புலிகளின் இறுதியானதும் உறுதியானதும் தளமாக இருந்து வந்த புதுக்குடியிருப்பு படையினர் வசம்!!
புலிகளின் முக்கிய தளபதிகளான தீபன், ரூபன், நாகேஸ், கடாபி, விதுஷா, துர்க்கா மற்றும் கமலினி உட்பட 250ற்கும் மேற்பட்ட புலிகள் நேற்றிரவு உயிரிழப்பு!!!
முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு கிழக்குப் பிரதேசத்தில் நேற்றிரவு படையினருக்கும் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற உக்கிர மோதலில் புலிகள் தரப்பில் 250ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகமையம் அறிவித்துள்ளது. இந்த மோதல் சம்பவத்தின்போது புலிகளின் மிக முக்கிய பொறுப்பாளர்களாகக் கருதப்படும் களமுனைத் தளபதி தீபன், ரூபன், நாகேஸ், கடாபி, விதுஷா, துர்க்கா மற்றும் கமலினி ஆகியோர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் கடாபி புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக முன்னர் செயற்பட்டு வந்தவரென்பது குறிப்பிடத்தக்கது. புலிகளின் இறுதியானதும் உறுதியானதும் தளமாக இருந்து வந்த முல்லைத்தீவு புதுக்குடியிருப்பின் முழுக்கட்டுப்பாட்டையும் இன்றுகாலையில் படையினர் தம்வசப்படுத்தியுள்ளனர். இராணுவத்தின் 53வது படைப்பிரிவு, எட்டாவது அதிரடிப்படையணி, இராணுவத்தின் 58வது படைப்பிரிவு ஆகியன இந்த தாக்குதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தன. இதன்போது பெருந்தொகையான ஆயுதங்களும் வெடிபொருட்களும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்பிரதேசத்திலிருந்து 120ற்கும் மேற்பட்ட புலிகளின் சடலங்களை படையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த முதலாம் திகதி முதல் புதுக்குடியிருப்பில் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின் போது இன்றுவரை 400ற்கும் மேற்பட்ட புலிகள் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு புலிகளின் தரப்பில் பொட்டம்மான், தீபன், பானு ஆகியோர் தலைமை தாங்கியிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்போது பானுவுக்கு கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment