மோதல்கள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும்: வெள்ளைமாளிகை கோரிக்கை
விடுதலைப் புலிகள் மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கும் அமெரிக்க வெள்ளை மாளிகை, இராணுவ ரீதியாக இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கைகளை எடுத்துள்ளபோதும் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
இரண்டு தரப்பாலும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களைக் கவனத்தில் கொண்டிருப்பதாக ஜனாதிபதியாகப் பராக் ஒபாமா பதவியேற்ற பின்னர் முதன் முதலில் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் வெள்ளைமாளிகை இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
“எதிர்ப்புக்களும், வன்முறைகளும் நீடித்து தற்பொழுது காணப்படும் நிலைமை தொடர்ந்தால் நிலைமை மிகவும் மோசமடைந்து பாரிய அழிவுக்குச் சென்றுவிடும்” என வெள்ளைமாளிகையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்து, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு இரண்டு தரப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளைமாளிகை கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், பாதுகாப்பு வலயங்களுக்குள் தாக்குதல் நடத்துவதை இலங்கை அரசாங்கம் நிறுவத்துவதுடன், அந்தப் பகுதிகளுக்குள் மனிதநேயப் பணியாளர்கள் சென்றுவருவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் வெள்ளைமாளிகை கோரியுள்ளது.
இலங்கை மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே, இலங்கைப் பிரச்சினை குறித்து அமெரிக்க வெள்ளைமாளிகையும் தனியான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மூன்று மாதங்களில் 6,500 பேர் பலி: ஐ.நா.
இதேவேளை, இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் 6,500 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அறிக்கையிட்டிருப்பதாக சர்வதேச செய்திச் சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் 13,946ற்கும் அதிகமான மக்கள் காயமடைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த இழப்பு விபரங்களைப் பகிரங்கப்படுத்த ஐ.நா. மறுத்துவிட்டதாக அந்தச் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment