ஆஸி.யில் தமிழர்கள் நடத்திய வாகனப் பேரணி மீது தாக்குதல்! சிங்களவர் குழு இடைமறித்து அடாவடி! ஐவர் காயம்!!
இலங்கையில் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, அவுஸ்திரேலியாவில், மெல்பேர்ண் நகரில், புலம் பெயர் தமிழ் மக்கள் நடத்திய வாகனப்பேரணி மீது, அங்குள்ள சிங்களவர் குழு ஒன்று தாக்குதல் நடத்தி அடாவடித்தனம் புரிந்தது.
அந்தத் தாக்குதலின் போது தமிழ் மக்கள் ஐவர் படுகாயம் அடைந்தனர்; ஏழு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.வாகனங்களை தடுத்து இடைநிறுத்தி அவற்றுக்குள் இருந்த தமிழ்மக்கள் தாக்கப்பட்டனர்.
பேரணி மெல்பேர்ண் நகரின் ஊடாகச் சென்று கொண்டிருந்த போது திடீரென சிங்களவர் குழுவின் தாக்குதலுக்கு இலக்கானது.விக்டோறியா நாடாளுமன்றக் கட்டடத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தக் குழுமியிருந்த சிங்களவர்களே இத் தாக் குதலை நடத்தினர்.
பேரணியில் சென்று கொண்டிருந்த தமிழர்களின் வாகனங்களை இடைமறித்து நகரவிடாமல் நிறுத்திவிட்டு அவற்றின் மீது கூட்டம் கூட்டமாக ஏறி தடிகள் பொல்லுகளால் சிங்களவர் குழு ஒன்று அகோரமாகத் தாக்கத்தொடங்கினர். தமிழீழத் தேசியக் கொடிகளை பறித்து கிழித்து கால்களில் போட்டு மிதித்தனர். பதாகைகளை பறித்து கிழித்து எறிந்தனர். ஊர்தியின் கதவுகளை திறந்து, உள்ளே இருந்தவர்களை தாக்கி அவர்கள் மீது காறியும் உமிழ்ந்தனர்.
தேசியக் கொடியை பறிக்கும்போது அதனை தரமறுத்த தமிழர்களை சிங்களவர்கள், கைகளை ஊர்தியின் ஜன்னலுடன் றூசர்த்து வைத்து தாக்கினர்.தமிழர்களின் ஒளிப்படக் கருவிகளும் பறித்து உடைக்கப்பட்டன.
இந்தச் சரமாரியான தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட பல தமிழர்கள் காயங்களுக்கு உள்ளாகினர். 5 தமிழர்கள் கடும் இரத்தக்காயங்களுக்கு உள்ளாகினர். அவர்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக நோயாளர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தமிழர்களின் சுமார் 7க்கும் அதிகமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டன.
அவுஸ்திரேலிய காவல்துறையினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தம்மாலான சகல நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டனர்.
பிற்பகல் 4:30 நிமிடமளவில் பேரணி சென்று றூசருவதற்கு திட்டமிட்டப்பட்டிருந்த இடத்தை சென்றடைந்தது.
தமிழ் இளையோர் அமைப்பினால் நேற்று சனிக்கிழமை வாகனப் பேரணி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஏற்கனவே காவல்துறையினரிடம் அனுமதி பெறப்பட்டதன் பிரகாரம் தமிழ் மக்களின் வாகனப் பேரணி திட்டமிடப்பட்ட வீதிகளின் ஊடாக அமைதியாக சென்று கொண்டிருந்தது. அப்போதே அங்கு வந்த சிங்களவர் குழு ஒன்று தாக்குதல் நடத்தியது.
இப்பேரணியின் ஒர் அங்கமாக மெல்பேர்ண் வான்பரப்பில் "சிறிலங்காவே தமிழ் மக்களை கொல்வதை நிறுத்து" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகை வானுர்தியும் பறப்பில் விடப்பட்டது.






0 விமர்சனங்கள்:
Post a Comment