''இங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..?''--விகடன்
'ரெண்டு நாளா மனசே சரியில்லைங்க... ஒரு வாய் சோறு உள்ளே இறங்க மாட்டேங்குது!'' சத்யராஜின் சிவந்த முகத்தில் அப்பிக்கிடக்கிறது சோகத்தின் சுவடு.
கறுப்பு டி-ஷர்ட்டில் பளீரிடுகிறது 'ஸ்டாப் தி வார் இன் லங்கா' வாசகம். ''என்னென்னவோ பண்ணணும்னு தோணுதுங்க. ஆனா, எதுவுமே பண்ண முடியாமப் புழுங்கித் தவிக்கிற நிலைமை. அப்படியாவது உயிரைப் புடிச்சு வெச்சுக்கிட்டு இருக்கணுமான்னு தோணுது!'' - ரெக்கார்டரை
அவ்வப்போது ஆஃப் செய்துவிட்டு, 'ஆஃப் தி ரெக்கார்டா'க வெளிப்பட்ட வேதனைதான் அதிகம்.
''எதையும் பட்படார்னு போட்டு உடைக்கிற நீங்களே ஈழப் பிரச்னைக்கு ஆதரவா குரல் கொடுக்க முடியாமல் அமைதி ஆகிட்டீங்களே..?''
''இது அமைதியும் இல்லை; புத்திசாலித்தனமும் இல்லை; என்னோட கையாலாகாத்தனம். சட்டத்துக்கும் நான் சார்ந்த தொழிலுக்கும் கட்டுப்பட்டு வாழ வேண்டிய நிலைமை. அதை நினைச்சா, எனக்கே வெட்கமா இருக்கு. உலகம் முழுக்க இருந்து வேதனைக் குரல்கள் போன் வழியாக் கொட்டுறப்போ, நடக்குற வன்கொடுமைகளை நினைச்சு ரத்தம் கொதிக்குது. ஒரு தமிழனா அந்த மக்களுக்கு ஒரு துரும்பைக்கூட கிள் ளிப் போட முடியாததை நினைச்சு நிமிஷத்துக்கு நிமிஷம் வெட்கப்பட்டுட்டு இருக்கேன். எங்களைப் போன்றவர்களாவது பரவாயில்லை. இங்கே நிறைய பேர், 'அது ஏதோ பக்கத்து நாட்டுப் பிரச்னை. நமக்கென்ன வந்துச்சு'ன்னு நினைச்சுட்டு இருக்காங்க. அப்படியே பக்கத்து நாட்டுப் பிரச்னையாவே நினைச்சாவது, அதைத் தீர்க்கிறதுக்கு முனைப்பு காட்டலாம்ல?
புலமைப்பித்தனோட 'பூகோளமே பலிபீடமாய்' புத்தகத்துல, இலங்கையின் பூகோள அமைப்பே எப்படி இன அழிப்புக்குக் காரணமா இருக்குனு விளக்கியிருப்பாரு. ஒரு இனம்... நம்ம சொந்த இனம் கண்ணு முன்னாடி அழிக்கப்படும்போது ஒரு சக மனுஷனாகவாவது அதைத் தடுக்கக் குரல் கொடுக்கணும். கண்டுக்காம நம்ம வேலையைப் பார்க்குறது எவ்வளவு பெரிய அநியாயம்! என் அளவுக்கு ஊடகங்கள் வாயிலாகவும் நண்பர்களோட போராட்டங்கள் மூலமாகவும் என் ஆதங் கத்தை வெளிக்காட்டிட்டுதான் இருக் கேன். இதுக்கு மேலே ஒரு தனி மனுஷனால் என்ன பண்ண முடியும்னு தெரியலை. வெட்கமும் வேதனையுமா இருக்கு!''
''ஈழப் பிரச்னையை மையப்படுத்தி இங்கே நடக்கும் அரசியல் கூத்துகள் குறித்து உங்க கருத்து?''
''தமிழக அரசியல்வாதிகளில் உண்மையான உணர்வாளர்கள், போலியான உணர்வாளர்கள்னு ரெண்டு பிரிவு இருக்காங்க. இதுல யாரா இருந்தாலும் தேர்தலை மையமா வெச்சுக் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம். நான் தொழில் சார்ந்து கையாலாகாத நிலையில் இருப்பது போல, அவங்க தேர்தல் சார்ந்து அதே நிலையில் இருக்காங்க. தங்கள் உணர்வுகளை நடைமுறைப்படுத்த இங்கே அதிகாரமும் பதவியும் கிடைச்சாதான் சாத்தி யம். அதுக்கான போராட்டங்களில் இப்போ இருக்காங்க. ஆனா, இதெல்லாம் நடந்தேறுவதற்குள் அங்கே என்ன கந்தரகோலம் காத் திருக்கோ... தெரியலை. யாரையும் குத்தம் சொல்றேன்னு நினைக்க வேண்டாம். மனசுல பட்டதைச் சொல்றேன்.''
''விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பின்னடைவுச் செய்திகள் பற்றி என்ன நினைக்கிறீங்க?''
''கொடுமைங்க. என் சூழ்நிலையில், தடை செய்யப்பட்ட இயக்கத்தைப் பத்தி என்னால மனசுவிட்டுப் பேச முடியலை. ஒண்ணு மட்டும் உண்மை... விடுதலைப் போராட்டங்கள் இறுதியில் வெற்றி பெற்றே தீரும்கிறது உலக நியதி! ஆனா, அதற்கிடையில் பாவப்பட்ட மக்களை அழிப்பதை என்ன காரணம் சொன்னாலும் சகிச்சுக்க முடியாது. இப்போ அங்கே நடுநடுங்கி நிக்கிற மூணு லட்சம் மக்களையாவது உயிரோடு மீட்டாகணும். ஒரு லட்சம் மக்கள்தான் இருக்காங்கன்னு சொல்ற இலங்கை அரசோட விஷமத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்!''
''இந்தத் தேர்தல்ல எந்தக் கட்சி சார்பாகவாவது பிரசாரம் பண்ணுவீங்களா?''
''எந்த அரசியல் சார்பும் இல்லாதவனாகத்தான் நான் இருக்க விரும்புறேன். அப்போதான் சுதந்திரமா நினைச் சதைச் செய்ய முடியும். இப்போ இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் சி.மகேந்திரனின் போராட்டத்தில் ஓர் உண்மையான உணர்வாளனா என்னால் கலந்துக்க முடியுது. தம்பி திருமாவளவன் கட்சி அலுவலக விழா விலும் நான் நிக்கிறேன். இந்தச் சுதந்திரம் பறிபோகக் கூடாதுனு நினைக்கிறேன். பிரசாரத்துக்காக எல்லாக் கட்சிகளும் பல வருஷமாக் கூப்பிட்டுட்டுத்தான் இருக்காங்க. ஆனா, வர முடியாதுனு உறுதியா சொல்லிட்டேன்!''
''உங்க சம கால நண்பர் விஜயகாந்த்தின் அரசியல் வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீங்க?''
''விஜயகாந்த்தோட அரசியல் வளர்ச்சி பத்தி இப்ப என்னால பளிச்னு எதுவும் சொல்ல முடியலை. இப்பவும் நேர்ல சந்திக்கிறப்போ, பழைய நட்போடு பேசுவார். ஆனா, அரசியல் மட்டும் பேச மாட்டார். எனக்கு அது பிடிக்காது, தெரியாதுன்னு அவருக்குத் தெரியும். அந்தச் சாதுர்யத்தை அவர் தொடர்ந்து பயன்படுத்தணும். உங்களைப் போல நானும் அடுத்து அவர் என்ன பண்ணப்போறார்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்!''
''தங்கர் பச்சானோட 'களவாடிய பொழுதுகள்' படத்துல திரும்பவும் பெரியாரா நடிக்கிறீங்களாமே?''
''ஒரு பாட்டுல மட்டும் அப்படி நடிச் சிருக்கேன். மே தின விழாவில் பெரியார் வர்ற மாதிரி ஸீன். அப்படியே நைஸா தங்கர்கிட்ட, 'கார்ல் மார்க்ஸ் மாதிரியும் ஒரு வேஷம் போட்டுக்கவா'ன்னு கேட்டுப் பார்த்தேன். 'அடுத்த படத்துல பார்க்கலாம்'னு சொல்லிட்டார்!'
0 விமர்சனங்கள்:
Post a Comment