பிரபாகரன் நீர்மூழ்கியில் தப்பியோட இருப்பதாக தயா மாஸ்ரர் தெரிவிப்பு
புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஊடகப்பேச்சாளராகிய தயாமாஸ்ரர் மற்றும் புலிகள் இயக்கத்தின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் ஆகிய இருவரும் கடந்த வாரம் அரசபடையினரிடம் வந்து சரணடைந்திருந்தனர். இவர்களிடம் பாதுகாப்புத்துறை தரப்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது புலிகள் இயக்கத்தினதும் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டம்மான், சூசை போன்ற உயர்மட்டத் தலைவர்களினதும் செயற்பாடுகள் பற்றியும் திட்டங்கள் பற்றியும் பல்வேறு முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்தவகையில் தயாமாஸ்ரர் இராணுவ விசாரணைகளின் போது தெரிவித்துள்ள முக்கிய தகவல்களுக்கேற்ப தற்போது அரசபடையினரால் சுமார் எட்டு சதுரகிலோ மீற்றர் குறுகிய பிரதேசத்துக்குள்ளேயே பிரபாகரனும் பொட்டு அம்மான், சூசை போன்ற உயர்மட்டத் தலைவர்களும் உறுதியான நிலக்கீழ்பதுங்கு குழிநிலையங்களில் தங்கியிருப்பதாகவும் இவர்கள் அங்கிருந்து தப்பியோடுவதற்கான ஒத்த தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தரைமார்க்கமாக இவர்கள் முற்றாகப் படையினரால் இடைவெளியின்றி சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் நிலையிலும் தரைவழியாக அவர்கள் தப்பி வேறு பிரதேசமே இல்லாத நிலையிலும் கடல்மார்க்கமாகத் தப்பிச் செல்வதற்கான வாய்ப்பையே பிரபாகரன் எதிர்பார்த்திருப்பதாகவும் இதற்காக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் மூலம் வேறு நாட்டுக்கு தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதுபற்றி தயாமாஸ்ரர் மேலும் தெரிவித்த இயக்க இரகசியங்கள் பற்றி இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்படும் தகவல்களில் இவ்வாறு பிரபாகரனும் தலைவர்களும் தப்பிச்செல்லவிருக்கும் நீர்மூழ்கி சுமார் 20 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய சிறிய நீர்மூழ்கிப்படகு எனவும் இது ஏற்கனவே புலிகள் இயக்க கடற்படைப்பிரிவினால் தயாரிக்கப்பட்டு தற்போது யுத்தத் தாக்குதலற்ற பிரதேசமாக இருக்கும் புது மாத்தளன் பகுதிக்குத் தெற்கே கடலோரப் பிரதேசத்தில் இரகசியமான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தயாமாஸ்ரர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாதுகாப்புப் பிரதேசத்துக்குள் அரச படையினர் பெரும் தாக்குதல்களை மேற்கொள்ளாத காரணத்தாலேயே அப்பிரதேசத்துக்குள் வாழும் மக்களுக்கிடையே பிரபாகரனும் ஏனைய தலைவர்களும் மறைந்து உயிர்தப்பியிருப்பதாகவும் ஆயினும் அப்பிரதேசத்தைக் கைப்பற்ற அரச படையினர் தீர்க்கமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பிரபாகரனும் பொட்டு அம்மான், சூசை, சுவர்ணம் போன்ற உயர்மட்டத் தலைவர்களும் அரச படையினரால் கொல்லப்படவோ அல்லது உயிருடன் பிடிக்கப்படவோ முடியும் எனவும் இதனால் பாதுகாப்புப் பிரதேசமாக உள்ள அப்பகுதியைக் கைப்பற்ற அரசபடையினர் இறுதித் தாக்குதல்களைத் தொடங்கினால் அங்கிருந்து உடனே பிரபாகரனும் தலைவர்களும் தப்பியோட வேண்டும் அல்லது சயனைற் உட்கொண்டு தற்கொலை செய்ய வேண்டும் அல்லது தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரிழக்க வேண்டும் எனவும் தயாமாஸ்ரரிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் பிரபாகரன் இராணுவத்தினரால் இறுதித் தாக்குதல் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இராணுவத்துக்கு எதிராகப் போராடுவார் என்பது சாத்தியமில்லை எனவும் அந்த இறுதிக் கட்ட நிலையில் ஏற்கனவே தயாரித்து மறைத்து வைக்கப்பட்டிருக்கும் நீர்மூழ்கி மூலம் அங்கிருந்து வேறு ஒரு இடத்துக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ தப்பிச்செல்வதே அவர்களின் திட்டம் எனத் தயாமாஸ்ரர் இராணுவ விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
இதில் குறித்த சுயதயாரிப்பாகிய நீர்மூழ்கி மூலம் பிரபாகரனும் தலைவர்களும் வெளிநாட்டுக்குத் தப்பியோடும் சாத்தியம் மிகக்குறைவே ஆகும். ஏனெனில் அந்த நீர்மூழ்கி மூலம் அருகிலுள்ள இந்தியாவுக்குச் செல்ல கடலுக்குக் கீழ் மார்க்கமாக நீண்டதூரம் பயணம் செய்யவேண்டும். அந்த அளவுக்கு பிரபாகரனின் நீர்மூழ்கி தொடர்ந்து இயங்க முடியாது. அத்துடன் குறித்த நீர்மூழ்கி மூலம் பெருங்கடல் பகுதிக்குச் செல்வதற்கோ அல்லது அங்கிருந்து அவர்களைக் காப்பாற்றக் கூடிய வேறு கப்பல் ஒன்றை அடைவதற்கோ சாத்தியப்படும் வகையில் பிரபாகரனின் நீர்மூழ்கி இயங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவேதான் அரச படையினர் பாதுகாப்புப் பிரதேசத்தைக் கைப்பற்ற இறுதி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது பிரபாகரன் குறித்த நீர்மூழ்கி மூலம் அங்கிருந்து வேறு அருகிலுள்ள ஒரு பிரதேசத்தில் போய் இறங்கமுடியுமே அன்றி நாட்டை விட்டுத்தப்பியோட முடியாது.
தயாமாஸ்ரர் இவ்வாறு பிரபாகரனும் பொட்டுஅம்மான்,சூசை மற்றும் தலைவர்களும் நீர்மூழ்கியில் தப்பியோடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருப்பதுபற்றி இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகளுக்கேற்ப அண்மைக்கால இராணுவ நடவடிக்கைகளின்போது புலிகள் இயக்கத்தின் கைவிடப்பட்ட பிரதேசங்களில் சிறிய அளவிலான நீர்மூழ்கிக் கப்பல்கள் படையினரால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் எனவே புலிகள் இயக்கத்தினரால் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரித்து வந்துள்ளதாகவும் அவ்வாறான நீர்மூழ்கி ஒன்றின் மூலம் பிரபாகரன் இறுதிக் கட்டத்தில் தப்பியோடத் திட்டமிட்டிருப்பதாகவும் தயாமாஸ்ரர் கூறுவதில் உண்மை இருக்கலாம் என பாதுகாப்புத்துறை புலனாய்வுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பிரபாகரனும், பொட்டுஅம்மானும், சூசையும் நீர்மூழ்கிமூலம் எங்கே தப்பிச்செல்லத் திட்டமிட்டுள்ளார்கள் என்பது பற்றியோ இதற்குப் பின்னணியில் வெளிநாட்டு உதவி ஏதேனும் இருப்பதுபற்றியோ தயாமாஸ்ரரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தகவல்கள் பெறப்படவில்லை.மேலும் தயாமாஸ்ரர் பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை மற்றும் சில உயர்மட்டத்தலைவர்கள் பற்றி மட்டுமே தகவல்களை வெளியிட்டிருப்பதிலிருந்தும் பிரபாகரனின் மனைவி, மகன்சாள்ஸ் அன்ரனி,மகள் பற்றிய தகவல்களை வெளியிடாதபட்சத்திலும் அவர்கள் தற்போது நாட்டைவிட்டுத் தப்பியோடி வேறு நாடுகளில் வசிப்பதாக முன்னர் வெளியான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவப்புலனாய்வுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்தவகையில் தற்போது பிரபாகரனின் மனைவி,மகள், மகன் ஆகியோர் தென்னாபிரிக்காவுக்குச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும் மற்றும் ஜோர்ஜ், தயாமாஸ்ரர் இராணுவப்புலனாய்வு விசாரணைகளில் தெரிவித்துள்ள தகவல்களிலிருந்து பிரபாகரனும் பொட்டுஅம்மான், சூசை ஆகியோரும் இப்பொழுது பாதுகாப்புப் பிரதேசத்தில்தான் பதுங்கியிருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு பிரபாகரனது நெருங்கிய சகாக்களாக இருந்தவர்கள் இவ்வாறு பிரபாகரன் பற்றியும் அவரது இருப்பிடம் மற்றும் திட்டங்கள் பற்றியும் இராணுவத்தினருக்குத் தகவல் தருவது இதுவே முதற்தடவை எனவும் தொடர்ந்தும் பிரபாகரனின் வேறு நெருங்கிய நபர்களும் அரசாங்கத்திடம் விரைவில் சரணடையக்கூடும் எனவும் பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய பாதுகாப்பு விமர்சனங்களின் கருத்துக்களுக்கேற்ப இவ்வாறு உலகில் அதிக பலமான பயங்கரவாத அமைப்பு ஒன்றை யுத்தத்தில் முற்றாக முறியடித்து ஒழித்துக் கட்டிய வரலாறு சிறிலங்காவிலேயே முதல் நிகழ்ந்திருப்பதாகவும் தற்போது அரசபடையினரின் இராணுவப்பலம் உச்சகட்டத்திலிருக்கும் நிலையில் பாதுகாப்புப் பிரதேசத்திற்குள் படையினர் இராணுவ தீவிர நடவடிக்கைகளை தொடங்கினால் ஒரு சில நாட்களுக்குள் உலகில் தரைப்படை, கடற்படை, விமானப்படை என அனைத்துதாக்குதல் சக்தியும் பெற்றிருந்த ஒரேயொரு பயங்கரவாத அமைப்பின் தலைவராகிய பிரபாகரனின் முடிவு தெரிந்துவிடும்.
லங்காதீப: செய்தியும் விமர்சனமும் 26/4/2009
Thinakural
0 விமர்சனங்கள்:
Post a Comment