முல்லைத்தீவில் சேவையாற்றும் அரசாங்க மருத்துவர்கள் மிகவும் களைப்படைந்துள்ளதாக ஐ.சி.ஆர்.சி தெரிவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்குச் சேவையாற்றி வரும் அரசாங்க மருத்துவர்கள் மிகவும் களைப்படைந்துள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருக்கின்றது.
இந்தப் பகுதியில் இடம்பெறும் போரினால் காயமடையும் ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சையளிப்பதற்குத் தேவையான மருந்துகள் இல்லாது உள்ளதுதான் தாம் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினையாக உள்ளது எனவும் செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப் பகுதியில் இருந்து தரைவழியாக வெளியேறும் மக்களுக்கு பணியாற்றுவதற்கு தாம் விரும்புவதாகவும், இருந்தபோதிலும் அதற்கான அனுமதி தமக்குக் கிடைக்கவில்லை எனவும் செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டிருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியில் உள்ள ஒரு சிறிய பகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ள செஞ்சிலுவைச் சங்கம் அவர்களின் வாழ்க்கை ஆபத்தானதாகவே உள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இந்தப் பகுதியுடன் தரைவழியான தொடர்புகள் எதுவும் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இல்லாமையால் கடல்வழியாக மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்டு வருகின்றது.
வாராந்தம் இரண்டு அல்லது மூன்று தடவைகளில் 400 அல்லது 500 பேர்களாக கப்பல்கள் மூலம் நோயாளிகள், வயதானவர்கள் மற்றும் மோசமான நிலையில் காயமடைந்தவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆதரவுடன் வெளியேற்றப்படுகின்றனர்.
"இங்குள்ள நிலைமைகள் மிகவும் மோசமானதாக உள்ளது" எனக் குறிப்பிடும் செஞ்சிலுவைச் சங்கத்தின் முக்கிய பணியாளரான போல் கஸ்ட்டலா, "தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இங்குள்ள மருத்துவ வசதிகள் போதுமானதாக இல்லை" எனவும் தெரிவித்தார்.
"சுகாதார அமைச்சைச் சேர்ந்த மருத்துவர்கள் இப்போதும் இங்கு பணிபுரிகின்றார்கள்" எனக் குறிப்பிடும் அவர், "இந்த மருத்துவர்கள் மாதக்கணக்காக இரவு-பகலாக எந்தவிதமான இடைவெளியும் இல்லாமல் பணிபுரிவதால் மிகவும் களைப்படைந்து விட்டனர். அத்துடன் மருந்துப் பொருட்களின் விநியோகமும் மிகவும் குறைவாகவே இருக்கின்றது" எனத் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment