பின்வாங்குகிறார் பிரபாகரன்: இலங்கை ராணுவம்
தங்களை ராணுவம் சுற்றிவளைத்துவிட்டதை அறிந்துள்ள விடுதலைப் புலி தலைவர்கள் பிரபாகரனும், பொட்டு அம்மானும் எதிர்த்து சண்டையிடாமல் பின்வாங்குகிறார்கள் என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியில் ராணுவம் நெருங்கும் தொலைவில்தான் பிரபாகரனும், பொட்டு அம்மானும் பதுங்கியுள்ளனர். பிரபாகரன் பயன்படுத்திய குண்டு துளைக்காத வாகனத்தை ராணுவம் கைப்பற்றிவிட்டது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாக அந்நாட்டு அரசு தரப்பு வானொலி தெரிவித்துள்ளது.
ஆனால் பிரபாகரன்தான் பதுங்கியுள்ளார். பொட்டு அம்மான் புலிகளை வழிநடத்தி ராணுவத்துக்கு எதிரான நேரடித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை ராணுவத்தின் பிரிகேடியர் சில்வா தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் தப்ப முடியாது-கருணா:பிரபாகரன் எந்த நாட்டுக்கும் தப்பித்து ஓடிவிட முடியாது. ஏனென்றால் அவருக்கு எந்த ஒரு நாடும் அடைக்கலம் கொடுக்காது. இந்தியாவுக்கு தப்பிக்க முயன்றால் அவர் அங்கு வைத்து கைது செய்யப்படுவார் என்று விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணா தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் வன்னிப் பகுதியில் மறைந்திருந்த போது அவர் ஒரு பதுங்கு குழியில் இருந்து மற்றொரு பதுங்கு குழிக்கு மாறுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்போது புதுக்குடியிருப்பு பகுதியிலும் அதே பாணியை கடைப்பிடிக்கிறார்.
அவர் இருக்கும் இடம் ராணுவத்துக்கு தெரிந்து அவரை நெருங்கிவிட்டது. இதனால் அவரால் எங்கும் தப்பித்து சென்றிட முடியாது என்று ஈழ மக்களின் ஜனநாயக முன்னணி கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
முன்னதாக, அரசினால் பாதுகாப்பான பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் பிரபாகரனும், அவரது மகன் சார்லஸ் அந்தோனியும் பதுங்கியிருப்பதாக இலங்கை ராணுவம் தெரிவித்திருந்தது.
மக்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள்:போரினால் பாதுகாப்பான பகுதியில் தஞ்சம் அடைந்த மக்கள் மீது ராணுவமும், புலிகளும் தாக்குதல் நடத்தக்கூடாது. மக்களை பாதுகாப்பது இருதரப்பின் கடமை என்று ஐக்கிய நாட்டு சபை தெரிவித்துள்ளது.
வன்னிப் பகுதியில் அப்பாவி மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது. இது வருந்தத்தக்கது என்றும் ஐ.நா. சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் தெரிவித்தார்.
-Dinamani






0 விமர்சனங்கள்:
Post a Comment