மக்களின் உண்மையான பிரச்சினையில் ஆர்ப்பாட்டக்காரருக்கு அக்கறையில்லை
தமிழ் நாட்டிலும் ஐரோப்பாவின் சில நாடுகளிலும் இலங்கையின் இனப் பிரச்சினையை மையமாகக் கொண்ட ஆர்ப்பாட்டங்கள் அண்மைக் காலமாக நடந்து வருகின்றன. புலிகளுக்கு எதிராக அரச படையினர் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம்.
இலங்கைத் தமிழர் மீதுள்ள அக்கறை இந்த ஆர்ப்பாட்டங்களுக்கான அடிப்படையாக இருக்குமானால் பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்துவது தான் நியாயமானது. ஆனால் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கை. தமிழ் நாட்டில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் தொப்புழ்கொடி உறவு பற்றிப் பேசுகின்றார்கள். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களே ஐரோப்பிய நாடுகளில் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள். இவர்களுக்கும் தொப்புழ்கொடி உறவு. ஆனால் இந்தத் தொப்புழ் கொடி உறவு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் சிறிதளவாவது அக்கறை செலுத்தவில்லை.
அரச படையினர் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த நாட்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவில்லை. புலிகள் கிளிநொச்சியை இழந்தபின் அவர்களுக்குத் தோல்வி நிச்சயம் என்ற நிலையிலேயே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறத் தொடங்கின. இந்தச் சந்தர்ப்பத்தில் யுத்தநிறுத்தம் கோருவது புலிகளின் தோல்வியைத் தவிர்ப்பதற்கான முயற்சி. தமிழ் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காகவே தாங்கள் குரல் கொடுப்பதாக இவர்கள் கூறுகின்ற போதிலும் உண்மையான நோக்கம் இறுதியில் வெளிப்பட்டுவிட்டது.
பிரபாகரன் மீது ஒரு துரும்பு பட்டாலும் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று வைகோ சில தினங்களுக்கு முன் பேசினார். தமிழ் மக்களுக்கு ஏதும் நடந்தாவ் இரத்த ஆறு ஊடும் என்று இவர் கூறவில்லை. ஆர்ப்பாட்டக்காரரின் ஒரே நோக்கம் புலிகளைக் காப்பாற்றுவதே என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
புலிகள் தங்களைக் காப்பாற்றுவதற்காக மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகின்றார்கள். மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்குத் தடைவிதிக்கிறார்கள். தடையை மீறி வெளியறுவோர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றார்கள். இது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை. இதுதான் இன்று வன்னியில் சிக்கியிருக்கும் மக்களின் உண்மையான பிரச்சினை. இந்தப் பிரச்சினை பற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒருபோதும் பேசவில்லை. விடுதலைப் புலிகளின் தலைவரும் ஏனையோரும் நிலப்பரப்பு முழுவதையும் இழந்து அரசாங்கத்தின் பாதுகாப்பு வலயத்துக்குள் மனிதக் கேடயங்களின் பின்னால் மறைந்திருக்கும் நிலையிலேயே ஆர்ப்பாட்டங்கள் சூடு பிடிக்கின்றன. இரத்த ஆறு ஓடும் என்கிறார் வைகோ.
வைகோ சிறந்த பேச்சாளர். மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் வகையில் பேசக் கூடியவர். அதே போல, புத்திசாலித்தனமான பேச்சாளர். ஜெயலலிதா மேடையில் இருக்கின்ற வேளைகளில் புலிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தையேனும் அவர் பேசுவதில்லை. வைகோவின் பேச்சுகளை மக்கள் பெரிதாக எடுபதுமில்லை.
சந்திரசேகர் மிகக் குறுகிய காலம் இந்தியாவின் பிரதமராகப் பதவி விகித்தார். அந்த அரசாங்கம் தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக்கழக மாநில அரசை ‘டிஸ்மிஸ்’ செய்தது. தமிழ்நாட்டில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு மாநில அரசு இடமளிக்கின்றது என்பதே அதற்குச் சொல்லப்பட்ட காரணம். அக்காலத்தில் வைகோ திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தார். கழக அரசில் கைவைத்தால் தமிழ் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று பேசினார். எந்த ஆறும் ஓடவில்லை.
தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு உண்மையாகவே இலங்கைத் தமிழர்கள் மீது கரிசனை உண்டென்றால் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியது விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே.
இனப் பிரச்சினை இன்றைய மோசமான பரிமாணத்தைப் பெற்றதற்குப் புலிகளே காரணம். சமஷ்டி அடிப்படையிலான தீர்வைக் குழப்பியவர்கள் இவர்களே. அரசியல் தீர்வு முயற்சிகளுக்குப் புலிகள் தடையாகச் செயற்பட்டதாலேயே இன்றைய அளவுக்கு இனப் பிரச்சினை வளர்ந்தது.
இப்போது வன்னியில் மோதல் பிரதேசத்தில் சிக்கியிருக்கும் மக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்துபவர்களும் புலிகளே. இவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக மக்களை மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைத்திருப்பதாலேயே மக்கள் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர்.
Thinakaran
0 விமர்சனங்கள்:
Post a Comment