கூட்டமைப்புத் தலைவர்கள் பாதுகாப்புக்காக வேறு இடங்களில் வாழ்வது சரியென்றால் வன்னி மக்களுக்கு மாத்திரம் ஏன் தடை?
மார்ச் 26ந் திகதி ஜனாதிபதி தமிழ்க் கட்சிகளினதும் முஸ்லிம் கட்சிகளினதும் பிரதிநிதிகளைச் சந்தித்துச் சமகால அரசியல் நிலை பற்றிப் பேசினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கு பற்றவில்லை. ஜனாதிபதி விடுத்த அழைப்பை அவர்கள் நிராகரித்துவிட்டார்கள்.
மார்ச் 26 பிற்பகல் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு வெளிவரவில்லை. அன்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டிலேயே ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கும் முடிவு வெளியிடப்பட்டது. அதுவரை ஊடகங்களில் பல ஊகங்கள் வெளியாகின. சாதகமாகவே முடிவு இருக்கும் என்று சில கூட்டமைப்பு எம்.பிக்கள் தனிப்பட்ட முறையில் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் என்ற அபிப்பிராயம் பரவலாக நிலவியது.
பேச்சுவார்த்தையில் பங்கு பற்றுவதற்குக் கூட்டமைப்பு எம்.பிக்களில் பலர் விரும்பியபோதிலும் கடைசி நேரத்தில் கிடைத்த உத்தரவு அவர்களின் முடிவை மாற்றிவிட்டது என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது.
மிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பை நிராகரித்திருப்பது பெரும்பாலான அரசியல் நோக்கர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. சுயமாக முடிவெடுக்கும் நிலையில் இவர்கள் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை.
எவ்வாறாயினும், தமிழ் மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு வந்தவர்கள் என்ற வகையில் இவர்களின் நிராகரிப்பு தொடர்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் கேள்விகள் எழுவது நியாயமானதே.
தற்கால அரசியல் நிலை பற்றிப் பேசுவதற்கென்று ஜனாதிபதி அழைத்திருந்தார். இனப் பிரச்சினை பற்றிப் பேசாமல் அரசியல் நிலை பற்றிப் பேசுவதற்காக அழைத்திருக்கின்றார் என்பதும் நிராகரிப்புக்குச் சொல்லப்பட்ட ஒரு காரணம். இனப்பிரச்சினையின் தீர்வு தற்கால அரசியல் நிலை என்ற வரையறைக்குள் வராது என்று கூட்டமைப்பினர் கருதுகின்றார்கள் போல் தெரிகின்றது. இனப் பிரச்சினையே ஒரு அரசியல் பிரச்சினைதான். அப்படியிருக்க அதன் தீர்வு எப்படி அரசியலாகாமலிருக்க முடியும்?
வன்னியில் மோதல் நடைபெறும் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களின் அவலத்தைப் போக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் அழைப்பை நிராகரிப்பதற்குச் சொல்லப்பட்ட இன்னொரு காரணம்.
இம்மக்களின் அவலத்துக்கு யார் காரணம் என்பது பிரதானமான கேள்வி. யுத்தப் பிரதேசத்திலிருந்து மக்கள் வெளியேறுவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வது எல்லா நாடுகளும் பின்பற்றும் நடைமுறை. மோதல் பகுதியிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு எல்லா விதத்திலும் உதவுவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வந்திருக்கின்றது.
அரசாங்கத்தின் ஏற்பாட்டுக்கு அமைய மக்கள் வெளியேறினால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்க முடியும். ஆனால் புலிகள் அம் மக்களை வெளியேற அனுமதிக்கின்றார்களில்லை. மக்களின் அவலத்துக்கு இதுவே காரணம். இதைப் பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் எதுவும் பேசுவதில்லை.
பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் பிரதேசத்திலிருந்து வெளியேறும்படி அம்மக்களுக்குக் கூறும் உரிமை எவருக்கும் இல்லை என்றார் சம்பந்தன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் எல்லோரும் தங்கள் சொந்தப் பிரதேசங்களிலேயே வாழ்கின்றார்களா? சொந்தப் பாதுகாப்புக்காக அவர்கள் தங்கள் பிரதேசங்களிலிருந்து வெளியேறி வேறு பிரதேசங்களிலும் வேறு நாடுகளிலும் வாழ்வது சரியென்றால் வன்னி மக்களுக்கு அந்த உரிமை இல்லையா? இம் மக்கள் பாதுகாப்புக்காக வெளியேறித் தற்காலிகமாக வேறு இடங்களில் வாழ்வதற்கு ஏன் தடை விதிக்கவேண்டும்?
தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து புலிகள் எல்லோரையும் வெளியேற்றினார்கள். அப்போது இந்தத் தலைவர்கள் எதுவும் பேசவில்லை. பாரம்பரிய பிரதேசத்திலிருந்து மக்களை வெளியேறச் சொல்லும் உரிமை எவருக்கும் கிடையாது என்று இப்போது நியாயம் பேசுகின்றார்கள்.
மக்களுக்குத் தலைமைதாங்குபவர்கள் அந்த மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படவேண்டும். வன்னியில் சிக்கியிருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறிப் பாதுகாப்பாக இருப்பதையே விரும்புகின்றார்கள். ஆனால் புலிகள் அவர்களை வெளியேற விடுகின்றார்களில்லை. மறைவாக வெளியேறுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகின்றார்கள்.
கூட்டமைப்பினர் இந்த மக்களுக்காகப் பேசவில்லை. புலிகளுக்காகப் பேசுகின்றார்கள். மக்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் புலிகளுக்கு விடுப்பதற்குப் பதிலாக யுத்தநிறுத்தம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்துக்கு விடுக்கின்றார்கள்.
யுத்தநிறுத்தம் சாத்தியமில்லை என்பது இப்போதாவது கூட்டமைப்புத் தலைவர்களுக்கு விளங்கியிருக்க வேண்டும். அரசாங்கம் யுத்தத்தின் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. வெற்றி கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும்போது எந்த அரசாங்கமும் யுத்தநிறுத்தம் செய்வதற்கு முன்வராது. மேலும் கடந்த யுத்தநிறுத்தங்களைப் புலிகள் தங்களைப் பலப்படுத்துவதற்கே பயன்படுத்தியிருக்கின்றார்கள். இந்தக் கசப்பான அனுபவமும் அரசாங்கத்துக்கு உண்டு.
இந்த நிலையில் மக்களின் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிக் கூட்டமைப்பு தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். நடக்க முடியாத யுத்தநிறுத்தம் பற்றிப் பேசிக்கொண்டு காலத்தைக் கழிப்பதால் மக்களுக்கு விமோசனம் இல்லை.
மக்களுக்காகப் பேசுவதானால், மக்கள் வெளியேறுவதற்குப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும். ஆக்கபூர்வமான அரசியல் தீர்வு முயற்சியில் ஈடுபடவேண்டும்.
அதைவிட்டு, அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நிராகரிப்பதும் சாத்தியமற்ற யுத்தநிறுத்தம் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதும் மக்களுக்கோ புலிகளுக்கோ நன்மை பயக்கப்போவதில்லை.
அதிகாரம் இல்லாத தலைவர்
அண்மையில் ஒரு நாள் புன்னகைக்கும் ரணிலின் படத்துடனான போஸ்டர்கள் கொழும்பு நகரின் சுவர்களில் காணப்பட்டன. 'எங்கள் தலைவர்- ஒரே தலைவர்' என்ற வாசகம் அதில் இருந்தது.
ரணிலுக்குச் 'சிரேஷ்ட தலைவர்' என்ற பட்டத்தைச் சூட்டிப் பொம்மைத் தலைவராக வைத்திருப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அவர் முறியடித்த வெற்றியின் வெளிப்பாடே அந்தப் போஸ்டர்கள்.
கட்சி யாப்பின்படி முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் செயற் குழுவுக்கே உண்டு. அதனால்தான் ரணிலுக்கு 1திராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து வாக்கெடுப்பு நடத்துவதற்குப் பாராளுமன்றக் குழுவினால் முடியாமற்போனது.
ஐக்கிய தேசியக் கட்சி யாப்பின்படி செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதில்லை. கட்சித் தலைவரால் நியமிக்கப்படுவார்கள். ரணில் நியமித்தவர்களே செயற் குழுவில் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் ரணிலின் ஆதரவாளர்கள் ரணிலைப் பொம்மைத் தலைவராக மேல்மாடிக்குத் தள்ளும் முயற்சி செயற் குழுவில் தோல்வியடைந்ததற்கு இதுவே காரணம். எனினும் ரணிலுக்கு எதிரான அலை பெரிதாக இருந்ததால் முழுமையாக அவரைக் காப்பாற்ற முடியவில்லை. கட்சித் தலைவர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டார். ஆனால் பிரதான அதிகாரங்கள் இல்லை.
கட்சியின் தவிசாளரையும் பொதுச் செயலாளரையும் பொருளாளரையும் நியமிக்கும் அதிகாரம் மாத்திரமே இப்போது ரணிலுக்கு உண்டு. அரசியல் விடயங்கள் தொடர்பான அதிகாரம். கரு ஜயசூரியவுக்குப் போய்விட்டது. அரசியல் விவகாரக் குழுவே இனிமேல் செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும்.
தற்போதைய செயற்குழு இந்த வருடம் முடியும் வரை பதவியில் இருக்கும். இந்தக் காலத்துக்குள் ஏதேனுமொரு வழியில் ரணில் எல்லா அதிகாரங்களையும் பெற்றுவிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றார்கள்.
ரணிலின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர் காலி மாவட்ட எம்.பி. வஜிர அபேவர்த்தன. ரணிலுக்கு ஆதரவாக செயற்குழுவில் அவர் தெரிவித்த ஒரு கருத்து ஆழ்ந்த கவனத்துக்குரியது. சிறுபான்மையினரின் வாக்குகளை வென்றெடுக்கக்கூடிய ஒரே தலைவர் ரணில் என்று அவர் கூறினார்.
ரணில் உண்மையிலேயே சிறுபான்மையினரின் நலனில் அக்கறை உள்ளவரென்றால் இனப் பிரச்சினை இதுவரையில் தீர்ந்திருக்கும். சிறுபான்மையினரின் நலனிலோ இனப் பிரச்சினையின் தீர்விலோ தனக்கு அக்கறை இல்லை என்பதை அவர் பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத்திட்ட விடயத்தில் நிரூபித்துவிட்டார். அந்தத் தீர்வுத்திட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு அளித்திருந்தால் இனப்பிரச்சினை அப்போதே தீர்ந்திருக்கும். அது நியாயமான தீர்வாகவும் இருந்திருக்கும்.
இனப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் ஐக்கிய தேசியக் கட்சி எந்தக் காலத்திலும் சரியான நிலைப்பாட்டை எடுத்ததில்லை. அதிலும் ரணில் வெவ்வேறு கட்டங்களில் மோசமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றார். கறுப்பு யூலையின்போது தமிழ்க் கடைகள் எரிக்கப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக் கூறினார். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உடனடி முன்னுரிமை பெறவேண்டியது என்ற கருத்தைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வேறொரு சந்தர்ப்பத்தில் கூறினார்.
இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கட்சியின் திட்டத்தை எந்தக் காலத்திலும் முன்வைக்காத ஒரேயொரு தேசியக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியே என்பதையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.
மனோ கணேசன்
ஐக்கிய தேசியக் கட்சி சிறுபான்மையினரின் நண்பன் என்ற மாயையைத் தோற்றுவித்தவர்கள் தமிழ்த் தலைவர்கள். பாரம்பரிய தமிழ்த் தலைவர்கள் வர்க்க நலனைப் பேணுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியைச் சிறுபான்மையினரின் நண்பன் எனச் சித்தரித்து வந்திருக்கின்றார்கள். தமிழ் மக்களின் பெயரால் எத்தனையோ போராட்டங்களை நடத்திய இத் தமிழ்த் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலங்களில் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தாததற்கு வர்க்க நலனுக்கு அவர்கள் அளித்த முக்கியத்துவமே காரணம்.
இப்போது மனோ கணேசன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளனாகக் களத்தில் நிற்கிறார். இனப் பிரச்சினையின் தீர்வுக்கு ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஒரு திட்டமும் இல்லாதது போலவே மனோ கணேசனின் கட்சியிடமும் ஒரு திட்டமும் இல்லை. ஆனால் இரண்டு கட்சிகளும் இனப்பிரச்சினையைப் பற்றிப் பேசி வாக்குச் சேகரிக்க முயற்சிக்கின்றன.
ஜனாதிபதியின் அழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்ததைப் பற்றி ஐக்கிய தேசியக் கட்சி எதுவும் பேசவில்லை. ஆனால் மனோ கணேசன் வரவேற்றிருக்கின்றார். மாற்று யோசனைகளை அரசு முன்வைக்காத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பை நிராகரித்தது சரி என்கிறார் அவர். இந்த இடத்தில் தான் உதைக்கின்றது.
எந்த யோசனைக்கு மாற்று யோசனை? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏதாவது யோசனையை முன்வைத்திருந்தால் மாற்று யோசனை பற்றிக் கூறுவதில் அர்த்தம் உண்டு. தனிநாட்டுக்கு மாற்று யோசனையா? அரசியல் தீர்வே தங்கள் நிலைப்பாடு என்று கூட்டமைப்புத் தலைவர்கள் அடிக்கடி கூறும்போது மனோ கணேசன் அவர்களைத் தனிநாட்டு வட்டத்துக்குள் வலிந்து தள்ளுகின்றாரா?
இருபது வருடங்களுக்கு முன் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட மாகாண சபையை எப்படி ஏற்பது என்ற கேள்வியையும் மனோ கணேசன் எழுப்புகின்றார். இருபது வருடங்களுக்கு முன் தமிழ் மக்கள் மாகாண சபையை நிராகரித்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் போன்ற தலைவர்களால் வழிநடத்தப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மக்கள் மாகாண சபைத் தேர்தலில் வாக்களித்து மாகாண சபை நிர்வாகத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். மாகாண சபையைப் புலிகள் தான் நிராகரித்தார்கள்.
எவ்வாறாயினும், மாகாண சபையை ஏற்க முடியாதென்றால் இன்றைய நிலையில் ஏற்கக்கூடிய தீர்வு என்ன என்பதையும் சொல்லத்தானே வேண்டும்.
Thinakaran






0 விமர்சனங்கள்:
Post a Comment