுவைச் சிகிச் சையில் பங்கேற்ற மருத்துவர் விளாடிமிர் கமெஷெல் விபரிக்கையில், ""ஆர்ரியொம் மின் எக்ஸ்ரே படத்தை பார்த்தவுடன் அவ ருக்கு ஏற்பட்டுள்ளது புற்றுநோய் தான் என நாம் 100 சதவீதம் உறுதியாக நம்பினோம். ஆனால், நுரையீரலில் மரச் செடியொன்று வளர்ந்திருப்பதைக் கண்டபோது எங்கள் கண் களை எம்மாலேயே நம்ப முடியவில்லை'' என்று தெரிவித்தார்.
அறுவைச் சிகிச்சை மூலம் நுரையீரலிலிருந்து மரச்செடி அகற்றப்பட்டதையடுத்து உடல் நலம் தேறி வரும் ஆர்ரியொம் தெரிவிக்கையில், "மரச்செடியொன்று எனது நுரையீரலில் வளர்ந்திருக்கும் என்பதை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால், ஏற்பட்டிருப்பது புற்றுநோய் அல்ல என்பது எனக்கு பெரும் ஆறுதலளிக்கும் விடயமாக உள்ளது'' என்று கூறினார்.
மனித உடலி னுள் செடியொன்று வளர்வது மிகவும் அபூர்வமான நிகழ்வு எனத் தெரிவித்த மருத்துவர்கள், சுவாசிக்கும் சமயத்தில் ஆர்ரியொம்மின் மூக்கினூடாக உள் சென்ற மேற்படி மரத்தின் சிறிய விதையானது, செடி யாக வளர்ந்திருக்கலாம் எனத் தாம் கருதுவ தாக குறிப்பிட்டனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment