யுத்த பொறிக்குள் சிக்கியுள்ள மக்களை இலங்கை பாதுகாக்க வேண்டும்
புலிகளுடனான இலங்கைப் படையினரின் யுத்தத்தால் சிக்குண்டுள்ள ஆயிரக்கணக்கான பொது மக்களை பாதுகாக்குமாறு அமெரிக்கா கோரியுள்ளது.
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார செயலாளர் பாலித்த கோஹன தெற்காசியாவுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் பௌச்சருடன் வெள்ளியன்று பேச்சுவார்தை மேற்கொண்ட போதே அவர் இக்கோரிக்கையை விடுத்ததாகஅமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித் துள்ளது.
திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையின் வட பகுதியில் யுத்தப் பொறிக்குள் சிக்கியுள்ள பொது மக்களின் துயரங்கள் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக பௌச்சர் தெரிவித்தார். எனவே பொது மக்களை பாதுகாக்குமாறு அவர் வெளி விவகாரச்செயலாளர் கோஹனவிடம் கோரிக்கை விடுத்தார். அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்டுள்ள யுத்த சூனியப் பிரதேசத்திற்குள் 100,000 பொது மக்கள் பொறிக்குள் அகப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் கணிப்பீடு தெரிவிக்கிறது. இதனை அண்மித்த இலங்கைப் படையினர் நிலைகொண்டுள்ளனர்.
இலங்கை தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் இவ்வாரம் பௌச்சர் சந்தித்தார் இந்த அமைப்புகள் இலங்கை பிரச்சினையில் உலகநாடுகளின் தலையீட்டை வற்புறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் ஈஸ்டர் வார விடுமுறையில் இருப்பதால் கோஹண அவரை சந்திக்க மாட்டார் என ராஜாங்கத் தினைக்களம் தெரிவித்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment