மோதல் நிறுத்தத்துக்கு ஐ.நா. வலியுறுத்து: இலங்கை விரைகிறார் ஹோல்ம்ஸ்
இலங்கையில் தொடர்ந்துவரும் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. மோதல்கள் நிறுத்தப்பட்டு மோதல் வலயங்களில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டுமெனவும் அது கோரிக்கை விடுத்துள்ளது.
மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்ஸ் கொழும்புக்கு வரவுள்ளார்.
இவர் இன்று சனிக்கிழமை இலங்கையை நோக்கிப் புறப்படுவார் என பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
“இரண்டு தரப்பும் மோதல்களை சமாதான முறையில் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்” என ஜோன் ஹோல்ம்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
“விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக ஒழிக்கப்பட்டாலும், உடனடியாகத் தேவைப்படும் அரசியல் தீர்வுக்கு அது ஒரு சிறந்த வழியாக அமையாது” என ஹோல்ம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைதி வழியிலான தீர்வொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதே அனைவரது விருப்பமாகவும் அமைந்துள்ளது என ஜோன் ஹோல்ம்ஸ் பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் மோதல்கள் நடைபெற்றுவரும் பகுதிகளுக்கு ஐக்கிய நாடுகள் மனிதநேயக் குழுவொன்றை அனுப்பப் போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன் கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தார். இந்த மனிதநேயக் குழுவை மோதல் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்ல அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், பாதுகாப்பு வலயத்தில் சிக்குண்டிருக்கும் மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டிருப்பதால் மனிதநேயப் பணியாளர்களை அங்கு செல்ல அனுமதிக்க முடியாது என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment